Monday 14 November 2011

சினிமா படப்பிடிப்பு!

அப்போது...

                        தலையில் எந்த அடியும் படவில்லை. என்ன ஆச்சர்யம் அவன் விழுந்த அந்த இடத்தில் அந்த பாறை சற்று கீழே அமுங்கி இருந்தது. அதுபோல குழந்தையும் சிறிது நேரத்திலேயே சிரித்து விளையாட ஆரம்பித்தான். இறைவனுக்கு நன்றி.

மீண்டும் பதவி உயர்வு !


                           1969 ஜனுவரியில் எனக்கு மீண்டும் தலைமைக்காவலர் பதவி உயர்வு வந்தது. இப்பொழுது நான்  புளியரையில் அரிசி கடத்துபவர்களை கண்காணிக்கும் தணிக்கை சாவடிக்கு மாற்றப்பட்டேன். மாறுதல்  ஆர்டர் கிடைத்த மறுநாளே ஆய்வாளர் திரு விஜயரமசந்திரன் அவர்களிடம் அறிவுரைகள் பெற்று ஊருக்கு புறப்பட்டேன். ஆறுமுகநேரி போய் பணியில் சேருவதற்காக வழங்கும் விடுப்பு (Joining Time leave) ஏழு  நாட்களையும் ஆறுமுகநேரியிலும்,மீளவிட்டானிலும் கழித்துவிட்டு நான்மட்டும் புளியரைக்கு சென்றேன். அங்கு பணியில் சேர்ந்ததும் புளியரை மலைக்குகைக்குள் ரயில் செல்லும் பாதை (Tunnel Check post) ஆரம்பிக்கும் இடத்தில் மலைக்காட்டுக்குள் ஒரு ஓலை செட்டு அமைத்து அரிசியை கேராளாவுக்கு கடத்துபவர்களை கண்காணிக்கவேண்டும். என்னுடன் காவலர்கள் வெங்கட்ராமன், கோதண்டராமன், பிச்சையா தேவர் ஆகியோரும் இருந்தார்கள். அவ்வப்போது சிவில் சப்ளை சி.ஐ.டி. ஆய்வாளர் திரு ஹென்றி பாண்டியன் அவர்கள் எங்களை செக் செய்ய வருவார்கள். அரிசி கடத்துபவர்கள்
இரவில் மலைமேல் கரடு முரடான வழியாகத்தான் கடத்துவார்கள். 

                     புளியரையில் திரு சுப்பையா தேவர் அவர்களுக்கு சொந்தமான வீட்டின் ஒரு பகுதியில் வீடு பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் லீவு எடுத்துக்கொண்டு ஊரில் போய் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு வீட்டு உபயோகத்திற்கு வேண்டிய கொஞ்சம் பொருட்களையும் எடுத்துக்கொண்டு வந்தோம். 

செக் போஸ்ட் வேலை!  
                   
                     ஒருநாள் காவலர் பிச்சையா தேவரை செக் போஸ்டில் வைத்துவிட்டு நானும், காவலர்கள் வெங்கட்ராமன், கோதண்டராமன் ஆகியோர் மலை உச்சிக்கு போய் இரவு ஒரு மணிக்கு பதுங்கி இருந்தோம். காவலர் கோதண்டராமன் ஒரு பீடிபிரியர் புகை பிடிக்காமல் இருக்கமாட்டார். இந்த பீடிப்புகை வாசனையை உணர்ந்தே கடத்தல்காரர்கள் ஓடிவிடுவார்கள். அன்றும் அதைப்போல் ஓடிவிட்டனர்.அவர்கள் கொண்டுவந்த அரிசி மூட்டைகளை ஆங்கங்கே போட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டனர்.              


பிடிபட்ட அரிசி மூட்டைகள்!

                                   விடியும்வரை மலையிலேயே காத்திருந்துவிட்டு காலையில் புளியரைக்கு போய் கூலியாட்களை அழைத்துவந்து அரிசிமூட்டைகளை அந்த மலையின் செடி கொடிகளுகிடையில் தேடி எடுத்தோம். ஏழு சிறு மூட்டைகள்தான் கிடைத்தது. அவைகளை எடுத்துவந்து கோர்ட்டுக்கு அறிக்கை தயார்செய்து செங்கோட்டை கோர்ட்டுக்கு கொண்டுபோனோம்.கனம் கோர்ட்டார் அவர்கள் "ஏன் கைதிகளை பிடிக்கவில்லை" என்று கேட்டார். இரவு நேரமானதாலும் மலையுச்சி செடிகொடிகள் நிறைந்த காடு என்பதாலும் அவர்கள் தப்பிவிடுகிறார்கள். என்று சொன்னேன். உடனே கோர்ட்டார் அவர்கள் என்னை சிறிது நேரம் உற்று கவனித்தார். திடீரென்று எழுந்து அவர் அறைக்கு சென்று விட்டார். 

                               சற்று நேரத்தில் மதிய இடைவேளையின் போது கோர்ட் சேவகர் வந்து "உங்களை ஐயா அழைக்கிறார். வாருங்கள்" என்று அழைத்தார். கணம் நீதிபதி ஐயா அவர்கள் எதற்காக என்னை அழைக்க வேண்டும் என்று குழப்பமாக இருந்தது. கோர்ட் சேவகரை வருகிறேன் போங்கள் என்று அனுப்பிவிட்டு குழப்பமாக அவரை சென்று பார்த்தேன்.

நீதிபதி  ஐயா!

                     அப்போது அவர் " நீர் புதுக்கடையில் இருந்த ராமசாமி தானே! என்னை தெரியவில்லையா ? என்று கேட்டார்.  அப்போதுதான் எனக்கு தெரிந்தது. குழித்துறை கோர்ட்டில் இணையம் புத்தன்துறை வழக்கில் எதிரிகளுக்காக வாதாடிய வக்கீல் திரு தியாகராஜன் என்பது தெரிந்தது. "ஆ! ஐயா!  நீங்களா! எப்போது நீதிபதியானீர்கள்?"  என்றேன்.  உடனேயே என்னை உட்காரவைத்து புதுக்கடை SI சங்கரபாண்டியன் மற்றும் ஆய்வாளர் பாலகிருஸ்ணன் நாயர் ஆகியோர்களை நலம் விசாரித்தார். அப்பால் அரிசி மூடைகளை ஒப்படைத்துவிட்டு புளியரைக்கு வந்தேன். 

சினிமா படப்பிடிப்பு!

                    ஒரு நாள் புளியரை ரயில் நிலையத்தில் சினிமா படபிடிப்பு நடக்கிறதாம் போய் பார்ப்போமே என்று என் மனைவி கூறினாள். சரி என்று குழந்தையை எடுத்துகொண்டு  புளியரை ரயில் நிலையம் போனோம். அங்கே இந்தி நடிகை ஹேமமாலினி நடித்த ஒரு இந்தி படப்பிடிப்பை பார்த்தோம். தெரிந்த போலீஸ்காரர்கள்  உதவியுடன் மிகவும் அருகில் நின்று படப்பிடிப்பை ரசித்துக்கொண்டிருந்தோம்.  எனது குழந்தையை பார்த்த நடிகை ஹேமமாலினி அருகில் வந்தார் குழந்தையை தூக்க முயற்சித்தார்.  அவன் போகவில்லை .  அன்று வீட்டுக்கு வந்தவுடன் என் மனைவி எல்லோரிடமும் அதை சொல்லி சொல்லி பெருமை பட்டுக்கொண்டிருந்தாள்.

                      அன்று மலையில் செங்கோட்டை அருகிலுள்ள திருமலை குமாரசாமி கோயிலுக்கு போனோம். எனது இரண்டு வயது மகன் முத்துகுமரன் அப்போதெல்லாம் கோவிலை சுற்றி வருவதென்றால் அவன் மிகவும் வேகமாக "முருகா! முருகா!" என்று சொல்லிக்கொண்டே  தத்தித்தத்தி நடந்து கோவிலை சுற்றி வருவான். கர்ப்பகிரகத்தில் சாமிக்கு மகன் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு வந்தோம்.

புதிய குழப்பம்!.
                      மறுநாள் நான் டூட்டி முடிந்து வீட்டுக்கு வந்தேன் அப்பொழுது ஏன் மனைவி சொன்னாள். ஒரு காவலர் திருநெல்வேலி மாவட்ட தனிபிரிவில் இருந்து வந்ததாகவும் தனிப்பிரிவு ஆய்வாளர் திரு விஜயராமச்சந்திரன் அவர்கள் உடனேயே என்னை வரச்சொன்னதாக சொல்லிவிட்டு சென்றதாக சொன்னாள். என்ன விஷயம் என்று சொல்ல வில்லை . அன்று இரவு முழுதும் தூக்கமே இல்லை . ஒரு வேளை அம்பாசமுத்திரம் சர்க்கிள் ஆபீசில் நாம் எழுத்தராக இருக்கும்போது  பதிவேட்டில் ஏதேனும் தப்பு நடந்து விட்டதோ என்றெல்லாம் நினைத்து வருந்திகொண்டிருந்தேன். அப்பொழுது என் மனைவி எல்லாம் நன்மைக்காகத்தான் இருக்கும். கவலைப்படாதீர்கள் என்று சொன்னாள் காலையில் முதல் பஸ்ஸில் திருநெல்வேலி புறப்பட்டேன். திருநெல்வேலி தனிப்பிரிவு அலுவலகம் சென்று ஆய்வாளர் திரு விஜயராமச்சந்திரன் அவர்களை சந்தித்தேன்.

                                                                                                                 அப்போது..........

No comments:

Post a Comment