Tuesday 27 September 2011

உறவினர்கள் சந்திப்பு !

அப்போது ...............

                       கதவை திறந்தேன். வேலூர் வந்துவிட்டது . நான் சோகமாகவும் காலை உணவு   சாப்பிடாமலும் இருந்ததை   பார்த்து ஏட்டு   அவர்   பையிலிருந்து   கத்தியை  எடுத்து  தந்தார் . "நீ   எங்கோ   பரக்க பார்த்துக்கொண்டிருந்தாய்  அதனால்தான்    கத்தியை   எடுத்து  வைத்தேன்  . இனிமேல்   கவனமாக இரு   என்று  சொன்னார் .   எனக்கு  அப்போதிருந்துதான்   உயிரே  வந்தது .  கைதிகளை  நல்லபடியாக  சிறையில்   ஒப்படைத்துவிட்டு   கடலூர்  வந்துவிட்டோம் . மற்ற ஒருமுறை   பாளையம்கோட்டை   சிறுவர்  சீர்திருத்தப்பள்ளி   ஜெயிலுக்கு   ஒரு  சிறுவனை   கொண்டுபோகவேண்டி    ஒரு தலைமை  காவலருடன்   எனக்கு  டுட்டி .   சந்தோசமாக   சென்றேன்  .  இந்தமுறை   வேறு  ஒரு தலைமை   காவலருடன் சிறுவனை கூட்டிக்கொண்டு  போனோம் .  பாளையம்கோட்டை   வந்து  சிறுவர் சீர்திருத்த   பள்ளியில்   சிறுவனை ஒப்படைத்தோம் .   தலைமை   காவலருக்கு   நானே   சாப்பாடு  வாங்கி  கொடுத்துவிட்டு " ஏட்டையா!   நான்   எனது  சொந்த   ஊருக்கு   சென்று  வருகிறேன்"  என்று சொன்னேன் . "சரி   நாளைக்கு   மாலையில்   நமக்கு  ரயில். வந்துவிடு"  என்று சொன்னார். எனக்கு சந்தோசம் .

                            ரயிலில்   புறபட்டேன்.   மீளவிட்டான்   ரயில் நிலையத்தில்   எறங்கினேன் .  ஒரு   கிலோமீட்டர்   நடந்து   போகவேண்டும் .   போகும்போது   புஞ்சை  காட்டில்   ஓடையில்   சிலர்  சீட்டு  விளையாடிகொண்டிருந்தார்கள் .  என்னை   கண்டதும்   ஏய்    போலீஸ்   வருது  என்று எல்ல்லோரும் ஓடினார்கள்  .  நான்  பக்கத்தில்  போனவுடன்   நம்ம   ராமசாமி   எல்லோரும்  வாங்க என்று மற்றவர்களை   கூப்பிட்டான் ஒருவன் .  எல்லோரும்  என்னை  பார்த்து சந்தோசப்பட்டார்கள் .   நீ   போலீஸ்  வேலையா    பார்க்கிறாய்  என்று   ஆச்சரியமாய்  கேட்டார்கள் . ஆம்  என்று  சொல்லிவிட்டு  வீட்டிற்கு  போனேன் . அம்மாவும்   தங்கை  பாப்பாவும் இருந்தார்கள் .  ஊரில்   சொந்த பந்தங்கள்   எல்லோரும்   பார்த்து   சந்தோசபட்டார்கள்.  அன்று  இரவு வீட்டில்     தங்கினேன் .   மறுநாள்  காலையில்   அண்ணன்   ராமர்   வீட்டுக்கும்   சின்னக்காள் வீட்டிற்கும்   போனேன் .   அவர்களுக்கும் ரொம்ப   சந்தோசம் .  எல்லோரிடமும்   விடைபெற்று    தூத்துக்குடி   சித்தப்பா   திரு  ராமசாமி   அவர்கள்  வீட்டிற்கு   போனேன் .  சித்தி , பெரிய   சித்தப்பா  திரு  பாண்டியன்  சித்தி   பிரமு ,  தம்பிமார்   மாடசாமி , தர்மலிங்கம்   எல்லோரையும்   பார்த்துவிட்டு   அன்றைக்கு   மதிய   உணவு சித்தப்பா   வீட்டில்  சாப்பிட்டேன் .   

                       உடனே  புறப்பட்டு   பஸ்ஸில்   வாகைகுளத்தில் இறங்கி   திம்மராஜபுரம்    ஒரு கிலோமீட்டர்   நடந்து சென்றேன் அப்பொழுது புஞ்சையில்  களை பறித்து கொண்டிருந்தவர்கள்    அடியே   நம்ம ஊருக்கு  போலீஸ் வருதுடி  என்று ரோட்டோரம்  ஓடி  வந்தார்கள் .   அதில்   எனது   பெரியப்பா   மகன்  சித்ரவேல்  அவர்கள்   மனைவியும்   வந்தார்கள் .   அண்ணி   என்னை தெரியவில்லையா     நான்தான்   ராமசாமி என்றேன் .   அதன் பின்புதான்  அவர்களுக்கு    தெரிந்தது .   பிறகு   திம்மராஜபுரம  வந்து   அண்ணன் திரு சாமுவேல் ,   மாசில்லாமணி ,  சித்ரவேல் பெரிய வேலு ,  சின்னவேலு , செல்லையா ,  தனுஷ்கோடி   மற்றும்   அவர்கள் குழந்தைகள்   அனைவரையும்   பார்த்துவிட்டு    காப்பி குடித்துவிட்டு புறப்பட்டேன் .   எல்லோருக்கும்  ரொம்பவும்  சந்தோசம் . .   அண்ணன்   மாசில்லாமணி   அவர்கள்   நம்   குடும்பத்தில்   போலீஸ் வேலையில் தம்பி   ராமசாமி தன   முதலாவதாக   சேர்ந்துள்ளான்  என்று பெருமையாக சொன்னார்கள் . அதன்பின் வேகமாக   புறப்பட்டு திருநெல்வேலி   ரயில்   நிலையம் நோக்கி வந்தேன். நேரமாகி விட்டது. என்ன செய்வது என்று தெரியவில்லை. ரயிலை தவறவிட்டு மீண்டும் ஏதேனும் பணிஷ்மன்ட் கிடைக்குமோ என்று பயந்தேன். வேகமாக நடந்தேன்  .                                           அப்போது..................   
            

Friday 23 September 2011

தற்கொலை எண்ணம்

அப்போது ...............
அவர் என்னருகில் வந்துவிட்டார். நான் துப்பாக்கியை நீட்டினால் அவர் மேல் இடித்து விடும். எனவே நான் " சாரி சார்"  என்று கூறினேன். ஆனாலும் எனக்கு மறு நாள் ஒரு மணி நேரம் கூடுதல் கவாத்து கொடுக்கப்பட்டது.
                  பயிற்சி   பள்ளியில்   எனக்கு   ஒரு  மாதத்துக்கு  முன்னாள்   வந்த   திருநெல்வேலி   மாவட்டத்தை சேர்ந்த கூத்தன்குழி மனுவேல்   பூபாலராயர்    முடிவைததாநேந்தால் , புத்தூர்,   P.S.  சுப்பையா    ஆகியோர்   எனக்கு மிகவும்   உறுதுணையாகவும்   அவர்கள்   படித்த   சட்ட   நோட்டு  புத்தகங்களை   எனக்கு   தந்தும்   தம்பி   தம்பி என்று   பாசமாகவும் இருந்தார்கள் .   கவாத்து  செய்ய  கஷ்டப்பட்டு   யூனிபார்மை   கழட்டி பொட்டலம்   கட்டி  வைத்துவிட்டு   வேலை  வேண்டாம்   என்று   ஓடியவர்களும்   உண்டு .    எனது   குழு   கவாத்து   மாஸ்டர்   திரு   மாணிக்கம்   மிகவும்   நல்லவர் .   ஒரு நாள்    சாயங்காலம்   விளையாட்டு  நேரத்தில்   கோட்டையை   சுற்றி   பார்க்க   போவோம் .  அப்படி  சுற்றி   பார்க்கும்  பொது    வாசலுக்கு   போனோம்  .  அப்பொழுது   ஒரு   மரத்தில்  கூர்மையான   கல்லால்    எனது   காவலர்   எண்   1621 என்று மரத்தில்   குத்தி  எழுதினேன் .  பின்னாளில்   1975 – ல்    சப்  இன்ஸ்பெக்டர்  பதவி   உயர்வு   பெற்று   காவல்  பயிற்சி   கல்லூரிக்கு வரும்போது   அந்த    மரத்தில் அந்த   எனது   காவலர் எண்ணை பார்த்தேன் .   ரொம்பவும்  சந்தோசமாக   இருந்தது .    ஆறு   மாதங்கள்   காவலர் பயிற்சி முடித்து   எல்லோரும்    சேர்ந்து   படம் எடுத்து கொண்டோம்  .  பயிற்சியில் கவாத்து மற்றும்   சட்டம்   இவைகளில்    தேர்வு   ஆகவேண்டும் .    தேர்வு   ஆகாதவர்கள்    மேலும்  ஒரு   மாதம்  பயிற்சியில்   இருக்கவேண்டும் .   எனது   குழுவில்   நாராயணசாமி    என்ற  காவலர்   தேர்வாகாமல்   மேலும் ஒரு   மாதம் பயிற்சிக்காக   இருந்தார்  .    நல்லபடியாக   பயிற்சி   முடித்து 16.5.1961  அன்று    கடலூர்   மாவட்ட   காவல்   அலுவலகம்   வந்தோம் .   அங்கு   எங்கள்  அனைவருக்கும்   ரிசர்வ்   போலீஸ்   படையில்    (பிளட்டூன் ) சேர்த்தார்கள் . எனக்கு ஒரு மாதம்   முன்னாள்    பயிற்சி   முடித்து   வந்த   திரு   பி  . எஸ் . சுப்பையா,  மனுவேல் பூபாலராயர்   ஆகியோர்   மூன்றாவது   படையில்   இருந்தார்கள் .   எனக்கும்   என்னுடன்   பயிற்சி முடித்து   வந்த   பிச்சை  பிள்ளை , அங்கமுத்து ஆகியோரும்     என்னுடன்  மூன்றாவது   படையிலேயே    சேர்த்தார்கள் .  மேலும்    அந்த   ரிசர்வ் போலீஸ் படையில்   முடிவைதாநேந்தால்    புதூர்     பக்கமுள்ள   வர்தகரேட்டிபெட்டி  திரு   சொரிமுத்து ,  சுப்பையா பிள்ளை ,   புதூர்   ஸ்ரீனிவாச  மகேன்றேர்  ( இவரது   மகன்   ( திரு சாலை  பஜவண்ணன் ) தற்போது   தூத்துக்குடி    துறைமுகத்தில்   கணக்கு   அதிகாரியாகவும்   ஊர்  காவல்   படையில்   தென்   பிராந்திய   படை  தளபதியாகவும்   (கமாண்டேன்ட் )  இருந்து  வருகிறார் .   3 வது   படை பிரிவுக்கு சார்ஜன்ட்   திரு.கண்ணையா  நாய்டு   அவர்கள் இருந்தார்கள் . மிகவும்    நல்லவர் . சார்ஜென்ட்   என்பது   சப்  இன்ஸ்பெக்டர்   அந்தஸ்து . அதற்கு   மேல்  அதிகாரி   சார்ஜென்ட்  மஜார்  திரு.சாமுவேல்  அவர்கள் .   கடலூர்  வந்த   மறுநாள்   காதர்  ஆபீஸ்   போனேன் .   அங்கு  சிலபேர்   மாற்றலாகி   சென்றிருந்தார்கள்  .    திரு  சுப்ரமணிய   யார்  அவர்களும்   தஞ்சாவூர்   சென்று  விட்டார் .  அண்ணன்  ஜோதிமுத்து அவர்களும் மாற்றலாகி  போய்விட்டார்கள் .   மற்ற   நண்பர்களையும்    ஆபீசரையும்      பார்த்தேன்   எல்லோரும்  சந்தோசப்பட்டார்கள் .

தற்கொலை   முடிவு :

                       ஒருசமயம்   வேலூர்   சிறைக்கு    கைதிகளை கொண்டு  போக வேண்டியது    இருந்தது .   ஒரு   தலைமை   காவலர்  மற்றும்   4 காவலர்களும்    கடலூர்  சிறையிலிருந்து   கைதிகளை  எடுத்துக்கொண்டு    வேலூர் புறப்பட்டோம்  . விழுப்புரத்தில்   ரயில்  மாற  வேண்டும்   அதற்காக   காத்திருந்தோம் .  இரவு  நேரம் .   அதுவரை   ஒரு  காவலர் கைதிகளையும்   ஒரு காவலர் துப்பாக்கிகளையும் பார்த்து  கொள்ளவேண்டும்  .  நான்   துப்பாக்கிகளை பார்த்துக்கொண்டேன் .   இரவு இரண்டு  மணிக்கு ரயில் வரவேண்டும் . ஒன்றரை   மணிக்கு எல்லோரையும்   தயாராக சொல்லி துப்பாக்கிகளை சரிபார்த்தார் தலைமை . ஒரு   துப்பாக்கியில்   கத்தி  (பைநெட் )  இல்லை .   உடனே  என்னை   தலைமை  காவலர் கடிந்துகொண்டு " உன்   வேலை   முடிந்துவிடும்  .  தேடிப்பார்  என்று  சொன்னார் .   எல்லோருடைய   பைகளிலும்   தேடிப்பார்த்தேன்   தலைமை காவலர் பையை   மட்டும்  பார்க்கவில்லை . கத்தியை காணவில்லை .  எனக்கு   மனம்    படபடவென்று  அடித்துகொண்டது   என்ன செய்வது   என்று புரியவில்லை .   "ஏட்டையா நான் உஷாராக தான் இருந்தேன். எப்படி  காணாமல்  போனது  என்று  தெரியவில்லை" என்று புலம்பினேன்  .  ரயிலில்   கைதிகளை ஏற்றினோம்   ரயில் புறப்பட்டது .   எனக்கு   பயமாகவும்   பதட்டமாகவும் இருந்தது . "முதலில் தற்காலிக பணிநீக்கம்!    அடுத்தது   டிஸ்மிஸ் !"  என்று ஏட்டு சொன்னார் . இனி    நாம்  உயிருடன் திரும்ப  கூடாது    ரயிலிலிருந்து  குதித்து   தற்கொலை  செய்துகொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன். ரயில் வேகமாக சென்று கொண்டிருந்தது. மனம் அதையும் தாண்டி எங்கோ பறந்துகொண்டிருந்தது, ரயில் கதவை திறந்தேன். இருட்டு மிகவும் பயமாக இருந்தது. மனதை கல்லாக்கி கொண்டேன். அப்போது.........    
                                      

Tuesday 20 September 2011

காவலர் பயிற்சி பள்ளி !

                  18.10.1960 மெடிக்கல்  செக் அப்க்கு  மாவட்ட  போலீஸ் ஆபீசுக்கு   போனேன் .  அங்கு    16  மற்றும்  17 தேதிகளில்   தேர்வான மொத்தம்   15 பேரும்   அரசு   மருத்துவமனைக்கு   ரிசர்வ்   சார்ஜன்ட்   ஒருவர்   அழைத்து  சென்றார் .  அப்பொழுது    உயரம்   குறைவான   வெளியே   போனவன் எப்படி   தேர்வனான்   என்பதை  என்னிடம்  ரகசியமாக  சொன்னான் ,   அவன்  " ஒயரம்  குறைந்து  விட்டதே என்ற  கவலையில்   கக்குசுக்குள்  சென்று   சுவரில்    தலையை  முட்டினேன்.   நல்லவேளை  ரத்தம்  வரவில்லை . வெளியே  வந்து  தலையை   தடவி  பார்த்தேன்.   உச்சியில்   சற்று   வீங்கி  இருந்தது.    அதனால்   மறுபடியும்   வரிசையில்   நின்றேன் .   என்  தலையில்   உள்ள   வீக்கம் அரை   அங்குலத்திற்கு  மேலாக   வீங்கி இருந்தது.   தேர்வுக்கான   உயரம் சரியாகிவிட்டது ".   என்று  சொன்னான்.   எனக்கு   ஆச்சரியம்  மட்டுமல்ல  பரிதாபமும்   ஏற்பட்டது .    கடவுளே!   இவன்    மெடிக்கல்   செக் அப்பில்   கட்டாயம்   தேர்வாகவேண்டும்  என்று   வேண்டிக்கொண்டேன் . அதுபோல  எல்லோருக்கும்  மெடிக்கல் செக் அப்பில்   தேர்வாகிவிட்டோம்  .  மாவட்ட  போலீஸ் ஆபீசுக்கு   வந்து   வெரிபிகேசன்  ரோல்  எழுதிகொடுத்துவிட்டு   வந்தோம்  . திரு  சீனிவாசன்  சார்   உங்கள் வெரிபிகேசன்   ரிப்போர்ட்   வந்தவுடன்   ஆர்டர்  வந்துவிடும்     என்று    நண்பர் சுப்ரமணிய அய்யரிடம்   சொல்லுங்கள்  என்று சொன்னார். வீட்டிற்கு  வந்தவுடன் அண்ணனிடம் எல்லாம் சொன்னேன். மேலும்   நான்   போலீஸ்க்கு   போய்விட்டால்   தம்பி  ராமலிங்கத்தை இங்கு   வரவழைத்து  எனக்கு   பதிலாக  வேலைக்கு  சேர்த்து  விடலாம்  என்று  சொன்னேன் .  மறுநாள்   ரீஜனல்   காதி    ஆபீசர்   மற்றும்  மாவட்ட  காதி ஆபீசர் ஆகியோர்களிடம்   சொன்னோம் .  உடனே   வரச்சொல்   இங்கு   குறிஞ்சிப்பாடியில்   ஒரு  போஸ்ட்   காலியாக இருக்கிறது  என்று  மாவட்ட  காதி ஆபீசர் சொன்னார் .   சரி   அய்யா     நன்றி  என்று சொல்லிவிட்டு   வந்தோம் .  உடனே   தம்பிக்கு  லெட்டர்   எழுதி   எனக்கு போலீஸ்  வேலை   கிடைத்துவிட்டது     அதனால்  நீ   எனக்கு பதிலாக   இங்கு   வேலை பார்க்கலாம்.  உடனே  புறப்பட்டு  வா   என்று எழுதினேன் .ஒரு வாரத்தில்  வந்துவிட்டான்  . அவனுக்கு   குருஞ்சிபாடியில்   ஆபீசில்   இரவு காவலாளியாக   வேலை கிடைத்துவிட்டது .   எனக்கும்   28.10.60 ல்   போலீஸ்  ஆபீசிலிருந்து   1.11.1960 காலை   10  மணிக்கு   டிஸ்ட்ரிக்ட்  போலீஸ் ஆபீசில்   வேலையில்   சேர  ஆஜராகவேண்டும்  என்று ஆர்டர்  வந்தது .முன்னதாக   திரு  சீனிவாசன்   அவர்கள்   திரு சுப்ரமணிய அய்யருக்கு    ராமசாமிக்கு   ஆர்டர் வந்துவிட்டது    வரும்போது  டிஸ்ட்ரிக்ட்  காதி    ஆபிசிலிருந்து  விடுவிக்கப்பட்டது   என்ற   ஆர்டர் ஐ   கொடுத்து  அனுப்புங்கள்   என்று போனில்  சொல்லிவிட்டார்கள் .
           அதன்படி   ரிலீவ்  ஆர்டர் பெற்று   எல்லோரிடமும்   பிரியா  விடைபெற்று   1.11.1960 காலை 10 மணிக்கு டிஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபீஸ்க்கு  போனேன் .   அன்றே   போலீஸ் யூனிபோர்ம்  கொடுத்துவிட்டார்கள் .  ஆனால்   15.11.60 அன்றுதான்   வேலூருக்கு   பயிற்சிக்கு   செல்லவேண்டும் .   அதுவரை டிஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபீசில்   செடிகளுக்கு   தண்ணீர்   விடவும்   மற்றும்   கவாத்து மைதானத்தை   சுத்த படுத்தவும்  வேண்டும்.
             15-11-1960 ல் எங்கள் 15 பேரையும் வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு அழைத்துசென்றார்கள். அங்கேயும் ஒரு தடவை உயரம் மார்பளவு எல்லாம் சரிபார்க்கப்படுகிறது. அது ஒரு ஒப்புக்கு தான் பார்க்கிறார்கள்.அன்றே எங்களுக்கு தங்குவதற்கு அறைகள் ஒதுக்கபட்டது. மறுநாள் பயிற்சி ஆரம்பம். காலை 5 மணிக்கு பிகில் ஊதும் சத்தம் கேட்டவுடன் எழுந்திரிக்கவேண்டும். காலையில் ராகிமால்ட் கொடுப்பார்கள். காலை 6 மணி முதல் 7 மணி வரை உடற்பயிற்சி. 7.30 மணி முதல் 9.00 மணி வரை கவாத்து. ஒன்பதரை மணிக்கு காலை உணவு உப்புமா அல்லது பன் காபி 10 மணிக்கு சட்டம் படிக்கும் வகுப்பு. இது ஒரு மணி வரை நடக்கும் . மத்தியானம் வரிசையில் நின்று சாப்பாடு வாங்கி சாப்பிடவேண்டும். மாலை 4 மணி முதல் 5 மணி வரை விளையாட்டு . இந்த பயிற்சி பள்ளியில் தென்னாற்காடு, வடார்க்காடு, சேலம், செங்கல்பட்டு, மெட்ராஸ் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 150 பேர் நான்கு அல்லது ஐந்து குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைமை காவலர் டிரில் மாஸ்டர் இருப்பார் . அதற்கு மேல் H D I  இருப்பார் H D I ஓர் ஆய்வாளராக இருப்பார். சட்ட வகுப்பில் உதவி ஆய்வாளர் அந்தஸ்தில் ஒவ்வொரு வகுப்பிற்கும் A L I என்ற உதவி சட்ட பயிற்றுனர் இருப்பார். அவருக்கு மேலாக ஆய்வாளர் அந்தஸ்தில் C L I தலைமை சட்ட பயிற்றுனர் இருப்பார். கண்காணிப்பாளர் அந்தஸ்தில் முதல்வரும் துணை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் துணை முதல்வரும் இருப்பார்கள். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் திட்டக்குடியை சேர்ந்த பிச்சை பிள்ளை , நெய்வேலியை சேர்ந்த அங்கமுத்து ஆகியோர் என்னுடன் இருந்தார்கள். மிகவும் நல்லவர்கள், எந்த கெட்டபழக்கமும் இல்லாதவர்கள். 
       வேலூர் காவல் பயிற்சி பள்ளியானது வேலூர் கோட்டைக்குள்ளே இருக்கிறது. அங்கே திப்பு மஹால், சுல்தான் மகால் என்று ரெண்டு பிரிவான கட்டடங்கள். திப்பு மகாலில் காவலர் பயிற்சி பள்ளியும் சுல்தான் மகாலில் சப் இன்ஸ்பெக்டர், டி எஸ் பி , ஏ.எஸ்.பி. ஆகியோர் பயிற்சி பெரும் காவல் பயிற்சி பள்ளியும் இருந்தது. இதை சுற்றிதான் கோட்டைக்கு வெளியே ஆழமான பெரிய அகழி. அகழியில் எப்போதும் தண்ணீர் இருக்கும். கோட்டை வாசலில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு. கோட்டைக்குள் பெரிய கோயில் இருக்கிறது. ஆனால் சிலை கிடையாது. எனவே அந்த ஊரை சொல்வார்கள், தண்ணீர் இல்லாத ஆறு சாமி இல்லாத கோயில் என்று. நீதி மன்றம் மாதிரி காவல் நிலையம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் இருக்கிறது.  கோட்டையின் வலது புறம் (wicket gate) கள்ள வழி உண்டு. அங்கே போலீஸ் பாதுகாப்பு உண்டு. இதையும் மீறி பயிற்சி காவலர்கள் வெளியே போய் சினிமா பார்த்து விட்டு வந்துவிடுவார்கள். பிடிபட்டால் ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் என்று கூடுதல் கவாத்து செய்யவேண்டும். மூன்று மாத பயிற்சி முடிந்த நிலையில் ஒரு நாள் காவலர்கள் தங்கி இருக்கும் கட்டிட வாசலில் இரவு காவல் பணி எனக்கு அளிக்கப்பட்டது. துப்பாக்கியை வைத்துகொண்டு நின்று கொண்டோ அல்லது அங்குமிங்கும் நடந்து கொண்டோ இருக்க வேண்டும். இரவு மேலதிகாரிகள் தணிக்கை செய்ய வருவார்கள். அப்படி நான் பணியில் இருக்கும்போது இரவு ஒருமணிக்கு தணிக்கை ஆபீசர் ஒரு தலைமை காவலர் வந்தார். நான் நின்று கொண்டு துப்பாக்கியையும் பிடித்துகொண்டு தூங்கி விட்டேன். தணிக்கை செய்யும் அதிகாரி 20 அடி  தூரத்தில் வரும்போதே துப்பாக்கியை அவருக்கு நேராக பிடித்து  " நில். யார் நீ ? ( Halt! Who comes there? ) என்று கேட்கவேண்டும். நான் தூங்கி விட்டதால் அவர் என் அருகே வந்துவிட்டார். அதன் பிறகு தான் நான் விழித்து பார்த்தேன் . 
                                                                                                                              அப்போது ........     

Saturday 17 September 2011

காவல் துறையில் வேலை !

                       நான் அவர்களிடம் "எதுவாயிருந்தாலும் காலையில் வாருங்கள் ஆபீசர் இருப்பார் அவரிடம் சொல்லுங்கள்" என்று கூறினேன். அவர்கள் மேலும் கதவை உடைப்பது போல் வேகமாக தட்டினார்கள். அப்பொழுது தான் அன்று காலையில் தலைமை குமாஸ்தா செல்வி வேதவல்லி அவர்கள் யார் யாருக்கு எப்படி பேசவேண்டும் என்றும் அதில் இருக்கும் மற்றொரு விஷயத்தையும் எனக்கு சொல்லி தந்திருதார்கள் அது எனக்கு ஞாபகத்தில் வந்தது. டெலிபோனில் குறிப்பிட்ட ஒரு நம்பரை டைப் செய்து விட்டு ரிசீவரை வைத்து விட்டால் சிறிது நேரத்தில் யாரோ நம்மை கூப்பிடுவது போல் டெலிபோன் மணி அடிக்கும். அந்த ஞாபகம் எனக்கு வந்தது. போனை டயல் செய்வது போல் ரிசீவரை காதில் வைத்து கொண்டு " ஹலோ! போலிஸ் ஸ்டேசனா? இங்கு காதர் ஆபீசில் இருந்து பேசுகிறேன். மூன்று பேர் இங்கு வாசலில் வந்து கலாட்டா செய்கிறார்கள். நான் தனியாக இருக்கிறேன் ஐயா! உடனே வாருங்கள்" என்று சொல்லி அந்த குறிப்பிட்ட நம்பரை டைப் செய்து ரிசீவரை வைத்து விட்டேன். போன் இருக்குமிடம் ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரியும். உடனே போன் ரிங் வந்தது. நான் போனை எடுத்து " சார் சப் இன்ஸ்பெக்டர் ஐயாவா? உடனே வாருங்கள்! ஆமாம் பயத்தில் அட்ரஸ் சொல்லாமல் இருந்து விட்டேன். கடலங்குடி தெரு நாற்றி பதினொன்னாம் நம்பர் சென்ட்ரல் காதி ஆபீஸ் என்று போனை வைத்து விட்டு ஜன்னல் வழியாக பார்த்தேன். மூன்று பெரும் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருதார்கள். அன்று இரவு தூங்கவே இல்லை.
                               கும்பகோணத்தில் ஆறு மாதங்கள் வேலை பார்த்தேன். அந்த சமயம் கடலூர் திருப்பதிரிபுளியூர் மாவட்ட காதர் ஆபீசில் இரவு காவலர் வேலை காலியாக இருந்தது. அண்ணாச்சி ஜோதிமுத்து முயற்ச்சியால் அந்த வேலையை எனக்கு வாங்கி விட்டார்கள். ஒரு வாரத்தில் திருப்பதிரிபுளியூர் மாவட்ட காதர் ஆபீஸ் வந்து வேலையில் சேர்ந்தேன். ஆபீசர் திரு எ.பிச்சாண்டி அவர்கள் மிகவும் நல்லவர் கறாரான பேர்வழி. அவருக்கு அனைவரும் பயந்து நடுங்குவார்கள். எனக்கு சாப்பாடு அண்ணாச்சி ஜோதிமுத்து வீட்டில். அண்ணி லக்சுமி நல்ல முறையில் என்னை கவனித்து கொண்டார்கள். சாப்பிட மட்டும் தான் வீட்டிற்கு செல்வேன் மற்ற நேரங்களிலெல்லாம் ஆபீசில் இருப்பேன். ஆபீசில் அனைவருமே மிகவும் நல்லவர்கள். நல்ல பழக்கமாகிவிட்டார்கள்.
                       
                          தலைமை குமாஸ்தா திரு.சுப்பிரமணிய அய்யர் என்னை தன்உடன் பிறவா சகோதரனை போல் நடத்தினார்கள். அவரது வீடு ஆபீசுக்கு பின் பக்கமுள்ள அக்ரஹாரத்தில் இருந்தது, அடிக்கடி வீட்டிற்கு சாப்பிட அழைத்து செல்வார் அவரது மனைவி சாவித்திரி. மகள் மைதிலி ரெண்டு வயது குழந்தை.என்னிடம் மிகவும் பிரியமாக பழகிவிட்டது. சில நாட்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆபீசுக்கு அந்த குழந்தை மைதிலியுடன் வந்து உன்னிடம் தான் போகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள் நீயே தூங்க வை" என்று தந்து விட்டு போவார் நான் அந்த குழந்தையை தூங்க வைக்க  வெகுநேரம் ஆகிவிடும்.ஒருசமயம் அண்ணி லக்சுமிக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அவருக்கு ரத்தம் கொடுக்க வேண்டுமென்று டாக்டர் சொல்லிவிட்டார். அந்த குரூப் ரத்தம் கிடைக்கவில்லை. எனது ரத்தம் "o" குரூப் இது எல்லா குரூப்புக்கும் சேரும் என்று சொன்னார்கள். உடனே நானே முன்வந்து ரத்தம் கொடுத்து அவர்கள் உயிரை காப்பாற்றினேன்.

                                    தலைமை குமாஸ்தா திரு சுப்பிரமணிய அய்யர் அவர்களுக்கு மாவட்ட போலிஸ் அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை குமாஸ்தா திரு சீனிவாசன் அவர்கள் நெருங்கிய நண்பர்.அடிக்கடி என்னிடம் கடிதம் மற்றும் பொருட்கள் கொடுத்து அனுப்புவார். அதை அவரிடம் கொண்டு கொடுப்பேன். சில நேரங்களில் அவரர் இவருக்கு ஏதாவது கொடுத்து அனுப்புவார். இப்படி ஒருநாள் மாவட்ட காவல் அலுவலகம் சென்று திரு சீனிவாசன் அவர்களிடம் லட்டரை கொடுத்து வரசென்றேன். அப்போது அவர் "நீ நல்ல உயரம் மார்பளவேல்லாம் போலிஸ் வேலைக்கு சரியாக இருப்பாய் என்று எண்ணுகிறேன். 15-101960 ல் இங்கு போலிஸ் தேர்வு இருக்கிறது நீ காட்டாயம் கலந்து கொள் செலக்ட் ஆகிவிடுவாய்" என்று சொன்னார். திரு சுப்பிரமணிய ஐயரிடமும் தொலைபேசி மூலம் "ராமசாமியை போலிஸ் செலச்சனுக்கு அனுப்பி விடுங்கள். நிச்சயம் செலக்ட் ஆகி விடுவான்" என்று சொல்லி இருக்கிறார். நான் ஆபீஸ் வந்தவுடன் "ராமசாமி உனக்கொரு யோகம் காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். போலிஸ் ஸ்டேசனில் நண்பர் உன்னிடம் என்ன சொன்னார். நீ கட்டாயம் கலந்து கொள் அந்த வேலை உனக்கு கிடைக்குமென்று சொன்னார் . சரியென்று சொல்லிவிட்டு அண்ணன் ஜோதிமுத்து அவர்களிடம் சொன்னேன் . அவர் "அதெல்லாம் வேண்டாம்பா.போலிஸ் வேலை எவ்வளவு பொறுப்பான வேலை. அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது." என்றார். நான் ஒன்றும் சொல்ல வில்லை. மறுநாள் அண்ணனிடம் திரு.சுப்பிரமணிய அய்யர் அவர்கள் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தார். 
         15-10-1960 அன்று காலை 8.00 மணிக்கு கடலூர் மாவட்ட போலிஸ் அலுவலகத்தில் ஆஜரானேன். திரு.பி.பரமகுரு I .P .S அவர்கள் அன்று தான் மாவட்ட கண்காணிப்பாளராக பதவி ஏற்றிருந்தார்கள். தேர்வு ஆரம்பித்தது.சுமார் நூறு பேர் வரிசையில் நின்றோம். எனக்கு  முன் முப்பது பேர்கள் தேர்வாகாமல் கழிக்கப்பட்டார்கள். அதில் ஒருவர் மட்டும் தேர்வாகி உட்காரவைக்கப்பட்டிருந்தார். அடுத்து நான் தேர்வானேன். அன்று நூறு பேரில்  மொத்தம் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் உடலளவு, உயரம், மார்பளவு, மூச்சை அடக்கி மார்பை விரித்து காட்ட வேண்டும் அவ்வளவு தான். ஏழு பேரில் ஒருவர் எனக்கு முன் நின்றவர் உயரத்தில் அரை அங்குலம் குறைவதாக சொல்லி வெளியே அனுப்பப்பட்டவர் திரும்ப தேர்வாகி ஏழு பேரில் ஒருவராக இருந்தார். நான் எப்படி உயரம் சரியானதென்று கேட்டேன். "அந்த பயங்கரத்தை பிறகு சொல்கிறேன்" என்று சொன்னான். தேர்வு முடிந்து மெடிக்கல் செக் அப் போக வேண்டும் அதிலும் தேர்வானால் தான் தேர்வே உறுதி செய்யப்படும் என்று சொல்லி அனுப்பினார்கள்.                                                                                                                                         பிறகு ...........

Friday 16 September 2011

வேலைகளுக்கு சென்றேன் !

                            .................பனைமரத்தில் இருந்து கீழே பார்த்தபோது மிகவும் பயமாக இருந்தது.  தலை சுற்றியது, சூரியன் மறைந்தபின் கீழே இறங்கலாம் என்று மரத்திலேயே இருந்துவிடுவோம் என்று இருந்தேன்,  பொழுது அடைந்தது, கீழே பார்த்தால் ஒரே இருட்டாகவே தெரிந்தது,  உடனே மளமள என்று எறங்கினேன், ஓலையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு போனேன், 
வீட்டில் எல்லோரும் என்னை எதிர்பர்த்த்கொண்டிருந்தர்கள்,  வீட்டில் ஓலை கொழுக்கட்டை செய்து தந்தார்கள், மிகவும் சுவையாக இருந்தது, 
                             1952   எனது மூத்த சகோதரி சண்முகக்கனி திருமணம் , மணமகன் குரும்பூர் பக்கமுள்ள தெற்கு நல்ல்லூர், திரு பழனி அவர்கள் மகன்  முனியசாமி, மிகவும் நல்ல விவசாய குடும்பம் ,  வீட்டுக்கு ஒரே பிள்ளை, தந்தையும் இல்லை, என் சகோதரியை கண்கலங்காமல் நல்லவிதமாக  கவனித்து குடும்பத்தை நடத்தி வந்தார் , சகோதரியின் பாசம் அடிக்கடி தெற்கு நல்ல்லூர் நடந்தே சென்று வருவேன் , 1955 தந்தை காலமானார்,  எனது  படிப்பையும் நிறுத்திவிட்டேன்,  பள்ளி செல்ல ஆர்வம் இல்லை,
                                    எனது சகோதரர்கள் என்னை குலையன்கரிசல் என்ற ஊரில் ஒரு வீட்டில் வேலைக்கு  சேர்த்துவிட்டார்கள். அங்கே அந்த வீட்டில் சொல்லும் வேலைகளை செய்ய வேண்டும். காட்டில் மேய்ந்து வரும் மாடுகளை தொழுவத்தில் கட்டி அதற்கு தீவனம் தண்ணீர் வைக்க வேண்டும். வீட்டிலுள்ள அனைவருக்கும் என்னை ரொம்பவும் பிடித்து விட்டது. அந்த குடும்ப தலைவர் பெயர் வி.பி.ரெங்கசாமி நாடார். அவர் குழந்தைகள் இரண்டு பேர் இந்நாளில் வி.பி.ஆர்.சுரேஷ் , வி.பி.ஆர்.ரமேஷ். ஒருவர்  பஞ்சாயத்து யூனியன்   தலைவராகவும்  ஒருவர் தூத்துக்குடி  தொகுதி எம்.எல்.ஏ ஆகவும் வந்தார்கள். எனது ஏற்னடாவது சகோதரி வேலம்மாளுக்கு என் தந்தை உடன் பிறந்த அத்தை பார்வதி அவர்கள் மகன் பெருமாளுக்கும் திருமணம் நடந்தது. 

                                  அதன் பின் அம்மா என்னை குலையன்கரிசல் அனுப்பாமல் மீளவிட்டானிலேயே விவசாய தொழில் பார்க்கும்படி சொன்னார்கள். நானும் அம்மாவுடன் இருந்தேன். எனது தாய் மாமா சன்னாசி என்னை மீளவிட்டானில் முத்துசாமி நாடார் வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டார். அங்கு அவர்கள் புஞ்சையில் விவசாய தொழில் செய்வதும் மாடுகளை கவனித்து கொள்வதும் எனது வேலை. அப்பொழுது அங்குள்ள ஆடுகளை கவனித்து கொள்ள அய்யாசாமி நாடார் என்பவர் இருந்தார். அவர் அடிக்கடி வேலைகளை பற்றி அறிவுரை சொல்வார். அங்கு வேலை செய்து வந்த தூண்டில் கோனார், வெள்ளைப்பழ நாடார் உளவு செய்வது விதை விதைப்பது என்பது பற்றி நன்றாக சொல்லித்தந்தார்கள். எனக்கு முத்துசாமி நாடார் வீட்டிலேயே சாப்பாடு மற்றும் தங்குவது எல்லாம்  ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அங்கு அவர்களுடைய மனைவி தங்கத்தாயம்மாள் மிகவும் நல்லவர். என்னை  தன் பிள்ளையை போல் கவனித்தார்கள். என்னை நன்றாக வளர்த்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் பின்னாளில் எனது உடல் வாகு காவல் துறையில் சேர தகுதிபெறும் அளவிற்கு இருந்தது. அவர்கள் மக்கள் எம்.பி.எம். கொளுவைய்யா, எம்.பி.எம்.சௌந்தரபாண்டியன் அவர் மனைவி செந்தூர்கனி, எம்.பி.எம்.ராஜவேலு அவர் மனைவி அழகு,எம்.பி.எம்.மகாராஜ ( இவர் ஒரு எழுத்தாளர். நடிகர்  திலகம் சிவாஜி என்றொரு பத்திரிக்கையே நடத்தினார்.) மற்றும் ராஜகனி அவர் கணவர் சுனா.பினா.அய்யாசாமி நாடார் செந்தூர்கனி,ஷன்முககனி அவர் கணவர் எம்.டி.ஆபிரஹாம்,ராஜாத்தி பாப்பா அவர் கணவர் ஜெயக்கொடி. மற்றும் முத்துசாமி நாடாரும் அவர் தம்பி தங்கவேல் நாடாரும் கொழும்புக்கு ஆடு ஏற்றுமதி செய்து வந்தனர். அவர்கள் இருவரும் தரும சிந்தனை உள்ளவர்கள். பொங்கல், தீபாவளி என்றால் அத்தனை ஏழை மக்களுக்கும் ஒரு ரூபாய் (ஒரு ரூபாய் என்பது இபோதைய மதிப்பு நூறு ரூபாய் ஆகும்) கொடுப்பார்கள். ( இவர் ஒரு எழுத்தாளர். மக்கள் திலகம் சிவாஜி என்றொரு பத்திரிக்கையே நடத்தினார்.) அனைவருக்கும் என்னை ரொம்பவும் பிடிக்கும். அந்த நாட்களில் மதுரை வீரன் சினிமா படம் வெளிவந்த நேரம் அந்த படத்தை நூறு தடவை பார்த்துள்ளேன். அந்த படம் முழுவதும் பேசும் வசனங்கள் அனைத்தும் அதே போல் நடித்து பேசும் அளவிற்கு எனக்கு அத்துபடி.
                                1958 ல் எனது அண்ணன் ராமருக்கும் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள திருப்புளியங்குடி ஊரில் ராஜபாலையா  என்பவர் மகள் ஞானசெல்வத்திற்கும் திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே அவர்கள் வாயாடித்தனத்தால் அம்மாவிற்கும் அவர்களுக்கும் பிடிக்கவில்லை. அம்மா அண்ணனிடம் " உன் மனைவியின் வாயாடித்தனம் சரியில்லை. ஆகையால் என் தம்பி கொடுத்த இடம் இதோ மேல்புறம் இருக்கிறது. அதிலொரு வீட்டை கட்டித்தருகிறேன்." என்று சொன்னார்கள். அந்த குறிப்பிட்ட இடத்தில் வீட்டை நாங்களே கட்டி கொடுத்து அந்த வீட்டில் ஓடு போட்டு கொடுத்தோம். அந்த வீட்டில் அவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்கள். 
             எனது ஓன்று விட்ட பெரியப்பா திரு. மாசில்லாமணி அவர்கள் கோரம்பள்ளம் பெரியநாட்ச்சியாபுரத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் மகன் ஜோதிமுத்து அவர்கள் தென்னார்க்காடு மாவட்டம் கடலூரில் கதர் இலாகாவில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அவர் ஊருக்கு லீவில் வரும்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து செல்வார். ஒருசமயம் வரும்போது "நீ படித்துவிட்டு இப்படி விவசாய வேலையெல்லாம் செய்யவேண்டாம். என்னுடன் வா. நான் வேலை பார்க்கும் ஆபீசில் உன்னையும் வேலைக்கு சேர்த்து விடுகிறேன்." என்று சொன்னார் நானும் சரி என்று உடனே புறப்பட்டேன். ஆனால் அம்மாவிற்கு மனமில்லை. அம்மா எவ்வளவோ தடுத்தும் நான் அவரோடு புறப்பட்டுவிட்டேன். என்னை வழியனுப்ப மீளவிட்டான் ரெயில் நிலையத்திற்கு என் அம்மா தம்பி ராமலிங்கம் தகை பாப்பா ஆகியோர் வந்து கண்ணீர் மல்க வழியனுப்பிவைத்தார்கள். கடலூர் திருப்பாதிரிபுலியூர்  வந்து சேர்ந்தேன். அண்ணன் ஜோதிமுத்து அவர்கள் மனைவி லட்சுமி மிகவும் நல்ல குணம் அவர்களுக்கு பாக்கியம் என்ற ரெண்டு வயது மகள் என்னிடம் நன்றாக விளையாடி கொண்டிருப்பாள். அண்ணன் ஜோதிமுத்துவிற்கு ரீஜனல் காதி ஆபிசில் வேலை. அங்கு ரீஜனல் காதி ஆபீசர் திரு. தனராஜ் அவர்களிடம் அண்ணனிற்கு மிகுந்த செல்வாக்குண்டு. என்னை அவரிடம் கூட்டி சென்று வேலை கேட்ட முதல் நாளே கும்பகோணம் கடலங்குடி தெருவிலுள்ள சென்றல் காதி ஆபீசில் இரவு காவலாளியாக பணிநியமித்து உத்தரவு தந்து விட்டார். மறுநாள் அவரது ஜீப்பிலேயே என்னையும் அண்ணன் ஜோதிமுத்துவையும் கும்பகோணம் கூட்டிசென்றார். அங்கு சென்ட்ரல் காதி ஆபீசர் திரு.சுப்பாலச்சுமணன் அவர்களை சந்தித்து ஆர்டரை கையில் கொடுத்தேன். ரீஜனல் காதி ஆபீசர் திரு. தனராஜ் அவர்களும், " இது நம் ஜோதிமுத்துவின் தம்பி உங்கள் ஆபீசில் இரவு காவலாளியாக பணி நியமித்திருக்கிறேன். நல்ல பையனாக இருக்கிறான் கவனித்து கொள்ளுங்கள்." என்று சொல்லிவிட்டு சென்றார். அப்பொழுது அண்ணன் ஜோதிமுத்து அவர்கள் என் கையில் ஐம்பது ரூபாயும் கொடுத்து அலுவலக தலைமை குமாஸ்தா செல்வி வேதவல்லி அவர்களிடமும் குமாஸ்தா தியாகராஜனிடமும் " என் தம்பியை கவனித்து கொள்ளுங்கள் ஏதாவது ஒரு ஓட்டலில் மாதசாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்து கொடுங்கள் " என்று சொல்லிசென்றார். அப்போது ஜீப் டிரைவர் சனஉல்லா அவர்கள் என்னிடம் " தம்பி இந்த பத்து ரூபாயை வைத்து கொள். நானும் இங்கு ஆபீசருடன் அடிக்கடி வருவேன்." என்று சொல்லி சென்றார்கள் 
                                மறுநாள் பணியில் சேர்ந்ததற்கான ரிபோர்டை c k o விடம் கொடுத்தேன். "என்ன வேலை செய்ய வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்று எனக்கு அறிவுரை வழங்கினார். அன்றே ஊருக்கு அம்மாவிற்கும் நல்லூர் அக்காவிற்கும் சித்தப்பா ராமசாமிக்கும் லட்டர் எழுதினேன். குமாஸ்தா தியாகராஜன் அவர்கள் ஒரு சாதாரண ஓட்டலுக்கு கூட்டிச்சென்று மாதசாப்பாடு 22 ரூபாய் என்று பேசி 10 ரூபாய் அட்வான்சும் கொடுத்தோம். மூன்றே மாதங்களில் ஆபீசில் அனைவரிடமும் நல்ல பெயர் பெற்றுவிட்டேன். யார் என்ன வேலை செய்ய சொன்னாலும் உடனே செய்து முடித்து விடுவேன். நான் இல்லையென்றால் அவர்களுக்கு வேலையே ஓடாது என்கிற அளவிற்கு எல்லோரும் சொல்லும் வேலைகளையும் செய்து முடிப்பேன். ஒருநாள் ஓட்டல் சப்ளை செய்பவன் இரவு 10 மணிக்கு ஆபீசின் முன் சென்று கொண்டிருந்தான். "சினிமாவுக்கு செல்கிறேன் நீயும் வாராயா? " என்று  கேட்டார் . நான் எப்படி வரமுடியும் ? இந்த நாலணாவை வைத்துகொள்ளுங்கள்." என்று கொடுத்தேன். இப்படி வரும்போதெல்லாம் நாலணா எட்டணா என்று கொடுப்பேன். . அதற்காக அவர் நான் சாப்பிட செல்லும்போது சாப்பாட்டுக்குள்ளே மட்டன் துண்டுகளை ஒளித்து வைத்து சாப்பிட சொல்வார். எனக்கு கூடுதலாக சாப்பாடும் கொடுப்பார். 
                  அக்டோபர் இரண்டு முதல் எட்டாம்தேதி வரை கதர் வாரவிழா நிகழ்ச்சிகள் நடக்கும். மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பின்னணி பாடகி கச்சேரி ஒரு மண்டபத்தில் நடந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் வாசலில் நின்று குறிப்பிட்டவர்களை மட்டும் உள்ளே அனுப்பும் பணியில் இருந்தேன். கேட் கிரில் கேட். அது சமயம் ஆப்பீசர் வெளியே செல்வதற்கு வந்தார். கேட்டை பிடித்துகொண்டிருப்பவர்களை கவனிக்காமல் நான் கதவை தள்ளினேன். அதில் ஒருவன் விரல் மாட்டி கொண்டது. அவன் " ஆ !" என்று கத்திய பின்புதான் எனக்கு தெரிந்தது. நான் உடனே கேட்டை தள்ளியவுடன் அவன் கையை எடுத்துகொண்டு வழியில் கத்தினான். ஆபீசர் இதையெல்லாம் கவனிக்கவில்லை. நான் அபீசருடன் சென்றுவிட்டேன். அவனும் எங்கள் பின்னாலே வந்து என் ஆபீசை தெரிந்து கொண்டு சென்று விட்டான். மறுநாள் இரவு பதினோரு மணிக்கு ஆபீசுக்கு வந்து கதவை தட்டினான். " கதவை திறடா! உன்னை என்ன செய்கிறேன் பார் ! " என்று கோபமாக பேசினான். நான் ஜன்னல் வழியாக பார்த்தபோது மூன்று பேர் நின்று கொண்டு கோபமாக கத்தினார்கள். எனக்கு பயத்தில் கை கால் உதறல் எடுத்தது. பிறகு ................ 

Thursday 15 September 2011

வளர்ந்தேன்......

                        .................... என் அண்ணன் என் பின்னால் வந்து எனது வலது காதோடு சேர்த்து ஓங்கி ஒரு அடி கொடுத்து "வாத்தியிடம் போய் என்னடா சொன்னாய்?" என்று கத்தினார். அன்று அந்த வலது காத்து கேட்காமல் போனது தான் இன்று வரை சரியாகவில்லை. அத்துடன் எனது அண்ணன்மார் இருவருமே பள்ளிக்கு முழுக்கு போட்டு விட்டார்கள். 
அந்த மீளவிட்டான் கிராமத்தில் படித்த நான் ஒவ்வொரு வகுப்பிலும் முதல் மாணவனாகவே படித்தேன். அதற்காக எனக்கு அந்தந்த வகுப்பிற்குள்ள புத்தகங்கள் பரிசாக கிடைத்து விடும். அந்த கிராமத்து பள்ளியில் ஐந்தாம் வகுப்புகள் வரை தான் இருந்தது. அங்கே முடித்து விட்டு தூத்துக்குடியிலுள்ள எங்கள் சித்தப்பா ( எனது சித்தியின் கணவர் ) ராமசாமி அவர்களிடம் ஏதாவது பள்ளியில் சேர்த்து விடுங்கள் என்றேன். தூத்துக்குடி சேவியர் உயர்நிலைப்பள்ளியில் சேர்த்தார்கள். உயர்நிலைப்பள்ளி என்பதால் படிப்பு சற்று கடினமாகவும் ( ஆங்கிலமும் சேர்த்து படிக்க வேண்டும் ) இருந்தது. எனது சித்தப்பா ராமசாமி அவர்கள் ஒரு சமூக ஆர்வலர்.தனது கையெழுத்து ஆங்கிலத்தில் மட்டுமே போடத்தெரிந்தவர். பள்ளி சென்று   படித்ததில்லை. ஆனால் சாதாரண கிராம அலுவலர் முதல் மத்திய மாநில அமைச்சர்கள் வரை நேரில் துணிச்சலாகவும் தைரியமாகவும் மக்கள் குறைகளை எடுத்து சொல்வதில் வல்லவர். மதுரா கோட்ஸ் மில்லில் பணி புரிந்து ஒய்வு பெற்றவர். பாதிக்கப்பட்டார் யாராயிருந்தாலும் நியாயமான கோரிக்கைகளுக்காக வலிய சென்று அவர்களுக்காக எங்கு வேண்டுமானாலும் போய் வாதாடுவார்.அவர் எனது சித்தியை திருமணம் செய்தால் மட்டும் உள்ள உறவு அல்ல. அவர் எனது தாயாருக்கு தாய்மாமன் திரு மாடசாமி அவர்கள் மகனாவார். அவரது மூத்த  சகோதரன் பாண்டியன் என்பவருக்கு இரண்டு aan குழந்தைக. அதில் மாத்தவன் கரியப்பா என்ற மாடசாமியை இவர்கள் எடுத்து தனது குழந்தையை விடவும் மேலாக வளர்த்து வந்தார்கள். இளையவன் தர்மலிங்கம். தனது பெற்றோருடன் வளர்ந்து வந்தான். 
                       நான் உயர்நிலை பள்ளியில் படித்து வரும்போது லீவு நாட்களில் என் தந்தையுடன் உப்பளத்து வேலைக்கு செல்வேன். அப்பொழுது மழை இல்லாமல் பஞ்சமாக இருந்தது.ஒரு படி அரிசி நாலனாவாக இருந்தது பஞ்சம் வந்தவுடன் எட்டணாவாக (அரை ரூபாய் ) இருந்தது. (ஒரு ரூபாய்க்கு பதினாரனா ) தூத்துக்குடியில் பயறு வகைகளை அவித்து வியாபாரம் செய்யும் குருசாமி என்பவர் கடை இருந்தது. அந்த கடையில் என் தந்தை நான் எப்பொழுது வந்து என்ன கேட்டாலும் என் கணக்கில் எழுதி கொள்ளுங்கள் என்று சொல்லி இருந்தார். அந்த கடையில் பயறு வாங்கி சாப்பிடவே பள்ளி விட்டவுடன் அங்கே சென்று விடுவேன்.ரெண்டணாவுக்கு பயறு வாங்கி தின்றபடியே ரெயில் தண்டவாளம் வழியே நடந்தே  ஊருக்கு வந்துவிடுவேன்.தினசரி இந்து கிலோமீட்டர் நடந்தே சென்று படித்து வருவேன். வீட்டில் அரிசி சோறு என்பது வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுகிழமை மட்டும் தான். மற்ற நாட்களில் கம்பு களி தான். சில நாட்களில் மத்யானம் பள்ளியிலிருந்து அந்த கம்பு களியை என் சித்தி வீட்டிற்கு கொண்டு செல்வேன்  அங்கே அந்த கம்பு களிக்கு குழம்பு ஊற்றி தருவாள். சிலநாட்களில் அரிசி சாதமே தருவாள். ஒரு நாள் நண்பர்களோடு தூத்துக்குடியில் சினிமாவுக்கு சென்று விட்டு இரவு ரெண்டு மணிக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன். அது ஒரு மேகாற்று காலம். நான் தூங்கி கொண்டே கனவு கண்டு கொண்டு வந்தேன். கனவு முள் செடிகள் வெட்டி குவியல் குவியலாக போடப்பட்டுள்ளது. அந்த முள் செடி காற்றில் உருண்டு வருகிறது. நாம் அங்குமிங்கும் விலக பார்க்கிறேன் முடியவில்லை. கடைசியில் அந்த முள் செடியை என் தலையால் முட்டி தாங்கி கொள்கிறேன். திடுக்கென்று கண்விழித்து பார்த்தால் ஒரு முள் மரத்தின் மீது தலையை முட்டி கொண்டு நிற்கிறேன். என் நண்பர்கள் எல்லோரும் சிரித்து கொண்டு என்னை தள்ளி விட்டு அப்புறம் வீட்டிற்கு கூட்டி கொண்டு வந்தார்கள்.

                                       மற்றொரு சமயம் பள்ளிக்கூடம் விட்டு தூத்துக்குடியிலிருந்து   வந்து கொண்டிருந்தேன். அது ஒரு கார்த்திகை மாதம். ஓலை கொழுக்கட்டை ரொம்ப விசேஷம். அதற்கு பனை மரத்து குருத்தோலை தேவை. நான் வரும் வழியில் சின்னக்கன்னுபுரம் என்ற ஊர் அருகில் ஒரு பனை மரத்தில் ஏறிவிட்டேன். ஓலையயும் வெட்டி கீழே போட்டு விட்டேன். ஆனால் .....................

Tuesday 13 September 2011

பிறந்தேன் .......

                          அந்த சாபத்தின் விளைவாக ஐந்தாறு தலை முறையாக அந்த குடும்பத்தில் பெண் குழந்தையே பிறக்கவில்லை. ஆறாவது தலை முறையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் வழியாக வந்தவர்களை இன்று வரை ஆறாம் வீட்டு வம்சம் என்று அழைத்தார்கள். அந்த வழித்தோன்றலில் வந்தவர்தான் திருவாளர் சண்முகம். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் முறையே ஆண்டி,சுப்ரமணியன் , வேலு, கந்தன் என்ற கந்தசாமி. பெண்மக்கள் பார்வதி, மணிமுத்து. பார்வதியை மீளவிட்டனிலும் மணிமுத்து புதிம்புத்தூரிலும் மணமுடித்து வாழ்ந்தார்கள்.
மீளவிட்டான் ( என் சிறு வயது மற்றும் இளவயது ஊர் )

மீளவிட்டான் என்பது ஒரு காரணப்பெயர்.கம்பர் வடபுலத்தில் ஊருராக போய் பாடி பரிசுபெற்று தென்புலம் வந்தார்.அப்படி வரும்போது இந்த ஊர் ஆடு மாடு மேயும் மந்தையின் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார். உடனே புதிய நபரை பார்த்தவுடன் ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் அதிசயமாக பார்த்து அவர் அருகில் ஓடி வந்து நீங்கள் யார் என்று கேட்க, "நான்தான் கம்பர் பல மன்னர்களிடம் பாடி பரிசு பெற்று தென்திசை போகலாம் என்று வந்திருக்கிறேன்." என்றார். "கம்பர் என்று சொல்கிறீர்களே இது என்ன எழுத்து என்று சொல்லுங்கள்" என்று ஒரு நெளிந்த கோடு போட்டு காட்டினார்கள். "இது ஒரு எழுத்தே இல்லையே. நீங்கள் பள்ளிக்கூடம் போவதில்லையா ?" என்று கேட்டார். உடனே சிறுவர்கள் அவரை பார்த்து ஏளனமாக சிரித்து நாங்கள் பள்ளிக்கூடம் போனால் இந்த ஆடு மாடை மேய்ப்பது யார்? நீங்களோ பெரிய புலவர். இந்த எழுத்தை சொல்ல முடிய வில்லை. இது மாட்டினுடைய நடை மோள்" என்றனர். உடனே கம்பர் சிரித்து கொண்டார். அவர்கள் அறியாமையிலும் அறிவுடன் சொல்வதை நினைத்து.சிறுவர்களுள் ஒருவன் " நான் சொல்வதை நீங்கள் எழுத முடியுமா? " என்று கேட்டான். உடனே கம்பர், சொல்வதை எழுத முடியாதா? என்று நினைத்து கொண்டு "சொல் எழுதுகிறேன்"  என்றார் . உடனே ஆடுமாடுகளை அழைக்கும் ஒலியை நாக்கை மடித்து உள்ளுக்குள் கன்னத்தில் எழும் ஒலி ஒன்றை எழுப்பினான். ( ஏனென்றால் கம்பராலே எழுத முடியாத அந்த வார்த்தையை நான் மட்டும் இங்கே எப்படி எழுதி காட்ட முடியும் ) இதை எப்படி எழுத முடியும் என்று கம்பர் திகைத்து எழுந்து கொண்டார். உடனே சிறுவர்கள் "ஹே  ஹே உங்களுக்கு எழுத முடியவில்லையே" என்று ஏளனமாக சிரித்தார்கள்..கம்பர் திகைத்து இதற்கு தெற்கே நம்மை மீளவிடான் என்று கூறி வடபுலம் பெயர்ந்தார். அது முதல் அந்த ஊர் மீளவிடான் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் மருவி மீளவிட்டான் என்று இன்று வரை அழைக்கப்படுகிறது.
                          கந்தன் என்ற கந்தசாமிக்கு ( எனது தந்தை ) மீளவிட்டனில் செம்பன் என்ற செம்புலிங்கம் மகள் பேச்சியம்மாளை மனமுடித்துவைத்தார்கள்.  அதுமுதல் அவர்கள் மீளவிட்டானிலேயே இருந்து குடும்பம் நடத்தி வந்தார்கள். இந்த பேச்சியம்மாள் ( எனது தாயார் ) உடன் பிறந்தவர்கள் சிவலிங்கம், சன்னாசி, செம்புலிங்கம், மற்றொரு  சிவலிங்கம் கடைசியாக தங்கை ராமு ஆவார்கள் .  தங்கை ராமுவை தூத்துக்குடி சண்முகபுரத்தில் வசித்துவந்த குப்பான் என்ற ராமசாமிக்கு மணமுடித்து அவர்கள் தூத்துக்குடியிலேயே வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு குழந்தை இல்லை. 
பிறந்தேன் 
கந்தன் பேச்சியம்மாள் இருவரும் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு வடிவேல் என்ற ஆண்மகன் பிறந்து ஏழாவது வயதில் மரணமடைந்தார். அடுத்து சண்முகக்கனி, வேலம்மாள் ஆண்கள் ராமர் லெட்சுமணன் என்ற இரட்டையர்களும் அடுத்ததாக ராமசாமி ( நான் தான் ), ராமலிங்கம் கடைசியாக இலங்காமணி என்ற பாப்பா ஆகியோர் பிறந்தனர்.
வளர்ந்தேன் 
24-09-1940 ல் நான் பிறந்தபோது நல்ல மழையும் செழிப்புமான காலமாகவே அந்த ஊர் திகழ்ந்திருக்கிறது. அக்கால மூட வழக்கப்படி பெண்கள் பள்ளிசென்று படிக்கக்கூடாது என்று எனது அக்காள்கள் இருவரும்  பள்ளியில் சென்று படித்ததில்லை.  ஆனால் எனது அண்ணன்கள் ராமர் லெட்சுமணன் இருவரும் பள்ளியில் சேர்த்தும் படித்ததில்லை. நான் ரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் எனது மூத்த அண்ணன் ராமர் பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கு நேரமாகிவிட்டதே நீ வராவிட்டால் நீ விளையாடிகொண்டிருக்கிறாய் என்று ஆசிரியரிடம் சொல்லிவிடுவேன் என்று கூறினேன். அதற்கு அவர் ஆசிரியரை வாய்க்கு வந்தபடி திட்டினார். குருபக்தி அதிகம் கொண்ட நான் ஆசிரியரிடம் என் அண்ணன் வசைபாடியதை அப்படியே சொல்லிவிட்டேன். ஆசிரியர் வழக்கம்போல் பெரிய பையன்களை அனுப்பி என் அண்ணனை அழைத்து வரச்செய்து நன்கு அடி கொடுத்து கவனித்து அனுப்பி விட்டார். அன்று பள்ளி முடிந்தவுடன் நான் நேரடியாக வீடு சென்று விடுவது வழக்கம். ஆனால் என் அண்ணன்கள் மற்ற பையன்களோடு சில்லான்குச்சி ( இப்போதைய கிரிக்கெட் ) விளையாடிவிட்டு தான் வருவார்கள். அன்று மாலை ஒரு உரல் மீது உட்கார்ந்து கம்பு சாப்பிட்டு கொண்டிருந்தேன் ( கம்பு கதிரிலிருந்து பிரித்தெடுத்து பச்சையாக சாப்பிடுவது தனி ருசி )  

                                                                                                                                 அப்போது ......

Monday 12 September 2011

முன்னோர்கள்!

                                   என் முன்னோர்களின் மூலக்கதை 

                 சுமார் பதினேழாம் நூற்றாண்டின் பிற்பகுதியில்  அப்பொழுதுள்ள திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடியிலிருந்து  சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்திலுள்ள திம்மராஜபுரம்  என்ற குக்கிராமத்தில் மிகவும் பின்தங்கிய  ஏழை மக்கள்  வாழ்ந்துவந்தார்கள்.  அப்பொழுது இரண்டு மூன்று வருடங்கள்  மழை இல்லாத காரணத்தால் வறட்சி ஏற்ப்பட்டதால்  அங்குள்ள சிலர் குடிபெயர்ந்து செழிப்பான கிராமங்களை தேடிப்போனார்கள். அதில் ஒரு குடும்பம் திருசெந்தூர் அருகிலுள்ள  காயாம்புளி என்ற ஊரில் போய் தங்கினார்கள்.
 
                    அங்கே நெல் அறுவடை சமயம் நெல் களத்தில் பணி புரியும் பெண்கள் ஒரு ஆண் குழந்தை ( ஒரு வயது மதிக்கத்தக்கது ) அழுது கொண்டிருந்ததை பார்த்து அதை எடுத்து வைத்திருந்தார்கள். இரவாகியும் ஒருவரும் தேடி வரவில்லை. அந்த நெல் களத்திலேயே இரவு தங்கியவர்கள் அந்த குழந்தைக்கு பால் வாங்கி புகட்டினார்கள். அந்த குழந்தையின் அழகையும் அது சிரிப்பதையும் பார்த்த ஒரு பெண் "எனக்கு திருமணமாகி பத்து வருடமாகியும் குழந்தை பிறக்கவில்லை. ஆகையால் இந்த குழந்தையை நானே வளர்த்து கொள்கிறேன்"  என்று அவ்வூர் நாட்டன்மையிடம் கெஞ்சினாள்  மூன்று  நாளாகியும் குழந்தையை தேடி யாரும் வரவில்லை. 
                   அடுத்த நாள் நாட்டாண்மை அந்த குழந்தை இல்லாபெண்ணிடம் நீயே குழந்தையை வளர்த்து கொள் என்று கூறிவிட்டார். அவளுக்கோ சந்தோசம் உடனே அவள் தன் கணவரிடம் நாளைக்கே நாம் நம் ஊர் திம்மராஜபுரத்திற்கு சென்று விடுவோம். தாமதித்தால் வேறு யாராவது என் குழந்தை என்று வந்து விடுவார்கள் என்று சொன்னாள். உடனே அந்த குடும்பம் தங்கள்  சொந்த ஊரான  திம்மராஜபுரத்திற்கே வந்துவிட்டார்கள். 
                  ஊரைவிட்டு அவர்கள் சென்று இரண்டு வருடங்கள் கழித்து வந்ததால் இந்த குழந்தை அவர்கள் பெற்ற குழந்தையாக தான் இருக்கும் என்று அந்த ஜனங்கள் எண்ணி கொண்டார்கள். அப்பொழுது முதல் அங்கு நல்ல மழை பெய்து ஊர் செழிப்பானது. என் குழந்தை வந்த யோகம்  தான் இங்கு மழை வந்து ஊர் செழிப்பாக இருக்கிறது என்று அந்த குழந்தையை எடுத்து வந்தவர்களும் ஊர் மக்களும் சந்தோசப்பட்டார்கள். வருடங்கள் பல கடந்தன. பன்னீரண்டு வயதான அந்த பையன் பக்தியில் சிறந்து விளங்கினான். பள்ளிகூடங்கள் இல்லாத அந்த காலத்தில் சிறிதளவே படித்திருந்தான். அவனை அங்கு உள்ள கோயில் பூசாரியாக ஊரார் நியமித்து கோயிலுக்கு பூஜை செய்ய சொன்னார்கள். அவன் பூஜை செய்த காலம் முதல் பல வருடங்கள் அவ்வூர் செல்வசெழிப்பாக இருந்தது. அந்த குடும்பம் அடுத்தடுத்து வரும் தங்கள் முதல் மகனை பூஜரியாக்கினார்கள். ஆகையால் அந்த வீட்டார் குடும்பத்தை பூசாரி குடும்பம் என்றே அனைவரும் அழைத்தார்கள். நாளடைவில் அது அய்யர் வீட்டு குடும்பம் என்று அழைக்கவும் செய்தார்கள். 

பதினெட்டாம் நூற்றாண்டில் அந்த குடும்பம் பல ஊர்களிலும் பரவலாக வாழ்ந்து வந்தார்கள். குறிப்பாக புதியம்புத்தூர் கோரம்பள்ளம் ஒனமாக்குளம் தூத்துக்குடி போன்ற ஊர்களில் அதிகம் வாழ்ந்து வந்தார்கள் 
அவர்களில் பெரும் பாலானவர்கள் இசைகலைங்கர்களாக இருந்தார்கள். அந்தசமயம் திம்மராஜபுரத்தில் வாழ்ந்த அந்த குறிப்பிட்ட ஒரு குடும்பத்தில் ஏழு அண்ணன் தம்பிகளுக்கு ஒரே தங்கை. யாருக்கும் திருமணம் ஆகவில்லை. அந்த காலத்தில் பெரும்பாலான மக்கள் கள் அருந்துவதை பழக்கமாக கொண்டிருந்தார்கள். அப்படி ஒரு நாள் அந்த அண்ணன் தம்பிமார் கள்ளுக்கடையில் கள் அருந்திவிட்டு வரும்போது தூரத்திலிருந்து அவர்கள் வீட்டை பார்க்கும்போது யாரோ ஒரு பெண் உரலில் ஏதோ இடித்து கொண்டிருப்பதை கண்டார்கள். உடனே அவர்களில் ஒருவன் அந்த பெண் எவ்வளவு அழகாக இருக்கிறாள் பார் அவளை நானே திருமணம் செய்துகொள்வேன் என்று சொல்ல அடுத்தவன் இல்லை நான் தான் அவளை திருமணம் செய்வேன் என்று சொல்ல இப்படியே ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டே வீட்டை நெருங்கி விட்டார்கள் . பக்கத்தில் வந்து பார்த்தால் அது அவர்கள் ஒரே தங்கை தான். சகோதரர்கள் அதை நினைத்து மிகவும் வருந்தினார்கள். நீ தான் முதலில் சரியாக பார்க்காமல் சொல்லிவிட்டாய் என்று ஒருவருக்கொருவர் மனம் வருந்தி பேசி கொண்டார்கள். கடைசியாக ஏழு பேரும் சேர்ந்து ஒரு முடிவெடுத்தார்கள். தினசரி நமது தங்கையை பார்க்கும்போது நமது மனம் வேதனை படும் அந்த வேதனையை நம்மால் தாங்க முடியாது. ஆகையால் நம் மனதை கல்லாக்கி நம் ஒரே தங்கையை கொன்று விடுவது என்று முடிவெடுத்தார்கள். வீட்டில் ஒரு அறை தனியாக கட்டவேண்டும் என்று சொல்லி அதற்கு வானம் தோண்ட வேண்டும் என்று ( அந்த காலத்தில் ஆழமான அந்த குழியை வனம் தோண்டுதல் என்று தான் சொல்வார்கள் ) ஆழமான குழியை வெட்டினார்கள். அதில் பணம் விழுந்து விட்டது என்றும் அதை எடுக்க வேண்டும் என்று சொல்லி தங்கையை உள்ளே இறக்கி விட்டார்கள். உடனே மேலே இருந்து மணலை வீசி உள்ளே வைத்து தங்கையை மூடினார்கள். அவள் கத்தினாள். கதறினாள். உங்களுக்கு ஏழேழு ஜென்மத்திற்கும் பெண் குழந்தையே பிறக்காது என்று சாபமிட்டாள்.                                                                                

                                                                                                                                பிறகு ........

Sunday 11 September 2011

என் சொந்தங்களே!

என் 
சொந்தங்கள் தந்த சுகங்களையும் 
சொந்தங்களினாலான சோகங்களையும் 
இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
என் சொந்தங்களே !

அன்புடன் 
MSKR