Saturday 29 October 2011

மீண்டும் பதவி உயர்வு!

அப்போது.... 

                   அந்த மெமோவை பார்த்தவுடன் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. "எழுத்தர் இந்த வழக்கில் செக்சனை குறைத்து  பதிவு செய்துள்ளார். எனவே வழக்கை உதவி ஆய்வாளர் மறு விசாரணை செய்து  விசாரணை அறிக்கையுடன் எழுத்தருடைய சமாதானமும் இணைத்து அனுப்பவும்" என்று அந்த மெமோவில் குறிப்பு எழுதி இருந்தது. ஏற்கெனவே ஏட்டையா எனது முதல் தகவல் அறிக்கை கிடைத்தவுடன் அந்த ஊருக்கு போய் விசாரித்துவிட்டார். அதனால் சரியான செக்சன்தான் போடப்பட்டுள்ளது என்றும் எதிரி வாதியின் வீட்டிற்குள் நுழைந்ததற்கு ஒரு செக்சன், கம்பால் எதிரியை அடித்ததற்கு ஒரு செக்சன், பணத்தை திருடியதற்கு ஒரு செக்சன் போடப்பட்டுள்ளது. அதனால் எழுத்தர் மீது தவறேதுமில்லை" என்று பதில் அறிக்கை எழுதினார். 

                     ஒரு வாரம் கழித்து இன்ஸ்பெக்டர் காவல்நிலையம் வந்தார். ஆனாலும் இன்ஸ்பெக்டர் சமாதானம் அடையாமல் தலைமை காவலர் திரு.ராஜா அவர்களை தன்னுடன் அழைத்து கொண்டு அங்கே அந்த ஊருக்கு சென்று அவர்கள் இருவரும் நேரடியாக விசாரணை நடத்தினர். ஊர் தலையாரியும் சம்மந்தப்பட்ட பெண்ணும் நடந்தவைகளை இவர்களிடம் கூறினார். இன்ஸ்பெக்டருக்கு மிகவும் ஆச்சர்யம். "இந்த எழுத்தர் ராமசாமி எல்லா செக்சனையும் மிகவும் சரியாக குறிப்பிட்டு வழக்கு பதிந்திருக்கிறாரே" என்று தலைமை காவலரிடம் தெரிவித்துவிட்டு காவல்நிலையம் வந்து என்னையும் பாராட்டிவிட்டு சென்றார்.

குலதெய்வம் கோயில்!

                            மற்றொரு சமயம் காவல்நிலையத்தில் குற்ற பதிவேட்டை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுஒரு வருடத்திற்கு முன் விஜயாச்சம்பாடு என்ற ஊரில் இலங்காமணி சாஸ்த்தா கோயிலில் சாமியின் தங்க நகை திருடுபோயுள்ளது. அது கண்டுபிடிக்காமல் இருந்தது. எனது குலதெய்வம் கோயில் இருக்கும் ஊர் பற்றி அம்மா என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார்கள். அதுதான் இலங்காமணி சாஸ்தா கோயில் என்ற ஞாபகம் வந்தது. எனது தங்கைக்கும் அதன் நினைவாகத்தான் இலங்காமணி பாப்பா என்று பெருட்டிருக்கிரார்கள்.  தான் நான் தேடிக்கொண்டிருந்த எங்கள் குலதெய்வம் கோயில் இதுதான் என்பதை தெரிந்துகொண்டு அம்மாவிற்கும் அண்ணன் தம்பி எல்லோருக்கும் தெரிவித்தேன். எல்லோரும் ரொம்ப சந்தோசப்பட்டார்கள்.


                   விஜயனாரயனதிலிருக்கும்போது தூத்துக்குடியில் மாமன் மகள் பஞ்சவர்ணத்திற்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வந்தது. உடனே நானும் மனைவியும் அண்ணன் மகன் சேகரையும் கூட்டிக்கொண்டு அம்மாவுடன் தூத்துக்குடிக்கு போனோம். அங்கே பஞ்சவர்ணமும் அவள் கணவர் திரு  நயினார் அண்ணனும்   என்னிடம்  குழந்தைக்கு  பெயர்  வைக்குமாறு கூறினார். குழந்தையை பார்த்துவிட்டு ராமன்துறை பெண்ணின் நினைவாக அந்த குழந்தைக்கு "ரோஸ்மேரி" என்று பெயர் வைத்தேன். இரண்டு நாள் இருந்துவிட்டு விஜயநாராயணம் வந்தோம்.


மீண்டும் பதவி உயர்வு!
                 
                   ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்தைந்து டிசம்பரில் தலைமை காவலர் தேர்வு நடந்தது. அதில் நான் கலந்துகொள்ள எல்லா தகுதியும் பெற்றிருந்தேன். இந்த தேர்வுகளில் சரியான பரிச்சயம் இல்லாததால் இதில் தேர்ச்சி பெறுவேனா என்று பயந்தேன். "குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு பரிக்ஷை எழுதுங்கள். நிச்சயமாக நீங்கள் பாஸ் செய்துவிடுவீர்கள்" என்றுஅம்மாவும்,மனைவியும் சொன்னார்கள். அதுபோலவே நான் என் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு தேர்வில் கலந்துகொண்டேன். ஒரு வாரத்தில் பதில் தெரிந்தது. நான் மாவட்டத்திலேயே முதலாவதாக பாசானேன். பத்து நாட்களில் போஸ்டிங் ஆர்டர் வந்துவிட்டது. எனக்கு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு தலைமைகாவலராக  பதவி உயர்வு ஆர்டர் வந்துவிட்டது.

                   சாத்தான்குளம் வந்து அங்குதிரு டி.எ.செல்லப்பா தலைமை காவலரை மாற்றினேன்.உதவி ஆய்வாளர் திரு துரைசாமி அவர்களை சந்தித்து மரியாதை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். திரு செல்லப்பா அவர்கள்  என்னை தனது உடன் பிறந்த சகோதரனைப்போல் நினைத்து அந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பதினெட்டு கிராமங்களைபற்றியும் அங்கு யார் யார் எதிரிகளை கண்டுபிடிப்பதில் நமக்கு உதவியாக இருப்பார்கள் என்பதைப் பற்றியும் தெளிவாக சொன்னார். அவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கு மாறுதலாகி  சென்றார் . (பின்னாளில் இவருடைய ஒரே மகன்  முனியசாமி தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பேராசிரியர் திரு பாலசுப்ரமணியம் அவர்களுடைய மகள் படிப்பில் மிகவும் திறமையான ஜோதிநிர்மலாவை திருமணம் செய்துகொண்டார். இப்பொழுது திருமதி ஜோதிநிர்மலா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.)

                           திருச்செந்தூர் சென்று ஆய்வாளர்  திரு நடராஜன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். சாத்தான்குளத்தில் எனக்கு காவலர் குடிஇருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. இரண்டுநாட்கள் லீவு எடுத்துகொண்டு ஊரில் போய் அம்மாவையும் மனைவியையும் அழைத்துவந்தேன். 

                        ஒருநாள் நான் அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்தேன். மனைவி கோபமாகவும் என்னிடம் பேசாமலும் இருந்தாள். எனக்கு சாப்பாடும் எடுத்து வைக்கவில்லை. அம்மாதான் சாப்பாடு எடுத்து வைத்தார்கள். சாப்பிட்டுவிட்டு மனைவியிடம் "ஏன் கோபமாக இருக்கிறாய்?" என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு ஒரு லெட்டரை என்மேல் விசி எறிந்தாள். லெட்டரை படித்துப்பார்த்தேன். ராமன்துறை ரோஸ்மேரி இடமிருந்து வந்திருக்கிறது. அதில் "மணமகள் என் கடிதத்தை படித்துவிட்டாளா?  நான்  ஒன்றும் தவறாக  எழுதவில்லையே!" என்று எழுதியிருந்தாள். உடனே "என்னிடம் எதையும் மறைக்கவேண்டாம். அத்தை  எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டார்கள்.இனிமேல் இப்படி ஒரு லெட்டர் வரக்கூடாது" என்று சொல்லி என் கையில் இருந்த லெட்டரை வெடுக்கென்று பிடுங்கி சுக்கு நூறாக கிழித்து போட்டாள். இரவு முழுவதும் தூங்கவில்லை. காலையில்  அவளை சமாதானப்படுத்தி இனிமேல் லெட்டர் வராது என்று சொல்லிவிட்டேன். கொஞ்சம் சமாதானமானாள். 

                அடிக்கடி திருசெந்தூர் கோர்ட்டுக்கு போகும்போதெல்லாம் மனைவியின் தாய்மாமன் திரு கோபால் அவர்களின் பிறை என்று சொல்லப்பட்ட அவர்களுடைய ஆபிசுக்கு சென்று அவர்களின் நலம் விசாரித்து வருவேன். திருசெந்தூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.ஐ.துரைராஜ் அவர்களை சந்தித்து அறிவுரைகள் பெறுவேன். மிகவும் நல்லவர். ஒரு வருடம் நல்லபடியாக பணி செய்துவந்தேன்.

அம்பாசமுத்திரம் மாறுதல் 
               
                   திடீரென்று  அம்பாசமுத்திரம் மாற்றல் ஆர்டர்  வந்தது. அன்று பங்குனி உத்திரம் என்பதால் அம்மா, மனைவி எல்லோரும் குலதெய்வம் இலங்காமணி சாஸ்தா கோவிலுக்கு போய் குலதெய்வத்தை வணங்கிவிட்டு வந்தோம். அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம்.

                  மறுநாள் மாறுதல் உத்தரவை பெற்று ஆறுமுகநேரி போய் மனைவியை அவள் அம்மா வீட்டில் விட்டுவிட்டு தூத்துக்குடி போய் சித்தப்பாவிடம் சொல்லிவிட்டு அம்மாவை அண்ணன் லெட்சுமணன் வீட்டில் விட்டுவிட்டு ஏழு நாட்கள் லீவையும் முடித்து அம்பாசமுத்திரம் சென்றேன். அங்கு திரு. குளத்து ஐயர் உதவி ஆய்வாளர் அவர்களிடம் பணிக்கு ஆஜரானேன். அங்கு மேலும் மூன்று தலைமை காவலர்கள் இருந்தார்கள். அவர்கள் திருவாளர்கள் ஆதினம், ராஜாராம் நாயுடு, ஜானி பாய் ஆகியோர். உதவி ஆய்வாளர் அவர்களிடம் அறிவுரைகள் பெற்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர் திரு வேலப்பன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். தலைமை காவலர்கள் மூவரும் நல்லவர்கள். அவர்கள் என்னிடம் நன்றாக பழகினார்கள்.

                அம்பாசமுத்திரம் தெப்பகுளம் தெருவில் வாடகைக்கு வீடுபார்த்தேன். இரண்டு நாட்கள் லீவு எடுத்து ஊருக்கு  போய் அம்மாவையும், மனைவியையும்   அழைத்துவந்தேன். மனைவியை அழைத்து வந்தேன்.
                                                                                 அப்போது ......

2 comments:

  1. From Keerthana..........
    To Thaatts..............

    don't type more your hand and shoulder will pain. Type only 100 waords per day.

    takeare of your health. don't go for a walk in the early morning. you can walk in the evening.

    ambuduthein.

    - Keerthana

    ReplyDelete
  2. Dear Appa!
    I request you to kindly keep in mind the words of keerthana!

    ReplyDelete