Saturday 17 September 2011

காவல் துறையில் வேலை !

                       நான் அவர்களிடம் "எதுவாயிருந்தாலும் காலையில் வாருங்கள் ஆபீசர் இருப்பார் அவரிடம் சொல்லுங்கள்" என்று கூறினேன். அவர்கள் மேலும் கதவை உடைப்பது போல் வேகமாக தட்டினார்கள். அப்பொழுது தான் அன்று காலையில் தலைமை குமாஸ்தா செல்வி வேதவல்லி அவர்கள் யார் யாருக்கு எப்படி பேசவேண்டும் என்றும் அதில் இருக்கும் மற்றொரு விஷயத்தையும் எனக்கு சொல்லி தந்திருதார்கள் அது எனக்கு ஞாபகத்தில் வந்தது. டெலிபோனில் குறிப்பிட்ட ஒரு நம்பரை டைப் செய்து விட்டு ரிசீவரை வைத்து விட்டால் சிறிது நேரத்தில் யாரோ நம்மை கூப்பிடுவது போல் டெலிபோன் மணி அடிக்கும். அந்த ஞாபகம் எனக்கு வந்தது. போனை டயல் செய்வது போல் ரிசீவரை காதில் வைத்து கொண்டு " ஹலோ! போலிஸ் ஸ்டேசனா? இங்கு காதர் ஆபீசில் இருந்து பேசுகிறேன். மூன்று பேர் இங்கு வாசலில் வந்து கலாட்டா செய்கிறார்கள். நான் தனியாக இருக்கிறேன் ஐயா! உடனே வாருங்கள்" என்று சொல்லி அந்த குறிப்பிட்ட நம்பரை டைப் செய்து ரிசீவரை வைத்து விட்டேன். போன் இருக்குமிடம் ஜன்னலில் இருந்து பார்த்தால் தெரியும். உடனே போன் ரிங் வந்தது. நான் போனை எடுத்து " சார் சப் இன்ஸ்பெக்டர் ஐயாவா? உடனே வாருங்கள்! ஆமாம் பயத்தில் அட்ரஸ் சொல்லாமல் இருந்து விட்டேன். கடலங்குடி தெரு நாற்றி பதினொன்னாம் நம்பர் சென்ட்ரல் காதி ஆபீஸ் என்று போனை வைத்து விட்டு ஜன்னல் வழியாக பார்த்தேன். மூன்று பெரும் தலை தெறிக்க ஓடிக்கொண்டிருதார்கள். அன்று இரவு தூங்கவே இல்லை.
                               கும்பகோணத்தில் ஆறு மாதங்கள் வேலை பார்த்தேன். அந்த சமயம் கடலூர் திருப்பதிரிபுளியூர் மாவட்ட காதர் ஆபீசில் இரவு காவலர் வேலை காலியாக இருந்தது. அண்ணாச்சி ஜோதிமுத்து முயற்ச்சியால் அந்த வேலையை எனக்கு வாங்கி விட்டார்கள். ஒரு வாரத்தில் திருப்பதிரிபுளியூர் மாவட்ட காதர் ஆபீஸ் வந்து வேலையில் சேர்ந்தேன். ஆபீசர் திரு எ.பிச்சாண்டி அவர்கள் மிகவும் நல்லவர் கறாரான பேர்வழி. அவருக்கு அனைவரும் பயந்து நடுங்குவார்கள். எனக்கு சாப்பாடு அண்ணாச்சி ஜோதிமுத்து வீட்டில். அண்ணி லக்சுமி நல்ல முறையில் என்னை கவனித்து கொண்டார்கள். சாப்பிட மட்டும் தான் வீட்டிற்கு செல்வேன் மற்ற நேரங்களிலெல்லாம் ஆபீசில் இருப்பேன். ஆபீசில் அனைவருமே மிகவும் நல்லவர்கள். நல்ல பழக்கமாகிவிட்டார்கள்.
                       
                          தலைமை குமாஸ்தா திரு.சுப்பிரமணிய அய்யர் என்னை தன்உடன் பிறவா சகோதரனை போல் நடத்தினார்கள். அவரது வீடு ஆபீசுக்கு பின் பக்கமுள்ள அக்ரஹாரத்தில் இருந்தது, அடிக்கடி வீட்டிற்கு சாப்பிட அழைத்து செல்வார் அவரது மனைவி சாவித்திரி. மகள் மைதிலி ரெண்டு வயது குழந்தை.என்னிடம் மிகவும் பிரியமாக பழகிவிட்டது. சில நாட்களில் இரவு ஒன்பது மணிக்கு மேல் ஆபீசுக்கு அந்த குழந்தை மைதிலியுடன் வந்து உன்னிடம் தான் போகவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறாள் நீயே தூங்க வை" என்று தந்து விட்டு போவார் நான் அந்த குழந்தையை தூங்க வைக்க  வெகுநேரம் ஆகிவிடும்.ஒருசமயம் அண்ணி லக்சுமிக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அவருக்கு ரத்தம் கொடுக்க வேண்டுமென்று டாக்டர் சொல்லிவிட்டார். அந்த குரூப் ரத்தம் கிடைக்கவில்லை. எனது ரத்தம் "o" குரூப் இது எல்லா குரூப்புக்கும் சேரும் என்று சொன்னார்கள். உடனே நானே முன்வந்து ரத்தம் கொடுத்து அவர்கள் உயிரை காப்பாற்றினேன்.

                                    தலைமை குமாஸ்தா திரு சுப்பிரமணிய அய்யர் அவர்களுக்கு மாவட்ட போலிஸ் அலுவலகத்தில் பணிபுரியும் தலைமை குமாஸ்தா திரு சீனிவாசன் அவர்கள் நெருங்கிய நண்பர்.அடிக்கடி என்னிடம் கடிதம் மற்றும் பொருட்கள் கொடுத்து அனுப்புவார். அதை அவரிடம் கொண்டு கொடுப்பேன். சில நேரங்களில் அவரர் இவருக்கு ஏதாவது கொடுத்து அனுப்புவார். இப்படி ஒருநாள் மாவட்ட காவல் அலுவலகம் சென்று திரு சீனிவாசன் அவர்களிடம் லட்டரை கொடுத்து வரசென்றேன். அப்போது அவர் "நீ நல்ல உயரம் மார்பளவேல்லாம் போலிஸ் வேலைக்கு சரியாக இருப்பாய் என்று எண்ணுகிறேன். 15-101960 ல் இங்கு போலிஸ் தேர்வு இருக்கிறது நீ காட்டாயம் கலந்து கொள் செலக்ட் ஆகிவிடுவாய்" என்று சொன்னார். திரு சுப்பிரமணிய ஐயரிடமும் தொலைபேசி மூலம் "ராமசாமியை போலிஸ் செலச்சனுக்கு அனுப்பி விடுங்கள். நிச்சயம் செலக்ட் ஆகி விடுவான்" என்று சொல்லி இருக்கிறார். நான் ஆபீஸ் வந்தவுடன் "ராமசாமி உனக்கொரு யோகம் காத்திருக்கிறது என்று நினைக்கிறேன். போலிஸ் ஸ்டேசனில் நண்பர் உன்னிடம் என்ன சொன்னார். நீ கட்டாயம் கலந்து கொள் அந்த வேலை உனக்கு கிடைக்குமென்று சொன்னார் . சரியென்று சொல்லிவிட்டு அண்ணன் ஜோதிமுத்து அவர்களிடம் சொன்னேன் . அவர் "அதெல்லாம் வேண்டாம்பா.போலிஸ் வேலை எவ்வளவு பொறுப்பான வேலை. அதெல்லாம் உனக்கு சரிப்பட்டு வராது." என்றார். நான் ஒன்றும் சொல்ல வில்லை. மறுநாள் அண்ணனிடம் திரு.சுப்பிரமணிய அய்யர் அவர்கள் சொல்லி அவரை சம்மதிக்க வைத்தார். 
         15-10-1960 அன்று காலை 8.00 மணிக்கு கடலூர் மாவட்ட போலிஸ் அலுவலகத்தில் ஆஜரானேன். திரு.பி.பரமகுரு I .P .S அவர்கள் அன்று தான் மாவட்ட கண்காணிப்பாளராக பதவி ஏற்றிருந்தார்கள். தேர்வு ஆரம்பித்தது.சுமார் நூறு பேர் வரிசையில் நின்றோம். எனக்கு  முன் முப்பது பேர்கள் தேர்வாகாமல் கழிக்கப்பட்டார்கள். அதில் ஒருவர் மட்டும் தேர்வாகி உட்காரவைக்கப்பட்டிருந்தார். அடுத்து நான் தேர்வானேன். அன்று நூறு பேரில்  மொத்தம் ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் உடலளவு, உயரம், மார்பளவு, மூச்சை அடக்கி மார்பை விரித்து காட்ட வேண்டும் அவ்வளவு தான். ஏழு பேரில் ஒருவர் எனக்கு முன் நின்றவர் உயரத்தில் அரை அங்குலம் குறைவதாக சொல்லி வெளியே அனுப்பப்பட்டவர் திரும்ப தேர்வாகி ஏழு பேரில் ஒருவராக இருந்தார். நான் எப்படி உயரம் சரியானதென்று கேட்டேன். "அந்த பயங்கரத்தை பிறகு சொல்கிறேன்" என்று சொன்னான். தேர்வு முடிந்து மெடிக்கல் செக் அப் போக வேண்டும் அதிலும் தேர்வானால் தான் தேர்வே உறுதி செய்யப்படும் என்று சொல்லி அனுப்பினார்கள்.                                                                                                                                         பிறகு ...........

1 comment:

  1. Ovvoru paguthiyum padikka romba nalla irukku, ungalukku eppadi ellaa sambhavangalum nyabagam irukkirathendru naangal viyanthu pogirom.... Engalukkellam pona maadham nadandhathu kooda ninaivil illai... Really great mama!!

    ReplyDelete