Friday 2 December 2011

திருச்செந்தூர் மாற்றம்!

அப்போது .....

நான் பயத்துடனே அவர்களை சந்தித்தேன். அவர்கள் முதலில் என்னை  நலம் விசாரித்தார்கள். பிறகு என்னிடம் "நீ  தனிப்பிரிவு தலைமை காவலராக வந்துவிடு. உன்னை திருசெந்தூர் மாற்றுகிறேன்" என்று சொன்னார்கள். "அய்யா!  ரொம்ப  சந்தோசம். தங்களது பொறுப்பின் கீழ் வேலை செய்ய நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்" என்று சொல்லிவிட்டு சந்தோசமாக புளியரை வந்தேன். மனைவியிடம் சொன்னவுடன் அவளுக்கு நம் ஊர் பக்கத்திலேயே மாறுதல் கிடைப்பது பற்றி  ரொம்ப சந்தோசம். 

                    ஒரு வாரத்தில் மாறுதல் ஆர்டர் வந்தது. மாறுதல் ஆர்டர் கிடைத்த மறுநாளே புளியரையிலிருந்து ரிலிவானேன்.பெட்டி படுக்கையெல்லாம் கொஞ்சம்தான். எல்லாம் எடுத்துக்கொண்டு பஸ்சிலேயே புறப்பட்டோம்.  ஆறுமுகநேரி வந்து இரண்டு நாட்கள் இருந்துவிட்டு அப்பால் தூத்துக்குடிக்கு போனேன். சித்தி, சித்தப்பா எல்லோரிடமும் சொல்லிவிட்டு மீளவிட்டான்  போய் அம்மா, அண்ணன் ராமர், லக்ஷ்மணன் எல்லோரிடமும் சொல்லி விட்டு இரவு தங்கினேன். ஏழு நாட்கள் லீவு முடிந்து திருசெந்தூர் வந்து உதவி ஆய்வாளர் திரு தாமஸ் மாசில்லாமணி அவர்களிடம் ஆஜராகி பணிக்கு ரிப்போர்ட் செய்துகொண்டேன். ஆய்வாளர் திரு R.S.பாண்டியன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். இவர் கொஞ்சம் கறாரான ஆபிசர்.சில நேரம் அதிகாரிகளை ஏடாகூடமாக பேசிவிடுவார். 

                    அப்பொழுது சர்க்கிள் ரைட்டராக அம்மன்புரம் புதுகுடியை சேர்ந்த திரு சண்முகவேலு என்பவர் இருந்தார். நான் வேலூரில்  காவலர் பயிற்சியில் இருக்கும்போது இவர் என்னுடன் பயிற்சியில் இருந்தார். அப்பொழுது நல்ல பழக்கம். மேலும் எனது அக்காள் திருமதி சண்முகக்கனியின் கணவர் திரு முனியசாமி அவர்களின் நெருங்கிய உறவினர் . ஆய்வாளர் அவர்கள் என்னை காவல் நிலையத்தில் ரைட்டராக இருக்கும்படி உத்தரவிட்டார்கள் . அதன்படி தலைமைக்காவலர் ரைட்டராக பணியாற்றினேன் . ஒரு மாதம் கழித்து  சர்க்கிள் ரைட்டர் சண்முகவேல் ஆய்வாளரிடம் லீவு கேட்டுள்ளார். மாதாந்திர குற்றகூட்டம் முடிந்தபின் லீவில் போ என்று ஆய்வாளர் சொல்லியுள்ளார். காவல் நிலையத்திலேயே ரைட்டருக்குத்தான் அதிக பொறுப்பு. அதனால்தான் சர்க்கிள் தலைமையிடத்து காவல் நிலையங்களில் தலமைகாவலர்களை ரைட்டராக நியமிப்பார்கள். காவலர்களுக்கு சம்பளம் கொடுப்பது பணபதிவேடு எழுதுவது எல்லாம் ரைட்டர்தான் செய்யவேண்டும். சர்க்கிள் ரைட்டருக்கு சம்பளம் கொடுத்து விடாதே. மாதாந்திர குற்றகூடம் முடித்தபின் கொடு என்று ஆய்வாளர் அவர்கள் என்னிடம் சொல்லிருந்தார். ஆனால் சர்க்கிள் ரைட்டர் முன்னாடியே சம்பளத்தை ஆய்வாளர் வாங்கிக் கொள்ளசொன்னார் என்று தவறாக சொல்லி சம்பளத்தை வாங்கிசென்றுவிட்டார். அதற்காக ஆய்வாளர் என்னை மிகவும் கடிந்துகொண்டார்.நானும் சர்க்கிள் ரைட்டரை காட்டிக் கொடுக்காமல் மவுனமாக இருந்துவிட்டேன்..

தாரங்கதார கெமிக்கல் கம்பெனி பிரச்சனை:


                       ஆறுமுகநேரி சாகுபுரம் தாரங்கதாரா கெமிக்கல் கம்பெனியில் 1969 போனஸ் பிரச்சனையில் திரு எஸ்.ஐ .சங்கரன் தலைமையில் உள்ள   கம்யுனிஸ்ட் சங்கத்தினர் கம்பெனி நிறுவனர் திரு எஸ்.கே.ஜெயின் அவர்களை அவர் அறையிலேயே ஏழு மணி நேரம் பூட்டி வைத்து  கேரோ செய்து அவரை போன்கூட பேச அனுமதிக்காமல் இருபது சதம் போனஸ் வேண்டும் என்று கையெழுத்து வாங்கிவிட்டார்கள். மறுநாள் சென்னைக்கு I.G. திரு F.V.அருள் அவர்களுக்கு போன் செய்து கம்பெனியில் நடந்த போனஸ் விவரங்களை சொன்னார்கள். அவர்கள் உடனே திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தெரிவித்தார்கள். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடனே தாரங்கதாரா கெமிகல் கம்பெனிக்கு ஒரு தனிப்பிரிவு தலைமை காவலரை நியமித்து அங்கு தொழிலாளர்களின் நடவடிக்கையை கண்காணிக்கவேண்டும் என்று உந்தரவு போட்டார்கள். மாவட்ட தனிப்பிரிவு அலுவலகத்திலிருந்து என்னை அந்த டூட்டிக்கு  நியமித்து உத்தரவு  வந்தது. ஆறுமுகநேரி பக்கத்தில் உள்ள ஊர் என்பதால் மிகவும் சந்தோசம்.

                                                                                         அப்போது.........

No comments:

Post a Comment