Friday 16 September 2011

வேலைகளுக்கு சென்றேன் !

                            .................பனைமரத்தில் இருந்து கீழே பார்த்தபோது மிகவும் பயமாக இருந்தது.  தலை சுற்றியது, சூரியன் மறைந்தபின் கீழே இறங்கலாம் என்று மரத்திலேயே இருந்துவிடுவோம் என்று இருந்தேன்,  பொழுது அடைந்தது, கீழே பார்த்தால் ஒரே இருட்டாகவே தெரிந்தது,  உடனே மளமள என்று எறங்கினேன், ஓலையை எடுத்துக்கொண்டு வீட்டிற்கு போனேன், 
வீட்டில் எல்லோரும் என்னை எதிர்பர்த்த்கொண்டிருந்தர்கள்,  வீட்டில் ஓலை கொழுக்கட்டை செய்து தந்தார்கள், மிகவும் சுவையாக இருந்தது, 
                             1952   எனது மூத்த சகோதரி சண்முகக்கனி திருமணம் , மணமகன் குரும்பூர் பக்கமுள்ள தெற்கு நல்ல்லூர், திரு பழனி அவர்கள் மகன்  முனியசாமி, மிகவும் நல்ல விவசாய குடும்பம் ,  வீட்டுக்கு ஒரே பிள்ளை, தந்தையும் இல்லை, என் சகோதரியை கண்கலங்காமல் நல்லவிதமாக  கவனித்து குடும்பத்தை நடத்தி வந்தார் , சகோதரியின் பாசம் அடிக்கடி தெற்கு நல்ல்லூர் நடந்தே சென்று வருவேன் , 1955 தந்தை காலமானார்,  எனது  படிப்பையும் நிறுத்திவிட்டேன்,  பள்ளி செல்ல ஆர்வம் இல்லை,
                                    எனது சகோதரர்கள் என்னை குலையன்கரிசல் என்ற ஊரில் ஒரு வீட்டில் வேலைக்கு  சேர்த்துவிட்டார்கள். அங்கே அந்த வீட்டில் சொல்லும் வேலைகளை செய்ய வேண்டும். காட்டில் மேய்ந்து வரும் மாடுகளை தொழுவத்தில் கட்டி அதற்கு தீவனம் தண்ணீர் வைக்க வேண்டும். வீட்டிலுள்ள அனைவருக்கும் என்னை ரொம்பவும் பிடித்து விட்டது. அந்த குடும்ப தலைவர் பெயர் வி.பி.ரெங்கசாமி நாடார். அவர் குழந்தைகள் இரண்டு பேர் இந்நாளில் வி.பி.ஆர்.சுரேஷ் , வி.பி.ஆர்.ரமேஷ். ஒருவர்  பஞ்சாயத்து யூனியன்   தலைவராகவும்  ஒருவர் தூத்துக்குடி  தொகுதி எம்.எல்.ஏ ஆகவும் வந்தார்கள். எனது ஏற்னடாவது சகோதரி வேலம்மாளுக்கு என் தந்தை உடன் பிறந்த அத்தை பார்வதி அவர்கள் மகன் பெருமாளுக்கும் திருமணம் நடந்தது. 

                                  அதன் பின் அம்மா என்னை குலையன்கரிசல் அனுப்பாமல் மீளவிட்டானிலேயே விவசாய தொழில் பார்க்கும்படி சொன்னார்கள். நானும் அம்மாவுடன் இருந்தேன். எனது தாய் மாமா சன்னாசி என்னை மீளவிட்டானில் முத்துசாமி நாடார் வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டார். அங்கு அவர்கள் புஞ்சையில் விவசாய தொழில் செய்வதும் மாடுகளை கவனித்து கொள்வதும் எனது வேலை. அப்பொழுது அங்குள்ள ஆடுகளை கவனித்து கொள்ள அய்யாசாமி நாடார் என்பவர் இருந்தார். அவர் அடிக்கடி வேலைகளை பற்றி அறிவுரை சொல்வார். அங்கு வேலை செய்து வந்த தூண்டில் கோனார், வெள்ளைப்பழ நாடார் உளவு செய்வது விதை விதைப்பது என்பது பற்றி நன்றாக சொல்லித்தந்தார்கள். எனக்கு முத்துசாமி நாடார் வீட்டிலேயே சாப்பாடு மற்றும் தங்குவது எல்லாம்  ஏற்பாடு செய்திருந்தார்கள்.  அங்கு அவர்களுடைய மனைவி தங்கத்தாயம்மாள் மிகவும் நல்லவர். என்னை  தன் பிள்ளையை போல் கவனித்தார்கள். என்னை நன்றாக வளர்த்தார்கள் என்றே சொல்ல வேண்டும். அதனால் தான் பின்னாளில் எனது உடல் வாகு காவல் துறையில் சேர தகுதிபெறும் அளவிற்கு இருந்தது. அவர்கள் மக்கள் எம்.பி.எம். கொளுவைய்யா, எம்.பி.எம்.சௌந்தரபாண்டியன் அவர் மனைவி செந்தூர்கனி, எம்.பி.எம்.ராஜவேலு அவர் மனைவி அழகு,எம்.பி.எம்.மகாராஜ ( இவர் ஒரு எழுத்தாளர். நடிகர்  திலகம் சிவாஜி என்றொரு பத்திரிக்கையே நடத்தினார்.) மற்றும் ராஜகனி அவர் கணவர் சுனா.பினா.அய்யாசாமி நாடார் செந்தூர்கனி,ஷன்முககனி அவர் கணவர் எம்.டி.ஆபிரஹாம்,ராஜாத்தி பாப்பா அவர் கணவர் ஜெயக்கொடி. மற்றும் முத்துசாமி நாடாரும் அவர் தம்பி தங்கவேல் நாடாரும் கொழும்புக்கு ஆடு ஏற்றுமதி செய்து வந்தனர். அவர்கள் இருவரும் தரும சிந்தனை உள்ளவர்கள். பொங்கல், தீபாவளி என்றால் அத்தனை ஏழை மக்களுக்கும் ஒரு ரூபாய் (ஒரு ரூபாய் என்பது இபோதைய மதிப்பு நூறு ரூபாய் ஆகும்) கொடுப்பார்கள். ( இவர் ஒரு எழுத்தாளர். மக்கள் திலகம் சிவாஜி என்றொரு பத்திரிக்கையே நடத்தினார்.) அனைவருக்கும் என்னை ரொம்பவும் பிடிக்கும். அந்த நாட்களில் மதுரை வீரன் சினிமா படம் வெளிவந்த நேரம் அந்த படத்தை நூறு தடவை பார்த்துள்ளேன். அந்த படம் முழுவதும் பேசும் வசனங்கள் அனைத்தும் அதே போல் நடித்து பேசும் அளவிற்கு எனக்கு அத்துபடி.
                                1958 ல் எனது அண்ணன் ராமருக்கும் ஸ்ரீவைகுண்டம் அருகிலுள்ள திருப்புளியங்குடி ஊரில் ராஜபாலையா  என்பவர் மகள் ஞானசெல்வத்திற்கும் திருமணம் நடந்தது. சில மாதங்களிலேயே அவர்கள் வாயாடித்தனத்தால் அம்மாவிற்கும் அவர்களுக்கும் பிடிக்கவில்லை. அம்மா அண்ணனிடம் " உன் மனைவியின் வாயாடித்தனம் சரியில்லை. ஆகையால் என் தம்பி கொடுத்த இடம் இதோ மேல்புறம் இருக்கிறது. அதிலொரு வீட்டை கட்டித்தருகிறேன்." என்று சொன்னார்கள். அந்த குறிப்பிட்ட இடத்தில் வீட்டை நாங்களே கட்டி கொடுத்து அந்த வீட்டில் ஓடு போட்டு கொடுத்தோம். அந்த வீட்டில் அவர்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்தார்கள். 
             எனது ஓன்று விட்ட பெரியப்பா திரு. மாசில்லாமணி அவர்கள் கோரம்பள்ளம் பெரியநாட்ச்சியாபுரத்தில் வசித்து வந்தார்கள். அவர்கள் மகன் ஜோதிமுத்து அவர்கள் தென்னார்க்காடு மாவட்டம் கடலூரில் கதர் இலாகாவில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். அவர் ஊருக்கு லீவில் வரும்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு வந்து நலம் விசாரித்து செல்வார். ஒருசமயம் வரும்போது "நீ படித்துவிட்டு இப்படி விவசாய வேலையெல்லாம் செய்யவேண்டாம். என்னுடன் வா. நான் வேலை பார்க்கும் ஆபீசில் உன்னையும் வேலைக்கு சேர்த்து விடுகிறேன்." என்று சொன்னார் நானும் சரி என்று உடனே புறப்பட்டேன். ஆனால் அம்மாவிற்கு மனமில்லை. அம்மா எவ்வளவோ தடுத்தும் நான் அவரோடு புறப்பட்டுவிட்டேன். என்னை வழியனுப்ப மீளவிட்டான் ரெயில் நிலையத்திற்கு என் அம்மா தம்பி ராமலிங்கம் தகை பாப்பா ஆகியோர் வந்து கண்ணீர் மல்க வழியனுப்பிவைத்தார்கள். கடலூர் திருப்பாதிரிபுலியூர்  வந்து சேர்ந்தேன். அண்ணன் ஜோதிமுத்து அவர்கள் மனைவி லட்சுமி மிகவும் நல்ல குணம் அவர்களுக்கு பாக்கியம் என்ற ரெண்டு வயது மகள் என்னிடம் நன்றாக விளையாடி கொண்டிருப்பாள். அண்ணன் ஜோதிமுத்துவிற்கு ரீஜனல் காதி ஆபிசில் வேலை. அங்கு ரீஜனல் காதி ஆபீசர் திரு. தனராஜ் அவர்களிடம் அண்ணனிற்கு மிகுந்த செல்வாக்குண்டு. என்னை அவரிடம் கூட்டி சென்று வேலை கேட்ட முதல் நாளே கும்பகோணம் கடலங்குடி தெருவிலுள்ள சென்றல் காதி ஆபீசில் இரவு காவலாளியாக பணிநியமித்து உத்தரவு தந்து விட்டார். மறுநாள் அவரது ஜீப்பிலேயே என்னையும் அண்ணன் ஜோதிமுத்துவையும் கும்பகோணம் கூட்டிசென்றார். அங்கு சென்ட்ரல் காதி ஆபீசர் திரு.சுப்பாலச்சுமணன் அவர்களை சந்தித்து ஆர்டரை கையில் கொடுத்தேன். ரீஜனல் காதி ஆபீசர் திரு. தனராஜ் அவர்களும், " இது நம் ஜோதிமுத்துவின் தம்பி உங்கள் ஆபீசில் இரவு காவலாளியாக பணி நியமித்திருக்கிறேன். நல்ல பையனாக இருக்கிறான் கவனித்து கொள்ளுங்கள்." என்று சொல்லிவிட்டு சென்றார். அப்பொழுது அண்ணன் ஜோதிமுத்து அவர்கள் என் கையில் ஐம்பது ரூபாயும் கொடுத்து அலுவலக தலைமை குமாஸ்தா செல்வி வேதவல்லி அவர்களிடமும் குமாஸ்தா தியாகராஜனிடமும் " என் தம்பியை கவனித்து கொள்ளுங்கள் ஏதாவது ஒரு ஓட்டலில் மாதசாப்பாட்டிற்கு ஏற்பாடு செய்து கொடுங்கள் " என்று சொல்லிசென்றார். அப்போது ஜீப் டிரைவர் சனஉல்லா அவர்கள் என்னிடம் " தம்பி இந்த பத்து ரூபாயை வைத்து கொள். நானும் இங்கு ஆபீசருடன் அடிக்கடி வருவேன்." என்று சொல்லி சென்றார்கள் 
                                மறுநாள் பணியில் சேர்ந்ததற்கான ரிபோர்டை c k o விடம் கொடுத்தேன். "என்ன வேலை செய்ய வேண்டும். எப்படி நடந்து கொள்ள வேண்டும். என்று எனக்கு அறிவுரை வழங்கினார். அன்றே ஊருக்கு அம்மாவிற்கும் நல்லூர் அக்காவிற்கும் சித்தப்பா ராமசாமிக்கும் லட்டர் எழுதினேன். குமாஸ்தா தியாகராஜன் அவர்கள் ஒரு சாதாரண ஓட்டலுக்கு கூட்டிச்சென்று மாதசாப்பாடு 22 ரூபாய் என்று பேசி 10 ரூபாய் அட்வான்சும் கொடுத்தோம். மூன்றே மாதங்களில் ஆபீசில் அனைவரிடமும் நல்ல பெயர் பெற்றுவிட்டேன். யார் என்ன வேலை செய்ய சொன்னாலும் உடனே செய்து முடித்து விடுவேன். நான் இல்லையென்றால் அவர்களுக்கு வேலையே ஓடாது என்கிற அளவிற்கு எல்லோரும் சொல்லும் வேலைகளையும் செய்து முடிப்பேன். ஒருநாள் ஓட்டல் சப்ளை செய்பவன் இரவு 10 மணிக்கு ஆபீசின் முன் சென்று கொண்டிருந்தான். "சினிமாவுக்கு செல்கிறேன் நீயும் வாராயா? " என்று  கேட்டார் . நான் எப்படி வரமுடியும் ? இந்த நாலணாவை வைத்துகொள்ளுங்கள்." என்று கொடுத்தேன். இப்படி வரும்போதெல்லாம் நாலணா எட்டணா என்று கொடுப்பேன். . அதற்காக அவர் நான் சாப்பிட செல்லும்போது சாப்பாட்டுக்குள்ளே மட்டன் துண்டுகளை ஒளித்து வைத்து சாப்பிட சொல்வார். எனக்கு கூடுதலாக சாப்பாடும் கொடுப்பார். 
                  அக்டோபர் இரண்டு முதல் எட்டாம்தேதி வரை கதர் வாரவிழா நிகழ்ச்சிகள் நடக்கும். மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் பின்னணி பாடகி கச்சேரி ஒரு மண்டபத்தில் நடந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் வாசலில் நின்று குறிப்பிட்டவர்களை மட்டும் உள்ளே அனுப்பும் பணியில் இருந்தேன். கேட் கிரில் கேட். அது சமயம் ஆப்பீசர் வெளியே செல்வதற்கு வந்தார். கேட்டை பிடித்துகொண்டிருப்பவர்களை கவனிக்காமல் நான் கதவை தள்ளினேன். அதில் ஒருவன் விரல் மாட்டி கொண்டது. அவன் " ஆ !" என்று கத்திய பின்புதான் எனக்கு தெரிந்தது. நான் உடனே கேட்டை தள்ளியவுடன் அவன் கையை எடுத்துகொண்டு வழியில் கத்தினான். ஆபீசர் இதையெல்லாம் கவனிக்கவில்லை. நான் அபீசருடன் சென்றுவிட்டேன். அவனும் எங்கள் பின்னாலே வந்து என் ஆபீசை தெரிந்து கொண்டு சென்று விட்டான். மறுநாள் இரவு பதினோரு மணிக்கு ஆபீசுக்கு வந்து கதவை தட்டினான். " கதவை திறடா! உன்னை என்ன செய்கிறேன் பார் ! " என்று கோபமாக பேசினான். நான் ஜன்னல் வழியாக பார்த்தபோது மூன்று பேர் நின்று கொண்டு கோபமாக கத்தினார்கள். எனக்கு பயத்தில் கை கால் உதறல் எடுத்தது. பிறகு ................ 

4 comments:

  1. Appa,

    Ungaloda discipline, hard working mentality, talent, memory, etc ellam hats off. Athu konjam kuda enakku illai grappo konjam varuthama irukku... But this will be a lesson for me.. :)

    Anbu magan

    Anandh

    ReplyDelete
  2. அப்பா இவ்வளவு விஷயஙகள் எங்களுக்கு தெரியாது.
    நாங்கள் நீங்கள் பட்ட கஷ்டங்களை தெரியாத அளவிற்கு எங்களை மிகவும் நல்ல முறையில் வளர்திருக்கிறீர்கள்.

    பிற்காலத்தில் நாங்கள் எழுதுவதற்கு எங்களுக்கு பாசத்தையும் அன்பையும் மட்டுமே கொடுட்துள்ளீர்கள்.

    இப்ப்டி ஒரு உயர்வான தந்தையை கொடுத்த ஆண்டவனுக்கு எங்களுடைய கோடானுகோடி நன்றி.

    ReplyDelete
  3. எனது அன்பு மகளே! மகனே!
    நான் எழுதிய சுய சரிதத்தை படித்துவிட்டு கோடிக்கு மேலான புகழாரத்தை எனக்கு சூட்டி எழுதி இருக்கிறீர்கள். நான் கஷ்டப்பட்டு உங்களை எந்த கஷ்டமும் தெரியாமல் படிக்கவைத்தேன் என்று எழுதி இருக்கிறாய். அத்தனை புகழையும் பெருமையையும் நமது குடும்ப தெய்வம் உங்கள் அன்பு அம்மாவின் காலடியில் சமர்பிக்கிறேன். அத்தனைக்கும் அம்மா தான் கரணம். நான் எனது வேலையே முக்கியம் என்று போய் விடுவேன். இப்பொழுது நீங்கள் தங்கள் ஒரு குழந்தையை பள்ளிக்கு அனுப்ப இருவரும் ( தாய், தந்தை ) படும் கஷ்டத்தை என்னை பார்க்கிறேன். நீங்கள் நான்கு பெரும் கிட்டத்தட்ட இரண்டு வயது நான்கு வயது வித்தியாசம் தான் உங்களை பள்ளிக்கு அனுப்பவோ, சற்று உடல் நலம் சரியில்லை என்றால் டாக்டரிடம்செல்லவோ எல்லாமே அம்மாதான். அந்த அன்பு தெய்வத்தை நாம் எந்த காலத்திலும் மறக்கக்கூடாதம்மா. மறக்கவும் மாட்டீர்கள். நானும் கடமை தான் முக்கியம் என்று பணியில் நேர்மை ,நேரம் தவறாமை என்று உழைத்ததின் பயனாகத்தான் காவல் துறையில் காவலராக பணியில் சேர்ந்த ஐந்து வருடங்களில் பதவி உயர்வு பெற்று ரைட்டராகவும் ( எழுத்தர்) ஆறு வருடங்களில் தலைமை காவலராகவும் அதுவும் மாவட்டத்திலேயே முதலாவதாக வெற்றி பெற்றேன். பதினைந்து வருடத்தில் உதவி ஆய்வாளராகவும் ( சப் இன்ஸ்பெக்டர்)இருபத்தி எட்டாவது வருடத்தில் ஆய்வாளராகவும் பதவி உயர்வு பெற்று நூற்றுக்கும் மேலான பரிசுகளும் ( ரிவார்ட்ஸ் ) மற்றும் ஒரு M.Sc. (meritorial service)அவார்டும் பெற்றேன். தண்டனை என்பது ஒரே ஒரு தற்காலிக கரும்புள்ளியாக ( deffered black mark ) ( ஆறு மாதத்தில் தானாகவே அது நீக்கப்படும் ) பெற்றேன்.ஆகையால் அத்தனை பெருமையும் புகழும் உங்கள் அன்னைக்கே. உங்கள் வாழ்த்துக்களுக்கு என் மனமார்ந்த மகிழ்ச்சியை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  4. அசத்திவிட்டீர்கள் அப்பா....அருமையான ஞாபக சக்தி...அதைவிட அந்த கால கட்டத்தில் நமக்கு உதவி செய்த ஒவ்வொரு நபரின் பெயரையும் நினைவில் வைத்திருப்பது உணமையான விசுவாசத்தை காட்டுகிறது.ஏனெனில் இக்கால கட்டத்தில் அதுதான் மறைந்து கொண்டிருக்கிறது.

    ReplyDelete