Saturday 5 November 2011

அம்பாசமுத்திரத்தில் வாழ்க்கை!

அப்போது....
                   
                          என் மனைவி ஆறு மாதம்  கர்ப்பமாகயிருந்தாள். எனக்கு  மிகவும் சந்தோசமாக இருந்தது. மனைவியை நல்லமுறையில் கவனித்து கொண்டேன். என் அம்மாவும் நன்றாக கவனித்து கொண்டார்கள். 

இறந்த குழந்தை!

                          அந்த தெருவில் கோர்ட்டில் அமீனாவாக வேலைபார்த்த திரு சாமிநாதன் அவர்கள் குடும்பத்துடன் வசித்துவந்தார். அவர் மனைவி சொந்த ஊர் நாங்குநேரி. அவர் எங்களிடம் மிகவும் அன்பாகவும் இருப்பார்கள். அவர் மனைவி திருமதி அம்மாகுட்டி, குழந்தைகள் வரதன் மற்றுமொரு குட்டிபையன் இருந்தான். அவர் ஒரு தூரத்து சொந்தமானதால் என் மனைவியை தன் சொந்த மகளாகவும் என்னை மருமகனாகவுமே எண்ணி பழகினார். ஆகையால் எங்களுக்கு ரொம்ப  உதவியாக இருந்தது.

                               சிறிது நாளில் என்மனைவிக்கு ஏழாவது மாதத்தில் குறைபிரசவமானது. குழந்தை இறந்தே பிறந்தது. நான் மிகவும் வேதனைப்பட்டேன். என் மனைவி மிகவும் பாதிக்கப்பட்டாள். மனதளவிலும் உடலளவிலும். ஊரிலிருந்து மனைவியின் அம்மா, அப்பா எல்லோரும் வந்தார்கள். எனது மாமியார் பத்து நாட்கள் கூடவேஇருந்தார்கள். அவர்கள் ஊருக்கு போகும்போது வேறு வீடு  பார்க்கும்படி சொல்லிவிட்டு சென்றார்கள். உடனே ஒரு வாரத்தில் பெரியகுளம் தெருவில் திரு சிவனு ஏட்டய்யா அவர்கள் வீட்டில் ஒரு பகுதியை வாடகைக்கு தந்தார்கள். அந்த வீடு நல்ல வசதியாக இருந்தது. 

கடமை உணர்வு!

                                  1967 ஜூன் மாதம் குற்றாலம் சீசன் பாதுகாப்பு அலுவலுக்கு அனுப்பினார்கள். அந்த சமயம் அம்மாவும் ஊருக்கு போய்விட்டதால் மனைவியையும் என்னுடன் குற்றாலத்திற்கு அழைத்து சென்றேன். அங்கு காவலர்கள் தங்குவதற்கு ஒரு மடத்தை ஏற்பாடு செய்திருந்தார்கள். மனைவியுடன் அந்த மடத்திலேயே தங்கி இருந்தோம். மற்றும் சில காவலர்களும் குடும்பத்தினர்களுடன் வந்திருந்தார்கள்.அவர்களும் அந்த மடத்திலேயே தங்கி இருந்தார்கள். பதினைந்து நாட்கள் அங்கு டுட்டி என்பதால் இரண்டு நாட்கள் கழித்து ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கலாம் என்று மனைவி சொன்னதால் ஒரு லாட்ஜுக்கு சென்று  தங்கினோம். 

மறதி!

                ஒருநாள் சிற்றருவியில் குளித்துவிட்டு காவல்நிலையம் பக்கமாக வந்து கொண்டிருந்தோம். அன்று எனக்கு பாதுகாப்பு பணிக்கு வந்துள்ள காவலர்களுக்கு பணி நியமனம் செய்ய வேண்டிய டுட்டி. ஆகையால் மனைவியை சற்று ரோட்டோரமாக "நில்லு நான் காவல்நிலையம் சென்று யார்யாருக்கு என்ன பணி நியமிக்கவேண்டும் என்று எனது உதவியாளர் காவலருக்கு சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு காவல்நிலையம் சென்றேன்.

                              அங்கு காவலர்கள் கூட்டமாக நின்று பணி நியமனத்திற்கு முண்டியடித்து  கொண்டிருந்தார்கள். அப்பால் அவர்களை சமாதானப்படுத்தி வரிசையாக டுட்டி நியமியுங்கள் என்று சொல்லிகொண்டிருந்தேன். ரோட்டோரமாக தண்ணீர் சொட்ட சொட்ட நெடுநேரமாக நின்றுகொண்டிருந்த என் மனைவியை ஒரு காவலர் பார்த்துவிட்டு என்னிடம் வந்து சொன்னார். அப்பொழுதுதான் அவளை அங்கே நிறுத்திவிட்டு வந்தது நினைவுக்கு வந்தது. உடனே எனது அசிஸ்டன்ட் காவலரை டுட்டி நியமிக்க சொல்லிவிட்டு ஓடி வந்தேன். மனைவியிடம் "சாரி" சொல்லிவிட்டு லாட்ஜிக்கு வந்தோம். பதினைந்து நாட்கள் டுட்டி முடிந்து அம்பாசமுத்திரம் வந்தோம்.

சுற்றுலா செல்லும் குழந்தைகள்!

                            ஒருநாள் பிரம்மதேசம் என்ற ஊரில்  தூத்துக்குடியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் குடும்பத்துடன் மணிமுத்தாறு  அணையை பார்க்க பள்ளி குழந்தைகளை அழைத்து செல்கிறோம். நீங்களும்  வாருங்கள் போய் வரலாம் என்று சொன்னார். மனைவியும் விரும்பியதால் சரி என்று சொன்னேன். அவர்களை டூர் அனுப்பிவிட்டு "நீங்கள் மணிமுத்தார் போங்கள் நான் மத்தியானம் காவல்நிலையத்தில் சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன்" என்று சொல்லியனுப்பினேன். ஆனால் காவல்நிலையம் சென்றவுடன் அங்கிருந்த சூழ்நிலையில் மணிமுத்தார் போகவேண்டு மென்பதையே மறந்துவிட்டேன். அங்கு கஜானா பாதுகாப்பு பணியிலிருந்த தலைமைக்காவலர் திரு ஆதினம் அவர்களை மாற்றி நான் பாதுகாப்பு பணியிலிருக்க  வேண்டியதாகிவிட்டது. மத்தியானம் சாப்பாட்டைஓட்டலில் வாங்கிவரச்சொல்லி சாப்பிட்டேன்.

                              மாலையில் பணி மாற்றப்பட்டு வீட்டிற்கு போனபோதுதான் மனைவி டூர் போய் வந்தாள். அப்பொழுதுதான் அவள் டூர் போனதே நினைவுக்கு வந்தது. கோபமாக ஒரு முறை முறைத்து பார்த்தாள். சமாதானம் சொல்லி சமாளித்தேன். இதெல்லாம் எனது ஞாபகசக்தி மறதியினால் அல்ல. வேலையில் அக்கறையும்,கடமை உணர்வும்தான். நான் காவல் நிலையத்திற்கு வந்துவிட்டால் வீட்டு ஞாபகம் என்பதே எனக்கு இருந்ததில்லை.

                              மேலும் என் மனைவி சொன்னாள் "பள்ளிக்குழந்தைகளை டீச்சர்கள் கவனிப்பதேயில்லை. அதுகள் இஸ்டத்திற்கு ஆபத்தான இடங்களுக்கும் போய்விடுகிறது. அதை யாரும் கவனிப்பதுமில்லை கண்டிப்பதுமில்லை" என்று சொல்லி மிகவும் வருத்தப்பட்டாள். அந்த பயம் இப்பொழுதும்  இருப்பதால் நாங்கள் எங்கள் குழந்தைகளை அவர்கள் பள்ளி படிப்பை முடிக்கும் வரை டூர் அனுப்பியதே கிடையாது.

தங்கைக்கு முதல் குழந்தை!


                               அம்பாசமுத்திரத்தில் இருந்த போது ஒருநாள் தங்கை பாப்பாவுக்கு பெண்  குழந்தை பிறந்ததாக தகவல் வந்தது. நானும் எனது மனைவியும் பார்த்து விட்டு வருவதற்காக சென்றோம். அந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டுமென்று கூறினார்கள்.
                                                                               அப்போது.......

No comments:

Post a Comment