Tuesday 13 September 2011

பிறந்தேன் .......

                          அந்த சாபத்தின் விளைவாக ஐந்தாறு தலை முறையாக அந்த குடும்பத்தில் பெண் குழந்தையே பிறக்கவில்லை. ஆறாவது தலை முறையில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவள் வழியாக வந்தவர்களை இன்று வரை ஆறாம் வீட்டு வம்சம் என்று அழைத்தார்கள். அந்த வழித்தோன்றலில் வந்தவர்தான் திருவாளர் சண்முகம். அவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் இரண்டு பெண் குழந்தைகள். அவர்கள் முறையே ஆண்டி,சுப்ரமணியன் , வேலு, கந்தன் என்ற கந்தசாமி. பெண்மக்கள் பார்வதி, மணிமுத்து. பார்வதியை மீளவிட்டனிலும் மணிமுத்து புதிம்புத்தூரிலும் மணமுடித்து வாழ்ந்தார்கள்.
மீளவிட்டான் ( என் சிறு வயது மற்றும் இளவயது ஊர் )

மீளவிட்டான் என்பது ஒரு காரணப்பெயர்.கம்பர் வடபுலத்தில் ஊருராக போய் பாடி பரிசுபெற்று தென்புலம் வந்தார்.அப்படி வரும்போது இந்த ஊர் ஆடு மாடு மேயும் மந்தையின் ஒரு மரத்தடியில் உட்கார்ந்தார். உடனே புதிய நபரை பார்த்தவுடன் ஆடு மாடு மேய்க்கும் சிறுவர்கள் அதிசயமாக பார்த்து அவர் அருகில் ஓடி வந்து நீங்கள் யார் என்று கேட்க, "நான்தான் கம்பர் பல மன்னர்களிடம் பாடி பரிசு பெற்று தென்திசை போகலாம் என்று வந்திருக்கிறேன்." என்றார். "கம்பர் என்று சொல்கிறீர்களே இது என்ன எழுத்து என்று சொல்லுங்கள்" என்று ஒரு நெளிந்த கோடு போட்டு காட்டினார்கள். "இது ஒரு எழுத்தே இல்லையே. நீங்கள் பள்ளிக்கூடம் போவதில்லையா ?" என்று கேட்டார். உடனே சிறுவர்கள் அவரை பார்த்து ஏளனமாக சிரித்து நாங்கள் பள்ளிக்கூடம் போனால் இந்த ஆடு மாடை மேய்ப்பது யார்? நீங்களோ பெரிய புலவர். இந்த எழுத்தை சொல்ல முடிய வில்லை. இது மாட்டினுடைய நடை மோள்" என்றனர். உடனே கம்பர் சிரித்து கொண்டார். அவர்கள் அறியாமையிலும் அறிவுடன் சொல்வதை நினைத்து.சிறுவர்களுள் ஒருவன் " நான் சொல்வதை நீங்கள் எழுத முடியுமா? " என்று கேட்டான். உடனே கம்பர், சொல்வதை எழுத முடியாதா? என்று நினைத்து கொண்டு "சொல் எழுதுகிறேன்"  என்றார் . உடனே ஆடுமாடுகளை அழைக்கும் ஒலியை நாக்கை மடித்து உள்ளுக்குள் கன்னத்தில் எழும் ஒலி ஒன்றை எழுப்பினான். ( ஏனென்றால் கம்பராலே எழுத முடியாத அந்த வார்த்தையை நான் மட்டும் இங்கே எப்படி எழுதி காட்ட முடியும் ) இதை எப்படி எழுத முடியும் என்று கம்பர் திகைத்து எழுந்து கொண்டார். உடனே சிறுவர்கள் "ஹே  ஹே உங்களுக்கு எழுத முடியவில்லையே" என்று ஏளனமாக சிரித்தார்கள்..கம்பர் திகைத்து இதற்கு தெற்கே நம்மை மீளவிடான் என்று கூறி வடபுலம் பெயர்ந்தார். அது முதல் அந்த ஊர் மீளவிடான் என்று அழைக்கப்பட்டது. நாளடைவில் மருவி மீளவிட்டான் என்று இன்று வரை அழைக்கப்படுகிறது.
                          கந்தன் என்ற கந்தசாமிக்கு ( எனது தந்தை ) மீளவிட்டனில் செம்பன் என்ற செம்புலிங்கம் மகள் பேச்சியம்மாளை மனமுடித்துவைத்தார்கள்.  அதுமுதல் அவர்கள் மீளவிட்டானிலேயே இருந்து குடும்பம் நடத்தி வந்தார்கள். இந்த பேச்சியம்மாள் ( எனது தாயார் ) உடன் பிறந்தவர்கள் சிவலிங்கம், சன்னாசி, செம்புலிங்கம், மற்றொரு  சிவலிங்கம் கடைசியாக தங்கை ராமு ஆவார்கள் .  தங்கை ராமுவை தூத்துக்குடி சண்முகபுரத்தில் வசித்துவந்த குப்பான் என்ற ராமசாமிக்கு மணமுடித்து அவர்கள் தூத்துக்குடியிலேயே வாழ்ந்து வந்தார்கள். அவர்களுக்கு குழந்தை இல்லை. 
பிறந்தேன் 
கந்தன் பேச்சியம்மாள் இருவரும் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு வடிவேல் என்ற ஆண்மகன் பிறந்து ஏழாவது வயதில் மரணமடைந்தார். அடுத்து சண்முகக்கனி, வேலம்மாள் ஆண்கள் ராமர் லெட்சுமணன் என்ற இரட்டையர்களும் அடுத்ததாக ராமசாமி ( நான் தான் ), ராமலிங்கம் கடைசியாக இலங்காமணி என்ற பாப்பா ஆகியோர் பிறந்தனர்.
வளர்ந்தேன் 
24-09-1940 ல் நான் பிறந்தபோது நல்ல மழையும் செழிப்புமான காலமாகவே அந்த ஊர் திகழ்ந்திருக்கிறது. அக்கால மூட வழக்கப்படி பெண்கள் பள்ளிசென்று படிக்கக்கூடாது என்று எனது அக்காள்கள் இருவரும்  பள்ளியில் சென்று படித்ததில்லை.  ஆனால் எனது அண்ணன்கள் ராமர் லெட்சுமணன் இருவரும் பள்ளியில் சேர்த்தும் படித்ததில்லை. நான் ரெண்டாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள் எனது மூத்த அண்ணன் ராமர் பள்ளிக்கு வரவில்லை. பள்ளிக்கு நேரமாகிவிட்டதே நீ வராவிட்டால் நீ விளையாடிகொண்டிருக்கிறாய் என்று ஆசிரியரிடம் சொல்லிவிடுவேன் என்று கூறினேன். அதற்கு அவர் ஆசிரியரை வாய்க்கு வந்தபடி திட்டினார். குருபக்தி அதிகம் கொண்ட நான் ஆசிரியரிடம் என் அண்ணன் வசைபாடியதை அப்படியே சொல்லிவிட்டேன். ஆசிரியர் வழக்கம்போல் பெரிய பையன்களை அனுப்பி என் அண்ணனை அழைத்து வரச்செய்து நன்கு அடி கொடுத்து கவனித்து அனுப்பி விட்டார். அன்று பள்ளி முடிந்தவுடன் நான் நேரடியாக வீடு சென்று விடுவது வழக்கம். ஆனால் என் அண்ணன்கள் மற்ற பையன்களோடு சில்லான்குச்சி ( இப்போதைய கிரிக்கெட் ) விளையாடிவிட்டு தான் வருவார்கள். அன்று மாலை ஒரு உரல் மீது உட்கார்ந்து கம்பு சாப்பிட்டு கொண்டிருந்தேன் ( கம்பு கதிரிலிருந்து பிரித்தெடுத்து பச்சையாக சாப்பிடுவது தனி ருசி )  

                                                                                                                                 அப்போது ......

3 comments:

  1. Dear Appa,

    Indha Kadhai Puthakamaaga Paadhu Kaakka vendiya Arum perum Pokkisham.

    Aduttha padhivukkaaga kaatthirukkirom.

    Anbu Magal,
    Chithra.

    ReplyDelete
  2. Appa,

    Romba nalla irukuthu...this is the real autobiography..waiting for the next episode :)

    - Anandh

    ReplyDelete
  3. Appa,
    Aaram Vamsathukku eppadi oru kathi irrukirathu eppothaan theriyuthu pa

    Excelent pa

    -Sasi

    ReplyDelete