Tuesday 20 September 2011

காவலர் பயிற்சி பள்ளி !

                  18.10.1960 மெடிக்கல்  செக் அப்க்கு  மாவட்ட  போலீஸ் ஆபீசுக்கு   போனேன் .  அங்கு    16  மற்றும்  17 தேதிகளில்   தேர்வான மொத்தம்   15 பேரும்   அரசு   மருத்துவமனைக்கு   ரிசர்வ்   சார்ஜன்ட்   ஒருவர்   அழைத்து  சென்றார் .  அப்பொழுது    உயரம்   குறைவான   வெளியே   போனவன் எப்படி   தேர்வனான்   என்பதை  என்னிடம்  ரகசியமாக  சொன்னான் ,   அவன்  " ஒயரம்  குறைந்து  விட்டதே என்ற  கவலையில்   கக்குசுக்குள்  சென்று   சுவரில்    தலையை  முட்டினேன்.   நல்லவேளை  ரத்தம்  வரவில்லை . வெளியே  வந்து  தலையை   தடவி  பார்த்தேன்.   உச்சியில்   சற்று   வீங்கி  இருந்தது.    அதனால்   மறுபடியும்   வரிசையில்   நின்றேன் .   என்  தலையில்   உள்ள   வீக்கம் அரை   அங்குலத்திற்கு  மேலாக   வீங்கி இருந்தது.   தேர்வுக்கான   உயரம் சரியாகிவிட்டது ".   என்று  சொன்னான்.   எனக்கு   ஆச்சரியம்  மட்டுமல்ல  பரிதாபமும்   ஏற்பட்டது .    கடவுளே!   இவன்    மெடிக்கல்   செக் அப்பில்   கட்டாயம்   தேர்வாகவேண்டும்  என்று   வேண்டிக்கொண்டேன் . அதுபோல  எல்லோருக்கும்  மெடிக்கல் செக் அப்பில்   தேர்வாகிவிட்டோம்  .  மாவட்ட  போலீஸ் ஆபீசுக்கு   வந்து   வெரிபிகேசன்  ரோல்  எழுதிகொடுத்துவிட்டு   வந்தோம்  . திரு  சீனிவாசன்  சார்   உங்கள் வெரிபிகேசன்   ரிப்போர்ட்   வந்தவுடன்   ஆர்டர்  வந்துவிடும்     என்று    நண்பர் சுப்ரமணிய அய்யரிடம்   சொல்லுங்கள்  என்று சொன்னார். வீட்டிற்கு  வந்தவுடன் அண்ணனிடம் எல்லாம் சொன்னேன். மேலும்   நான்   போலீஸ்க்கு   போய்விட்டால்   தம்பி  ராமலிங்கத்தை இங்கு   வரவழைத்து  எனக்கு   பதிலாக  வேலைக்கு  சேர்த்து  விடலாம்  என்று  சொன்னேன் .  மறுநாள்   ரீஜனல்   காதி    ஆபீசர்   மற்றும்  மாவட்ட  காதி ஆபீசர் ஆகியோர்களிடம்   சொன்னோம் .  உடனே   வரச்சொல்   இங்கு   குறிஞ்சிப்பாடியில்   ஒரு  போஸ்ட்   காலியாக இருக்கிறது  என்று  மாவட்ட  காதி ஆபீசர் சொன்னார் .   சரி   அய்யா     நன்றி  என்று சொல்லிவிட்டு   வந்தோம் .  உடனே   தம்பிக்கு  லெட்டர்   எழுதி   எனக்கு போலீஸ்  வேலை   கிடைத்துவிட்டது     அதனால்  நீ   எனக்கு பதிலாக   இங்கு   வேலை பார்க்கலாம்.  உடனே  புறப்பட்டு  வா   என்று எழுதினேன் .ஒரு வாரத்தில்  வந்துவிட்டான்  . அவனுக்கு   குருஞ்சிபாடியில்   ஆபீசில்   இரவு காவலாளியாக   வேலை கிடைத்துவிட்டது .   எனக்கும்   28.10.60 ல்   போலீஸ்  ஆபீசிலிருந்து   1.11.1960 காலை   10  மணிக்கு   டிஸ்ட்ரிக்ட்  போலீஸ் ஆபீசில்   வேலையில்   சேர  ஆஜராகவேண்டும்  என்று ஆர்டர்  வந்தது .முன்னதாக   திரு  சீனிவாசன்   அவர்கள்   திரு சுப்ரமணிய அய்யருக்கு    ராமசாமிக்கு   ஆர்டர் வந்துவிட்டது    வரும்போது  டிஸ்ட்ரிக்ட்  காதி    ஆபிசிலிருந்து  விடுவிக்கப்பட்டது   என்ற   ஆர்டர் ஐ   கொடுத்து  அனுப்புங்கள்   என்று போனில்  சொல்லிவிட்டார்கள் .
           அதன்படி   ரிலீவ்  ஆர்டர் பெற்று   எல்லோரிடமும்   பிரியா  விடைபெற்று   1.11.1960 காலை 10 மணிக்கு டிஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபீஸ்க்கு  போனேன் .   அன்றே   போலீஸ் யூனிபோர்ம்  கொடுத்துவிட்டார்கள் .  ஆனால்   15.11.60 அன்றுதான்   வேலூருக்கு   பயிற்சிக்கு   செல்லவேண்டும் .   அதுவரை டிஸ்ட்ரிக்ட் போலீஸ் ஆபீசில்   செடிகளுக்கு   தண்ணீர்   விடவும்   மற்றும்   கவாத்து மைதானத்தை   சுத்த படுத்தவும்  வேண்டும்.
             15-11-1960 ல் எங்கள் 15 பேரையும் வேலூர் காவலர் பயிற்சி பள்ளிக்கு அழைத்துசென்றார்கள். அங்கேயும் ஒரு தடவை உயரம் மார்பளவு எல்லாம் சரிபார்க்கப்படுகிறது. அது ஒரு ஒப்புக்கு தான் பார்க்கிறார்கள்.அன்றே எங்களுக்கு தங்குவதற்கு அறைகள் ஒதுக்கபட்டது. மறுநாள் பயிற்சி ஆரம்பம். காலை 5 மணிக்கு பிகில் ஊதும் சத்தம் கேட்டவுடன் எழுந்திரிக்கவேண்டும். காலையில் ராகிமால்ட் கொடுப்பார்கள். காலை 6 மணி முதல் 7 மணி வரை உடற்பயிற்சி. 7.30 மணி முதல் 9.00 மணி வரை கவாத்து. ஒன்பதரை மணிக்கு காலை உணவு உப்புமா அல்லது பன் காபி 10 மணிக்கு சட்டம் படிக்கும் வகுப்பு. இது ஒரு மணி வரை நடக்கும் . மத்தியானம் வரிசையில் நின்று சாப்பாடு வாங்கி சாப்பிடவேண்டும். மாலை 4 மணி முதல் 5 மணி வரை விளையாட்டு . இந்த பயிற்சி பள்ளியில் தென்னாற்காடு, வடார்க்காடு, சேலம், செங்கல்பட்டு, மெட்ராஸ் ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 150 பேர் நான்கு அல்லது ஐந்து குழுக்களாக பிரித்து ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு தலைமை காவலர் டிரில் மாஸ்டர் இருப்பார் . அதற்கு மேல் H D I  இருப்பார் H D I ஓர் ஆய்வாளராக இருப்பார். சட்ட வகுப்பில் உதவி ஆய்வாளர் அந்தஸ்தில் ஒவ்வொரு வகுப்பிற்கும் A L I என்ற உதவி சட்ட பயிற்றுனர் இருப்பார். அவருக்கு மேலாக ஆய்வாளர் அந்தஸ்தில் C L I தலைமை சட்ட பயிற்றுனர் இருப்பார். கண்காணிப்பாளர் அந்தஸ்தில் முதல்வரும் துணை கண்காணிப்பாளர் அந்தஸ்தில் துணை முதல்வரும் இருப்பார்கள். எனக்கு ஒதுக்கப்பட்ட அறையில் திட்டக்குடியை சேர்ந்த பிச்சை பிள்ளை , நெய்வேலியை சேர்ந்த அங்கமுத்து ஆகியோர் என்னுடன் இருந்தார்கள். மிகவும் நல்லவர்கள், எந்த கெட்டபழக்கமும் இல்லாதவர்கள். 
       வேலூர் காவல் பயிற்சி பள்ளியானது வேலூர் கோட்டைக்குள்ளே இருக்கிறது. அங்கே திப்பு மஹால், சுல்தான் மகால் என்று ரெண்டு பிரிவான கட்டடங்கள். திப்பு மகாலில் காவலர் பயிற்சி பள்ளியும் சுல்தான் மகாலில் சப் இன்ஸ்பெக்டர், டி எஸ் பி , ஏ.எஸ்.பி. ஆகியோர் பயிற்சி பெரும் காவல் பயிற்சி பள்ளியும் இருந்தது. இதை சுற்றிதான் கோட்டைக்கு வெளியே ஆழமான பெரிய அகழி. அகழியில் எப்போதும் தண்ணீர் இருக்கும். கோட்டை வாசலில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு. கோட்டைக்குள் பெரிய கோயில் இருக்கிறது. ஆனால் சிலை கிடையாது. எனவே அந்த ஊரை சொல்வார்கள், தண்ணீர் இல்லாத ஆறு சாமி இல்லாத கோயில் என்று. நீதி மன்றம் மாதிரி காவல் நிலையம் மற்றும் பல அரசு அலுவலகங்கள் இருக்கிறது.  கோட்டையின் வலது புறம் (wicket gate) கள்ள வழி உண்டு. அங்கே போலீஸ் பாதுகாப்பு உண்டு. இதையும் மீறி பயிற்சி காவலர்கள் வெளியே போய் சினிமா பார்த்து விட்டு வந்துவிடுவார்கள். பிடிபட்டால் ஒரு மணி நேரம் ரெண்டு மணி நேரம் என்று கூடுதல் கவாத்து செய்யவேண்டும். மூன்று மாத பயிற்சி முடிந்த நிலையில் ஒரு நாள் காவலர்கள் தங்கி இருக்கும் கட்டிட வாசலில் இரவு காவல் பணி எனக்கு அளிக்கப்பட்டது. துப்பாக்கியை வைத்துகொண்டு நின்று கொண்டோ அல்லது அங்குமிங்கும் நடந்து கொண்டோ இருக்க வேண்டும். இரவு மேலதிகாரிகள் தணிக்கை செய்ய வருவார்கள். அப்படி நான் பணியில் இருக்கும்போது இரவு ஒருமணிக்கு தணிக்கை ஆபீசர் ஒரு தலைமை காவலர் வந்தார். நான் நின்று கொண்டு துப்பாக்கியையும் பிடித்துகொண்டு தூங்கி விட்டேன். தணிக்கை செய்யும் அதிகாரி 20 அடி  தூரத்தில் வரும்போதே துப்பாக்கியை அவருக்கு நேராக பிடித்து  " நில். யார் நீ ? ( Halt! Who comes there? ) என்று கேட்கவேண்டும். நான் தூங்கி விட்டதால் அவர் என் அருகே வந்துவிட்டார். அதன் பிறகு தான் நான் விழித்து பார்த்தேன் . 
                                                                                                                              அப்போது ........     

3 comments:

  1. ஒவ்வொரு பதிப்பின் முடிவிலும் சஸ்ப்பென்ஸாக இருக்கிறது. மிகவும் நன்றாகவும் விறுவிறுப்பாகவும் உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள் அப்பா.

    அன்பு மகள்,
    சித்ரா.

    ReplyDelete
  2. அருமையான பதிவு...தெளிந்த நீரோடை போன்ற நடை. ஈரானிய இயக்குனர் மஜீத் மஜிதி யின் படமான song of sparrows வில் வரும் ஹீரோ மாதிரி ஒரு வெள்ளந்தியான கதாபாத்திரம் நீங்கள்...படிப்படியாக அறுபதுகளில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தன்னை மேம்படுத்திக்கொண்டு இப்போது அவற்றை சொன்ன நேர்மை இருக்கிறதே ...really hats off ...

    ReplyDelete