Saturday 29 October 2011

மீண்டும் பதவி உயர்வு!

அப்போது.... 

                   அந்த மெமோவை பார்த்தவுடன் எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. "எழுத்தர் இந்த வழக்கில் செக்சனை குறைத்து  பதிவு செய்துள்ளார். எனவே வழக்கை உதவி ஆய்வாளர் மறு விசாரணை செய்து  விசாரணை அறிக்கையுடன் எழுத்தருடைய சமாதானமும் இணைத்து அனுப்பவும்" என்று அந்த மெமோவில் குறிப்பு எழுதி இருந்தது. ஏற்கெனவே ஏட்டையா எனது முதல் தகவல் அறிக்கை கிடைத்தவுடன் அந்த ஊருக்கு போய் விசாரித்துவிட்டார். அதனால் சரியான செக்சன்தான் போடப்பட்டுள்ளது என்றும் எதிரி வாதியின் வீட்டிற்குள் நுழைந்ததற்கு ஒரு செக்சன், கம்பால் எதிரியை அடித்ததற்கு ஒரு செக்சன், பணத்தை திருடியதற்கு ஒரு செக்சன் போடப்பட்டுள்ளது. அதனால் எழுத்தர் மீது தவறேதுமில்லை" என்று பதில் அறிக்கை எழுதினார். 

                     ஒரு வாரம் கழித்து இன்ஸ்பெக்டர் காவல்நிலையம் வந்தார். ஆனாலும் இன்ஸ்பெக்டர் சமாதானம் அடையாமல் தலைமை காவலர் திரு.ராஜா அவர்களை தன்னுடன் அழைத்து கொண்டு அங்கே அந்த ஊருக்கு சென்று அவர்கள் இருவரும் நேரடியாக விசாரணை நடத்தினர். ஊர் தலையாரியும் சம்மந்தப்பட்ட பெண்ணும் நடந்தவைகளை இவர்களிடம் கூறினார். இன்ஸ்பெக்டருக்கு மிகவும் ஆச்சர்யம். "இந்த எழுத்தர் ராமசாமி எல்லா செக்சனையும் மிகவும் சரியாக குறிப்பிட்டு வழக்கு பதிந்திருக்கிறாரே" என்று தலைமை காவலரிடம் தெரிவித்துவிட்டு காவல்நிலையம் வந்து என்னையும் பாராட்டிவிட்டு சென்றார்.

குலதெய்வம் கோயில்!

                            மற்றொரு சமயம் காவல்நிலையத்தில் குற்ற பதிவேட்டை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்பொழுதுஒரு வருடத்திற்கு முன் விஜயாச்சம்பாடு என்ற ஊரில் இலங்காமணி சாஸ்த்தா கோயிலில் சாமியின் தங்க நகை திருடுபோயுள்ளது. அது கண்டுபிடிக்காமல் இருந்தது. எனது குலதெய்வம் கோயில் இருக்கும் ஊர் பற்றி அம்மா என்னிடம் நிறைய சொல்லியிருக்கிறார்கள். அதுதான் இலங்காமணி சாஸ்தா கோயில் என்ற ஞாபகம் வந்தது. எனது தங்கைக்கும் அதன் நினைவாகத்தான் இலங்காமணி பாப்பா என்று பெருட்டிருக்கிரார்கள்.  தான் நான் தேடிக்கொண்டிருந்த எங்கள் குலதெய்வம் கோயில் இதுதான் என்பதை தெரிந்துகொண்டு அம்மாவிற்கும் அண்ணன் தம்பி எல்லோருக்கும் தெரிவித்தேன். எல்லோரும் ரொம்ப சந்தோசப்பட்டார்கள்.


                   விஜயனாரயனதிலிருக்கும்போது தூத்துக்குடியில் மாமன் மகள் பஞ்சவர்ணத்திற்கு பெண்குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வந்தது. உடனே நானும் மனைவியும் அண்ணன் மகன் சேகரையும் கூட்டிக்கொண்டு அம்மாவுடன் தூத்துக்குடிக்கு போனோம். அங்கே பஞ்சவர்ணமும் அவள் கணவர் திரு  நயினார் அண்ணனும்   என்னிடம்  குழந்தைக்கு  பெயர்  வைக்குமாறு கூறினார். குழந்தையை பார்த்துவிட்டு ராமன்துறை பெண்ணின் நினைவாக அந்த குழந்தைக்கு "ரோஸ்மேரி" என்று பெயர் வைத்தேன். இரண்டு நாள் இருந்துவிட்டு விஜயநாராயணம் வந்தோம்.


மீண்டும் பதவி உயர்வு!
                 
                   ஆயிரத்து தொளாயிரத்து அறுபத்தைந்து டிசம்பரில் தலைமை காவலர் தேர்வு நடந்தது. அதில் நான் கலந்துகொள்ள எல்லா தகுதியும் பெற்றிருந்தேன். இந்த தேர்வுகளில் சரியான பரிச்சயம் இல்லாததால் இதில் தேர்ச்சி பெறுவேனா என்று பயந்தேன். "குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு பரிக்ஷை எழுதுங்கள். நிச்சயமாக நீங்கள் பாஸ் செய்துவிடுவீர்கள்" என்றுஅம்மாவும்,மனைவியும் சொன்னார்கள். அதுபோலவே நான் என் குலதெய்வத்தை வேண்டிக்கொண்டு தேர்வில் கலந்துகொண்டேன். ஒரு வாரத்தில் பதில் தெரிந்தது. நான் மாவட்டத்திலேயே முதலாவதாக பாசானேன். பத்து நாட்களில் போஸ்டிங் ஆர்டர் வந்துவிட்டது. எனக்கு சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு தலைமைகாவலராக  பதவி உயர்வு ஆர்டர் வந்துவிட்டது.

                   சாத்தான்குளம் வந்து அங்குதிரு டி.எ.செல்லப்பா தலைமை காவலரை மாற்றினேன்.உதவி ஆய்வாளர் திரு துரைசாமி அவர்களை சந்தித்து மரியாதை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். திரு செல்லப்பா அவர்கள்  என்னை தனது உடன் பிறந்த சகோதரனைப்போல் நினைத்து அந்த காவல் நிலையத்திற்குட்பட்ட பதினெட்டு கிராமங்களைபற்றியும் அங்கு யார் யார் எதிரிகளை கண்டுபிடிப்பதில் நமக்கு உதவியாக இருப்பார்கள் என்பதைப் பற்றியும் தெளிவாக சொன்னார். அவர் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலையத்திற்கு மாறுதலாகி  சென்றார் . (பின்னாளில் இவருடைய ஒரே மகன்  முனியசாமி தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி பேராசிரியர் திரு பாலசுப்ரமணியம் அவர்களுடைய மகள் படிப்பில் மிகவும் திறமையான ஜோதிநிர்மலாவை திருமணம் செய்துகொண்டார். இப்பொழுது திருமதி ஜோதிநிர்மலா ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி.)

                           திருச்செந்தூர் சென்று ஆய்வாளர்  திரு நடராஜன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். சாத்தான்குளத்தில் எனக்கு காவலர் குடிஇருப்பில் வீடு ஒதுக்கப்பட்டது. இரண்டுநாட்கள் லீவு எடுத்துகொண்டு ஊரில் போய் அம்மாவையும் மனைவியையும் அழைத்துவந்தேன். 

                        ஒருநாள் நான் அலுவல் முடிந்து வீட்டிற்கு வந்தேன். மனைவி கோபமாகவும் என்னிடம் பேசாமலும் இருந்தாள். எனக்கு சாப்பாடும் எடுத்து வைக்கவில்லை. அம்மாதான் சாப்பாடு எடுத்து வைத்தார்கள். சாப்பிட்டுவிட்டு மனைவியிடம் "ஏன் கோபமாக இருக்கிறாய்?" என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு ஒரு லெட்டரை என்மேல் விசி எறிந்தாள். லெட்டரை படித்துப்பார்த்தேன். ராமன்துறை ரோஸ்மேரி இடமிருந்து வந்திருக்கிறது. அதில் "மணமகள் என் கடிதத்தை படித்துவிட்டாளா?  நான்  ஒன்றும் தவறாக  எழுதவில்லையே!" என்று எழுதியிருந்தாள். உடனே "என்னிடம் எதையும் மறைக்கவேண்டாம். அத்தை  எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டார்கள்.இனிமேல் இப்படி ஒரு லெட்டர் வரக்கூடாது" என்று சொல்லி என் கையில் இருந்த லெட்டரை வெடுக்கென்று பிடுங்கி சுக்கு நூறாக கிழித்து போட்டாள். இரவு முழுவதும் தூங்கவில்லை. காலையில்  அவளை சமாதானப்படுத்தி இனிமேல் லெட்டர் வராது என்று சொல்லிவிட்டேன். கொஞ்சம் சமாதானமானாள். 

                அடிக்கடி திருசெந்தூர் கோர்ட்டுக்கு போகும்போதெல்லாம் மனைவியின் தாய்மாமன் திரு கோபால் அவர்களின் பிறை என்று சொல்லப்பட்ட அவர்களுடைய ஆபிசுக்கு சென்று அவர்களின் நலம் விசாரித்து வருவேன். திருசெந்தூர் காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளர் திரு.ஐ.துரைராஜ் அவர்களை சந்தித்து அறிவுரைகள் பெறுவேன். மிகவும் நல்லவர். ஒரு வருடம் நல்லபடியாக பணி செய்துவந்தேன்.

அம்பாசமுத்திரம் மாறுதல் 
               
                   திடீரென்று  அம்பாசமுத்திரம் மாற்றல் ஆர்டர்  வந்தது. அன்று பங்குனி உத்திரம் என்பதால் அம்மா, மனைவி எல்லோரும் குலதெய்வம் இலங்காமணி சாஸ்தா கோவிலுக்கு போய் குலதெய்வத்தை வணங்கிவிட்டு வந்தோம். அம்மாவுக்கு ரொம்ப சந்தோசம்.

                  மறுநாள் மாறுதல் உத்தரவை பெற்று ஆறுமுகநேரி போய் மனைவியை அவள் அம்மா வீட்டில் விட்டுவிட்டு தூத்துக்குடி போய் சித்தப்பாவிடம் சொல்லிவிட்டு அம்மாவை அண்ணன் லெட்சுமணன் வீட்டில் விட்டுவிட்டு ஏழு நாட்கள் லீவையும் முடித்து அம்பாசமுத்திரம் சென்றேன். அங்கு திரு. குளத்து ஐயர் உதவி ஆய்வாளர் அவர்களிடம் பணிக்கு ஆஜரானேன். அங்கு மேலும் மூன்று தலைமை காவலர்கள் இருந்தார்கள். அவர்கள் திருவாளர்கள் ஆதினம், ராஜாராம் நாயுடு, ஜானி பாய் ஆகியோர். உதவி ஆய்வாளர் அவர்களிடம் அறிவுரைகள் பெற்று சர்க்கிள் இன்ஸ்பெக்டர் திரு வேலப்பன் அவர்களை சந்தித்து மரியாதையை செலுத்தியும் அறிவுரைகள் பெற்றேன். தலைமை காவலர்கள் மூவரும் நல்லவர்கள். அவர்கள் என்னிடம் நன்றாக பழகினார்கள்.

                அம்பாசமுத்திரம் தெப்பகுளம் தெருவில் வாடகைக்கு வீடுபார்த்தேன். இரண்டு நாட்கள் லீவு எடுத்து ஊருக்கு  போய் அம்மாவையும், மனைவியையும்   அழைத்துவந்தேன். மனைவியை அழைத்து வந்தேன்.
                                                                                 அப்போது ......

Tuesday 25 October 2011

பாராட்டும் வழக்கு பதிவுகளும் !

அப்போது

                            "நானும் சித்தப்பாவோடுதான் இருப்பேன்" என்று எங்கள் பெரிய அண்ணன் மகன் ஐந்து வயது நிரம்பிய சேகர் அழுது கொண்டிருந்தான். "அவனும் எங்களோடு இருக்கட்டும்" என்று நான் கூறியவுடன்  எங்களுடன் இருந்தான். விஜயநாராயனத்தில் எழுத்தர் வேலையும் வாழ்க்கையும் சந்தோசமாக போய்க்கொண்டிருந்தது.


பாராட்டு!

                 ஒருநாள் நான் காவல் நிலையத்தில் இருக்கும்போது ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காவல் நிலையத்தை திடீர் பார்வையிட வந்தார்கள். அவர் மிகவும் கறாரான அதிகாரி. அவரை பார்த்தாலே மற்ற அதிகாரிகள் பயந்து ஓடுவார்கள். அந்த நேரம் பார்த்து உதவி ஆய்வாளரும் இல்லை அவர் கோர்ட்டுக்கு சென்றிருந்தார். தலைமை காவலரும் லீவில் சென்றிருந்தார். எந்த அதிகாரியும் காவல் நிலையம் பார்வையிட வந்தால்  முதலில் பணப்பதிவேடைத்தான் கேட்பார்கள். அவர் வந்தவுடன் பணப்பதிவேடையும் கையிருப்பு பணத்தையும் கொண்டு அவர் முன்பு வைத்தேன். பணப்பதிவேடு நான்கு  நாட்களாக எழுதவில்லை. அதிகாரி என்னை மிகவும் கடிந்துகொண்டார். ஏன் எழுதவில்லை என்று கேட்டார்.  நான் எழுத்தர் பணப்பதிவேடு எழுதகூடாது "என்பதற்காக நான் எழுதவில்லை" என்று சொன்னேன். அதற்கு அவர் "அப்போ உனக்கு பணப்பதிவேடு எழுத தெரியாது, அதனாலதான் நீ எழுதவில்லை " என்று சொன்னார். "அய்யா எனக்கு பணப்பதிவேடு நன்றாக எழுத தெரியும்" என்று அதுவரை எழுத வேண்டியதை நான் தனி தாளில்  எழுதி வைத்திருந்ததை கொண்டுவந்து காட்டினேன் . உடனே அதை படித்து பார்த்துவிட்டு "சபாஷ்! இதேபோலே எழுதிகொண்டுவா" என்றார். அதைபோலே எழுதிக்கொண்டு கொடுத்தேன். பணப்பதிவேட்டின்படி கையிருப்பு பணமும் சரியாக இருந்தது. அதிகாரி மிகவும் சந்தோசப்பட்டு அதிகாரிகள் பார்வை பதிவேட்டில் நல்லவிதமாக எழுதிவிட்டு சென்றார்.

வறுமை வழக்கு  

                      ஒரு நாள் நான் காவல்நிலையத்தில் இருக்கும்போது முப்பத்தைந்து வயதுள்ள ஒரு பெண் தலையில் முக்காடு போட்டுகொண்டு அழுதுகொண்டு வந்தாள். அவள் தலைக்குமேல் ஏதோ நீட்டி கொண்டிருந்தது. முக்காட்டை நீக்கியபின்பு பார்த்தால் தலையில் ஒரு கத்தி நீட்டி கொண்டிருந்தது. அவளை உட்காரவைத்து காப்பி வாங்கி கொடுத்து விசாரித்தேன்.

                      அது ஒரு நெல் கதிர் அறுக்கும் பன்னரிவாள் என்று தெரிந்தது. அந்த பெண்ணை விசாரித்தேன். அந்த காலம் வறுமையின் கொடுமை. அதன் விளைவு தன் பதினைந்து வயது மகன் சப்பிடும்போது இன்னும் கொஞ்சம் சோறு வேண்டும் என்று கேட்டிருக்கிறான். வேறு வழி இல்லாமல் சோறு இல்லாமல் சோறுவடித்த கஞ்சி தண்ணியை கொடுத்திருக்கிறாள். பசி மகன் கண்ணை மறைக்க கத்தியை எடுத்து தாயின் தலையில் வெட்டியிருக்கிறான் .

                       அவனை ஒரு காவலர் மூலமாக அழைத்துவரசெய்து விசாரித்தேன். அன்று உதவி ஆய்வாளரும் தலைமை காவலரும் வேறு அலுவலாக வெளியே போயிருந்தார்கள். அதனால் அந்த பெண்ணை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி அந்த கத்தியை எடுக்கும்படி சொன்னேன் . அந்த டாக்டருக்கு எனது பணம் ரூபாய் பத்து கொடுத்து அந்த சிறுவனிடம் "என்னப்பா! நம்மை பத்து மாதம் கருவறையில பாதுகாத்து சுமந்து பெற்ற தாயை அவள் கல்லறைக்கு போகும்வரை காப்பாற்ற வேண்டிய மகனே இப்படி செய்யலாமா?" எச்சரித்து வழக்கு ஏதும் பதியாமல் அனுப்பினேன். மேலும் அந்த பெண்ணுக்கு ஒரு காவலர் சாப்பாடு வாங்கி கொடுத்தார்.


ஒரு பெண்ணின் பண வழக்கு 

                        விஜயனாராயனத்தில்  பெரும்தனக்கரர் திரு ராஜகோபால் பாண்டியன் அவர்கள் அவர் தம்பி திரு இலங்காமணி தேவர் மற்றும் தெற்கு விஜயனரயனத்தில் திரு வாலிபால் மாடசாமி, அவர் தம்பி திரு சங்கரபாண்டியன், மற்றொரு தம்பி திரு ராமசந்திரன் இவர் கிராம அதிகாரியாக இருந்தார். இவர்கள்தான் இந்த ஊரில் முக்கியமான நபர்கள்.  ஒரு நாள் தலையாரி ஒருவர் ஒரு வழக்கு கொண்டுவந்தார்.

                    சாதரணமாக இங்கெல்லாம் கிராம அதிகாரிகள் மூலமாகதான் வழக்குகள் வரும். அன்று அதுபோல அந்த தலையாரி கொண்டுவந்த ரிப்போர்ட்டில் காரியாண்டி என்ற ஊரில் பஞ்சாயத்து கடைநிலை ஊழியர் ஒரு பெண் தனது "வீட்டில் சம்பளப்பணம் வாங்கி  தலையணை கீழ வைத்து படுத்திருந்தேன் இரவு ஒரு மணிக்கு யாரோ ஒருவர் கதவை தட்டினார். நான் கதவை திறந்தேன் எனது தலையில் கம்பால் ஒரு அடி விழுந்தது நான் மயங்கி கீழ விழுந்துவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தேன் எனது பணம் வைத்திருந்த பணப்பை வீட்டு முன்பு கிடந்தது. அதிலிருந்த இருநூறு  ரூபாயை காணவில்லை" என்று எழுதியிருந்தது.

                     நான் அந்த ரிப்போர்டை வாங்கி வழக்கு பதிவு செய்தேன். அன்று புதிய தலைமை காவலராக திரு ராஜா என்பவர் வந்திருந்தார். அன்று அவர் நீதிமன்ற அலுவலாக நான்குநேரிக்கு சென்று விட்டார். உதவி ஆய்வாளரும் வேறு ஒரு வழக்கு விசாரணைக்கு சென்றிருந்தார். இந்த வழக்கில் திருடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு ஒரு பிரிவும், அந்த பெண்ணை கம்பால் அடித்தற்கு ஒரு பிரிவும் மற்றும் பணத்தை திருடியதற்கு ஒரு பிரிவும சேர்த்து வழக்கு பதிவு செய்து ஒரு காவலர் மூலமாக முதல் தகவல் அறிக்கையை தலைமை காவலர் திரு ராஜா அவர்கள் விசாரணைக்காக அனுப்பினேன். வழக்கமாக சர்க்கிள் ஆபிசுக்கு போகவேண்டிய முதல் தகவல் அறிக்கை இரண்டுநாள் கழித்துதான் செல்லும். அந்த முதல் தகவல் அறிக்கை கிடைத்தவுடன் இன்ஸ்பெக்டர் திரு சுப்ரமணிய பிள்ளை அவர்கள் நான் தயாரித்த முதல் தகவல் அறிக்கை சரியில்லை என்று எனக்கு  ஒரு மெமோ அனுப்பினார்.
                                                                                      அப்போது........

Wednesday 19 October 2011

என் திருமணம்!

அப்போது 

                               அவர் கூப்பிட்ட குரல் கேட்டு  நின்றோம். பக்கத்தில் வந்த அவர் "நான் முத்தம்மாளின் புருஷன் சண்முகம் என்று சொன்னார். "அய்யா அந்த பெண்ணின் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டோம். கட்டாயம் நாளை மறுநாள் வந்துவிடுங்கள்" என்று சொன்னார். நாங்களும் "சரி நாளை மறுநாள் மாலையில் வருகிறோம்" என்று சொல்லிவிட்டு நல்லுருக்கு நடந்தோம். நல்லூர் வந்து மச்சான், அக்காள், மருமக்கள் பன்னீர்செல்வம், கந்தசாமி, சித்திரைக்கனி எல்லோரையும் பார்த்துவிட்டு, பெண் விசயத்தையும் சொல்லி நீங்களும் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு ஆத்தூருக்கு நடந்தே வந்து பஸ் ஏறி தூத்துக்குடி வந்தோம் . 

                                 மீளவிட்டான் போய் அம்மாவிடம் பெண் விஷயத்தை சொன்னேன். நாளைமறுநாள் நீங்களும் அண்ணன், அண்ணி, சித்தப்பா, சித்தி எல்லோரும் பார்த்துவிட்டு வாருங்கள். நல்லூரிலிருந்து அக்காவும் மச்சானும் ஆறுமுகநேரிக்கு  வந்துவிடுவார்கள். நான் வரவில்லை" என்று சொன்னேன். "ஏன் நீ பெண்ணை பார்க்கவேண்டாமா? . உனக்கு பெண்ணை பிடித்திருந்தால் தானே மேற்கொண்டு பேசமுடியும்" என்று சொன்னார்கள் . "உங்களுக்கு பிடித்திருந்தால் போதும். பின்பு பேசிமுடிவு செய்யும்போது நான் பார்த்து கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டேன்.  

                 மறுநாள் சித்தப்பாவிடம் போய் நான் பணிக்கு போகவேண்டும். இது பதவி உயர்வு. உடனே பணிக்கு சேரவேண்டும். நீங்கள் பெண்ணை பார்த்து  விட்டு வாருங்கள் " என்று சொன்னேன். உடனே சித்தப்பா "ஏன் ராமந்துரையிலிருந்து ஒரு பெண் என்னை மாமா மாமா என்று லெட்டர் எழுதி இருந்தாளே! அந்த பெண்ணை முடிக்கலாம் என்று சொல்கிறாயா?" என்று சொன்னார் . "அப்படியில்லை. நான் நிச்சயமாக இந்த எழுத்தர் பணியில் நாளைமறுநாள் சேரவேண்டும். இந்த பெண்ணையே முடிவு செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு விஜயநாராயணம் புறப்பட்டேன். அவர்கள்      பெண்பார்க்க போன அன்று நான் விஜயநாராயணம் காவல் நிலையம் வந்து பணியில் சேர்ந்தேன்.

                         உதவி ஆய்வாளர் திரு செய்யத் செரிப் அவர்கள், தலைமை காவலர் திரு களக்காடு முகமது , காவலர்கள் முடிவைத்தானேந்தல் சுப்பையா பிள்ளை, தென்காசி சண்முகவேல் ஆசாரி, நாகர்கோயில் ஜான் , மற்றும் அனைவரும் நல்லவர்களாகவே இருந்தார்கள். மறுநாள் வள்ளியூர் வந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் திரு சுப்ரமணிய பிள்ளை அவர்களை மரியாதையின் நிமித்தம் பார்த்து அறிவுரைகள் பெற்று காவல் நிலையம் வந்தேன்.

மீண்டும் பெண் பார்க்க சென்றேன் 

                      ஒரு மாதம் கழித்து இரண்டுநாட்கள் லீவு எடுத்து வூருக்கு போனேன்.  "பெண் பார்க்க போகவேண்டும்" என்று அம்மா சொன்னார்கள் . "உங்களுக்கு பெண் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டேன்.  அம்மா ரொம்பபிடித்திருக்கிறது. நல்ல பெண்ணாக தெரிகிறது" என்று சொன்னார்கள். "நீயும் பெண்ணை பார்த்துவிட்டால் பேசி முடிவு செய்து விடலாம்" என்றார்கள். "நீங்கள் பார்த்துவிட்டீர்கள். உங்களுக்கு பிடித்திருகிறதா அது போதும்" என்றேன். "உன்னை அவர்களுக்கும், பெண்ணுக்கும் பிடிக்கவேண்டாமா? அதனால் நாளைக்கு எல்லோரும் போய் பார்ப்போம். உன்னை அவர்களுக்கு பிடித்திருந்தால் பேசி முடிவு செய்துவிடலாம்" என்றார்கள்.  மறுநாள் அம்மா, சித்தப்பா, சித்தி, அண்ணன் லக்ஷ்மணன், அண்ணி சமுத்திரக்கனி, அனைவரும் செல்வராஜபுரம்  போனோம். அங்கே  பெண்ணின் அப்பா திரு ஆகாசமுத்து ,  அம்மா திருமதி வெள்ளையம்மாள், பெண்ணின் தாய்மாமன் திரு தோப்பூர் கோபாலகிருஸ்ணன், பெண்ணின் தாத்தா திரு அனந்தையா மற்றும் ஊர் பெரியவர்கள் இருந்தார்கள்.

                   காப்பி பிஸ்கட் எல்லாம் தந்தார்கள். ஆனால் அந்த ஊர் வழக்கப்படி பெண்ணை மாப்பிள்ளையிடம் காட்டமாட்டார்களாம். பெண்ணுக்கு தெரியாமல் மறைவாக நின்றுதான் பர்த்துக்கொள்ளவேண்டுமாம். நானும் பெண்ணை பார்க்கவேண்டுமென்று சொல்லவில்லை. பெண்ணின் தாய்மாமன் திரு கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் சித்தப்பாவுக்கும் முன்பே நல்ல பழக்கம் இருந்திருகிறது. அதனால் அவர் "வேறு எதுவும் பேசவேண்டாம். இதே மாப்பிள்ளை இதே பெண்தான் ஆவணி மாதம் கல்யாணம்" என்று சொல்லிவிட்டார். (பின்னாளில் சித்தப்பா மகன் தர்மலிங்கத்துக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் என்ற ஊரில் பிரேமா என்ற பெண்ணை பார்க்க போயிருந்தோம், அப்பொழுதுஅந்த பெண்ணே எல்லோருக்கும் காப்பி கொடுத்தாள். அதுமட்டுமல்ல பெண்ணும் மாப்பிள்ளையும் தனியாக பேசவேண்டுமாம் என்று ஒருவர் சொன்னார்.  உடனே இருவரும் ஒரு தனி அறையில் ஐந்து நிமிஷம் பேசிவிட்டு வந்தார்கள்.  ஊருக்கு திரும்பி வரும்போது எனது மனைவி என் காதோரம் வந்து நீங்களும் இருக்கிறீர்களே என்னை பெண்பார்க்க வந்தபோது பெண்ணை நேரில் பார்க்கவேண்டும் என்று சொல்லவேண்டாமா  எனக்கும் உங்களை அந்த நேரம் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்காதா என்று சொல்லி வெட்கத்துடன்  சிரித்தாள்.) பின்பு ஆறுமுகநேரி பள்ளிவாசல் வந்து பஸ்சில் ஊருக்கு  வந்தோம். நான் எனது பணிக்கு சென்றுவிட்டேன்.  

                ஒருநாள் அம்மாவிடமிருந்து உடனே புறப்பட்டுவா என்று லெட்டர் வந்தது. என்னமோ ஏதோ என்று இரண்டு நாட்கள் லீவு எடுத்து மீளவிட்டான் வந்தேன். அம்மாவிடம் "என்னம்மா அவசரம்" என்றேன். "வேறொன்றுமில்லை அந்த பெண்ணின் பாட்டிஉன்னை பார்க்கவேண்டுமாம். அவளுக்கு பிடித்திருந்தால் தான் திருமணம் நடக்குமாம். நீ அங்கு போய் அந்த பாட்டியை.பார்த்துவிட்டுவா" என்று சொன்னார்கள்.  "சரியம்மா" என்று சொல்லிவிட்டு ஆறுமுகநேரி அந்த பாட்டி வீடிற்கு போனேன். 

                        பாட்டி வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டில் கொஞ்சம் இருங்கள் இப்போ வந்துவிடுவாள் என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சுமார் எண்பது வயதிருக்கும் பாட்டி வந்தாள். உடனே பக்கத்து வீட்டுக்காரி "பாட்டி!  எங்கே போனீர்கள்? மாப்பிள்ளை ரொம்ப  நேரமா காத்திருக்கிறார்" என்று சொன்னாள்.  அதற்கு அந்த பாட்டி "எனது அம்மாவை ரயிலில் அனுப்பிவிட்டு வந்தேன்" என்று சொன்னவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பெரிய பாட்டிக்கு அம்மா இன்னும் இருக்கிறர்களா! அப்போ அந்த பாட்டிக்கு எத்தனை வயதிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.


என் திருமணம்!

                              திருமணதிற்கு முதல் நாள் இரவு நங்கள் எல்ல்லோரும் ஆறுமுகநேரி பெண் வீட்டிற்கு வந்துவிட்டோம். அப்பொழுது எனது தாய்மாமன் திரு சன்னாசி அவர்கள் மகள் பஞ்சவர்ணத்திற்கு வயிற்று வலி என்று சொன்னாள். உடனே "நான் போய் பெண்வீட்டில் சுக்குகாப்பியோ அல்லது வெந்நீரோ வங்கி வருகிறேன்" என்று சொல்லிவிட்டு பெண்வீட்டில் போய் மப்பிள்ளைக்கு வெந்நீர் வேண்டுமாம் கொடுங்கள்.என்று கேட்டேன். 

                    இப்பொழுதாவது பெண்ணை பார்த்துவிடலாம் என்று நினைத்தேன். கையில் வெந்நீருடன் வந்த பெண் மறைவாக நின்று கொண்டு "நீங்கள் யார்?" என்று கேட்டாள். நான் மாப்பிள்ளையின் தம்பி என்று சொன்னேன்.உடனே அவள் நான் பொய் சொன்னதை தெரிந்துகொண்டாள். ஏனன்றால் அவள் அன்று  பெண் பார்க்கவந்தபோது என்னை கதவு இடைவெளியில் பார்த்திருக்கிறாள். 
அதனால் அவள் வெந்நீர் கொண்டுவந்த செம்பை திண்ணையில் வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.  அப்பொழுதும் பெண்ணை பார்க்க முடியவில்லை.




                       29.8.1965  எங்கள் திருமணம் மிக சிறப்பாக ஆறுமுகநேரியில்  பெண்ணின் வீட்டில் நடந்தது.  காலை ஆறுமணிக்கு குளித்துவிட்டு மாப்பிள்ளைக்கு ரெடியானேன்.நான் மணமேடையில் அமர்திருந்தேன். பதினைந்து நிமிடங்கள் ஆகியும் பெண் மணமேடைக்கு வரவில்லை. பெண்ணின் ஒரே தம்பி ஏழு வயது கனகராஜை விளையாட்டாக அழைத்து "ஏய்! பெண்ணை சீக்கிரம் வரசொல்!" என்று சொன்னேன். அந்த சிறுவனும் வீட்டிற்குள் போயி அக்காளை சீக்கிரம் அழைத்து வாருங்கள்.என்று சொன்னான். மணமேடை முன்பு இருந்த எல்லோரும் சிரித்தார்கள். எனக்கு வெட்கமாக இருந்தது. நான் எனது கழுத்திலுள்ள மாலைலிருது உதிர்ந்த ரோஜா இதழ்களை எடுத்து தின்றுகொண்டிருந்தேன். அதைப்பார்த்த பெண்ணின் தோழி ஒருத்தி "ஏய்! சீக்கிரம் வாடி! மாப்பிள்ளை ரோஜா மாலையை முழுதும் தின்று விடுவார் போலிருக்கிறது "என்று சொல்லிக்கொண்டே பெண்ணை அழைத்து கொண்டு வந்தார்கள். அப்பொழுது தான் நான் பெண்ணின் முகத்தை பார்த்தேன். பதினாறு வயதே நிரம்பிய பால் வடியும் முகம். 

                       பெண்ணின் தாய்மாமன் திரு பு. முருகபெருமாள், திரு ராமசந்திரன், திரு கோபாலகிருஷ்ணன், திரு நடராஜன், திரு மோட்டார் என்ற நடராஜன், காயல்பட்டணம் அருணாச்சலபுரம் திரு செந்திவேல் அவர்கள் மற்றும் எல்லா உறவினர்களும் வந்திருந்தார்கள். எல்லா உறவுகள், ஊர் பொதுமக்கள் முன்பாக வெகு சிறப்பாக திருமணம் நடந்தது. கெட்டிமேளம் கொட்ட பெண்களின் குலவை சத்தத்தில் தாலி கட்டினேன். பெண்ணின் அப்பா வந்து பெண்ணின் கையைபிடித்து என் கையில் கொடுத்தார். ஒரு குழந்தையின் கைப்போல இருந்தது. பின்பு ஒரு ஜீப்பில் எங்களை ஊர்வலமாக அழைத்து சென்றார்கள்.  ஒரு உறவினர் பெண்ணின் சித்தி  வீட்டு பக்கம் ஊர்வலம் போகும்போது பால் பழம் கொடுத்தார்கள்.  பெண்ணுக்கு பால் என்றாலே பிடிக்காதாம். அதனால் முழுவதும் நானே குடித்தேன்.  அன்று மாலை எங்கள் வீட்டிற்கு மீளவிட்டான் போனோம். வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

வரவேற்பு நிகழ்ச்சி!

                            இரவு எட்டு மணிக்கு தூத்துக்குடி சித்தப்பா திரு ராமசாமி அவர்கள் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.  வளர்மதி இசைக்குழுவினரின் இன்னிசை விருந்து நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மற்றொரு சித்தப்பா திரு தங்கராஜ் அவர்களும் பாடினார்கள். பெரிய சித்தப்பா திரு பாண்டியன் அவர்களும் சித்தி பிரமு, சித்தி ராமு எல்லோரும் கலந்து கொண்டு எங்களை வாழ்த்தினார்கள்.  மறுநாள் ஆறுமுகநேரி சென்றோம்.

                          திருமணத்திற்காக  மூன்று நாட்கள் லீவுதான் கொடுத்தார்கள். லீவு முடிந்து. விஜயநாராயணம் சென்றோம் . பெண் வீட்டார் பெண்ணின் அப்பா அம்மா, பெண்ணின் சித்தப்பா திரு புலமாடன் சித்தி லிங்கம்மாள் ஆகியோர் சீர்வரிசை  கொண்டுவந்தார்கள். எங்கள் வீட்டிலிருந்து அம்மா, பெரிய அக்கா ஷன்முககனி, மச்சான் திரு ப.முனியசாமி,  தங்கை பாப்பா, தங்கை மாப்பிள்ளை திரு சு. ஜெயராமன், சித்தப்பா திரு எம்.ராமசாமி, சித்தி ராமு ஆகியோர் வந்தோம். விஜயனாராயனத்தில் காவலர்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்து பரிசுகளை தந்தார்கள். காவல்நிலையத்தில் புதிய உதவி ஆய்வாளர் திரு கிருஸ்த்துதாஸ் தலைமையில் புதிய தலைமை காவலர் திரு ராஜா மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி பரிசுகள் வழங்கினார்கள்.  மறுநாளே எங்களுடன் அம்மாவை  மட்டும் வைத்து விட்டு உறவினர்கள்  எல்லோரும் ஊருக்கு புறப்பட்டார்கள். 

                                                                                அப்போது...

Tuesday 18 October 2011

பதவி உயர்வு!

அப்போது


                           அதனால்   பஸ் ஓடவில்லை .   வெளியூர்   பஸ்கள்    மிகவும்   தாமதமாகவே   புறப்பட்டது .    தூத்துக்குடி  வந்து சித்தப்பாவிடம்   சொல்லிவிட்டு   மீளவிட்டான்   வந்தேன்.  அம்மாவுக்கு   ரொம்பவே   சந்தோசம் . 

                                 ஏழு நாட்கள்   லீவு  முடிந்து   திருநெல்வேலி   மாவட்ட   காவல்   அலுவலகத்தில் பணிக்கு ஆஜரானேன் . அப்பொழுதே எனக்கு திருநெல்வேலி ஜங்சன் பாலம்   காவல்   நிலையத்திற்கு   பணி  நியமிக்கப்பட்டது . வுதவி   ஆய்வாளர்   திரு   சார்லஸ்   என்பவர்   ரொம்பவும்   நல்லவர் .  அவர்  ஆங்கிலோ   இந்தியன் .  ஒரு வாரத்தில்   கிக்கிரகுளம்   என்ற   இடத்தில்    வாடகைக்கு   வீடு   பார்த்து   அம்மாவை   அழைத்து   வந்தேன் .   இரண்டு   மாதத்தில்   காவலர்  குடியிருப்பில்     எனக்கு   வீடு   கிடைத்து விட்டது .   காவல்  நிலையத்திற்கு   பின்னாலேயே   வீடு .   பக்கத்துக்கு   வீடுகளில்    நல்ல   நண்பர்கள் .   திருக்க்கரன்குடி திரு   மகாதேவன் ,  குரும்பூர்  தோணிபாலம்   திரு இசக்கிமுத்து  ஆகியோர்கள்   இருந்தார்கள் .   

                   திரு மகாதேவன்  தனது   இரண்டு   தங்கைகள் அற்புதமணி , கங்கா ஆகியோருடன்   இருந்தார் .   கங்கா   5 வது   வகுப்பு   படித்து  வந்தாள் .  சில  நாட்களில்    அவளை   நான் சைக்கிளில்  கொண்டுபோய்   பள்ளியில்  விட்டு  வருவேன் .   அப்பொழுது, "அவளிடம்   நீ   நன்றாக   படித்து   பெரிய   வேலைக்கு   போகும்போது   உன்   அண்ணனை   மறந்துவிடாதே   நன்றாக   கவனித்துகொள்!"  என்று   சொல்வேன். பின்னாளில்  திரு   மகாதேவன்   தனது   தங்கைகள்   அருப்புதமணியை    களக்காடு   திரு   கனகருக்கும் ,   கங்காவை    வள்ளியூர்   திரு   வரதாஸ்    ஆசிரியருக்கும்   திருமணம்   செய்துவைத்தார் .  அந்த  கங்கா   பின்னாளில்    மாவட்ட   கஜானாவில்   குமாஸ்தாவகினாள்  .   அவள்   மகன்   அலெக்ஸ்மேனன்  I.A.S.  படித்து   சட்டீஸ்கர்   மாநிலத்தில்   மாவட்ட   ஆட்சியராக   இருக்கிறான் . ஆனால் இந்த   சந்தோசத்தை   அவளால்   காணமுடியவில்லை .  அவள்   மகள் சாத்தூரில்   திருமணம்    செய்து   கொடுக்கப்பட்டு உள்ளாள்.     
எழுத்தராக பதவி உயர்வு! 

                        சில   மாதங்களில் நிலைய   எழுத்தர்   தேர்வு    நடைபெறுவதாக   இருந்தது . நானும்   அதில்   கலந்து கொள்வதற்கு   மனு   எழுதிக்கொடுத்தேன் .  அப்போது   ஆய்வாளராக   இருந்த   திரு   நடராஜன்   என்பவர்   எனது   மனுவை  எழுத்தர்   தேர்வுக்கு  சிபாரிசு   செய்யவில்லை .   இந்த   விஷயம் சர்க்கிள் ரைட்டர்  மூலமாக   நான்  தெரிந்துகொண்டேன் . உடனே   தாழையுத்து சர்க்கிள்   இன்ஸ்பெக்டர்  திரு   ஆண்டிபட்டி   நடராஜன் அவர்கள் எனது   பெரியப்பா   திரு   M.ஆண்டி அவர்களுக்கு நன்கு பழக்கம் உள்ளவர் . 

                   அதனால் அவரிடம்   போய் விஷயத்தை  சொன்னேன் . அவர்   உடனே   எனது   இன்ஸ்பெக்டருக்கு   போன்  மூலமாக "ராமசாமி எழுத்தர் தேர்வு   மனுவை ஏன்   சிபாரிசு செய்யவில்லை?"   என்று   கேட்டார் .   அதற்கு அவர் "ராமசாமியின் நடத்தை   அவர்   திறமையைப்பற்றி   எனக்கு   அதிகமாக   தெரியாது   அவர்   இந்த   ஸ்டேசனுக்கு   வந்து   நான்கு   மாதங்கள்தான்   ஆகிறது. அதனால்   அவரைபற்றி    எனக்கு   அதிகம்   தெரியவில்லை .  இப்பொழுது  நீங்கள்  சொல்வதால்   சிபார்சு   செய்துவிடுகிறேன்" என்று   சொல்லி   சிபார்சு   செய்துள்ளார் . உடனே திரு ஆண்டிபெட்டி நடராஜன்   அவர்கள்   என்னிடம் "அவர் சிபார்சு செய்துவிடுவார். நீ நன்றாக   தேர்வு   எழுது"   என்று   ஆசீர்வாதம்   செய்து அறிவுரைகள்    சொல்லி   என்னை ஊக்கப்படுத்தி அனுப்பினார்.   

                     ஒரு   வாரத்தில்   எழுத்தர்   தேர்வில்   கலந்துகொள்ள   உத்தரவு   வந்தது .   தேர்வுக்கு   சென்றேன்    முதலில்   கவாத்து  தேர்வு   வரிசையில் நிற்கும்போது ஆபீஸ்   குமாஸ்தா   வந்து   சங்கரன்   என்ற   காவலரை   உனக்கு   நான்கு   வருடம்   பூர்த்தியாகவில்லை. ஆகையால் நீ கலந்து கொள்ளமுடியாது   என்று   அவரை   வெளியேற்றினர் .  நான் கவாத்தில்    தேர்வு பெற்று   எழுத்து   தேர்விலும்    தேர்வு பெற்றுவிட்டேன் .   மாவட்டத்தில் நான்காவதாக தேர்வு பெற்றிருந்தேன். 

                           பத்து  நாட்களில்   நியமன உத்தரவு வந்தது. எனக்கு   விஜயநாராயணம்   காவல்   நிலையத்தில்   எழுத்தராக   நியமனம்   செய்யபட்டிருந்தது .   உடனே   நண்பர்களிடம்   விடைபெற்று   அம்மாவை   அழைத்துக்கொண்டு   வீட்டை   காலிசெய்து   சாமான்களையும்   எடுத்துகொண்டு   மீளவிட்டான்   வந்தோம் . மறுநாள்  தூத்துக்குடி   போய்   சித்தப்பாவிடம்   சொன்னேன் .   அப்பொழுது சித்தப்பா "அங்கே   எனக்கு   மிகவும்   தெரிந்த ஏழான்கால் மாடசாமி   என்பவர்   இருக்கிறார் .   அவரிடம்   உன்னை  அறிமுகம்   செய்து   வைக்கிறேன் .   நாளைக்கே   போகலாம்"   என்று   சொன்னார் .   

                       அதன்படி   மறுநாள்   விஜயநாராயணம்   சென்று   திரு ஏழான்கால் மாடசாமி   என்பவரை   பார்த்து   சித்தப்பா   சொன்னார்கள் .   அவரும் "தம்பி   பயம்   வேண்டாம் .   நீ   வா   நான்   பார்த்துகொள்கிறேன்"  என்று   சொன்னார் .   அப்பால்   உதவி   ஆய்வாளர்   திரு செய்யது   ஷேரிப்புடீன்   அவர்களை   சந்தித்தோம்.  "அவர்   சீக்கிரம்   வந்து   பணியில்   சேருங்கள்" என்று சொல்லியனுப்பினார் .  மணி   இரவு    பத்து   மணியாகிவிட்டது .   இதற்குமேல்   பஸ்   இருக்காதே   என்று   எண்ணிக்கொண்டு   தெற்கு   விஜயநாராயணம்   சென்றோம் .   அங்கே   பஸ்கள்   போய்க்கொண்டிருந்தது. அன்று   வைகாசி   விசாகம்   என்பதால்   பஸ்ஸில்   கூட்டம்   அதிகமாக இருந்தது .   இரவு   12 மணிக்கு  திருச்செந்தூர்   பஸ்   கிடைத்தது .  அதில் ஏறி   திருச்செந்தூர்   வந்தோம் . கோவில்    கலையரங்கத்தில்   சிறிது  நேரம்    தங்கி   இருந்துவிட்டு    அதிகாலை   பூஜையில்   கலந்துகொண்டு   ஸ்ரீ   முருகபெருமானை  வணங்கி   அவர் அருள்  பெற்று ஊருக்கு   புறப்பட்டோம் .   

பெண் பார்த்தேன்!

                          நடந்தே   ஆறுமுகநேரி   செல்வரஜபுரம்   வந்து   ரயில்வே   கேட்  அருகில்   ஒரு   காப்பி   ஹோட்டலில்   காப்பி   குடித்து கொண்டிருந்தோம் .   அப்பொழுது   சித்தப்பாவுக்கு   தெரிந்த   பாட்டி  ஒருவர்   அங்கு  இருக்கிறார். அவர்   வீடு   எங்கே இருக்கிறது   என்று   விசாரித்தோம் .  அப்பொழுது ப்ளுவூத் முத்தையா என்பவர் "அந்த  பாட்டி   இப்பொழுது   இங்கில்லை" என்று   சொல்லிவிட்டு   என்னைப்பற்றி   சித்தப்பாவிடம்   விசாரித்தார் . தம்பிக்கு   திருமணமாகிவிட்டதா?" என்று   கேட்டு "இங்கே   ஒரு   நல்ல   பெண்     இருக்கிறது   வாருங்கள்   நான்   காட்டுகிறேன்" என்று   எங்களை   பெண்கள்   குளித்து  கொண்டிருக்கும் ஒரு   கிணற்றுக்கு   கூட்டிச்சென்றார் .   அப்பொழுது   மூன்று   பெண்கள்   குளித்துவிட்டு   தண்ணீர்குடம்   சுமந்து   சென்று கொண்டிருந்தார்கள் . "அதோ   மூன்றவதாக   ஒரு   பெண் போகிறாளே அந்த   பெண்தான்"   என்று    பின்பக்கமாக   காட்டினார்.  "நீங்கள்   விரும்பினால்   அவர்கள்   வீட்டிற்கு   கூட்டிசெல்கிறேன். வாருங்கள்"  என்று அந்த பெண்ணின்  பக்கத்து   வீட்டிற்கு   கூட்டிசென்றார். 

                          அந்த   பக்கத்து வீட்டு   முத்தம்மாள்   என்பவர் "அதோ   சேலையை   காயப்போட்டுக் கொண்டிருக்கிறாளே அவள்தான்.   அப்பவும் பின்பக்கம்தான்   பார்க்கமுடிந்தது .   முத்தம்மாள்    அந்த பெண்ணிடம் " ராஜகனி   எங்கள்  வீடுவரை   கொஞ்சம்  வந்து உயரே பரணில்   ஒரு சாமான் இருக்கிறது. எனக்கு   எட்டவில்லை. நீ வந்து எடுத்து   தந்துவிட்டு வா" என்று சொன்னாள்.  அது  எங்களுக்கும் கேட்கிறது . ஆனால்   அந்த பெண், " உங்கள்  வீட்டில்   ஆட்கள்   சத்தம்   கேட்கிறதே.   யார்  அவர்கள் ?  நான் வரமாட்டேன்" என்று   சொல்லிவிட்டாள். முத்தம்மாள்   எவ்வளவோ   எடுத்து   சொன்னாள். "அது   எங்கள்   சொந்தக்காரர்கள். ஊரிலிருந்து வந்துள்ளார்கள். நீ தயவு  செய்து வந்து   எடுத்து கொடுத்துவிட்டு வாயேன் " என்று சொல்லி பார்த்தாள்.  ஆனால்   அந்த பெண் வர  மறுத்து  விட்டாள்.   "நீங்கள்   இன்னொருநாள்   வாருங்கள். நான்   அவர்கள் அப்பா அம்மாவிடம்  சொல்லிவைக்கிறேன் . நல்ல இடம் ஆதனால்   கட்டாயம் வாருங்கள்"   என்று   முத்தையாவும்   சொன்னார் .   அதனால்   நானும்   சித்தப்பாவும்   நல்லூர்   அக்கா வீட்டிற்கு   போய்விட்டு ஊருக்கு போவோம்   என்று   ரயில்வே  தண்டவாளத்தின்   வழியாக   நடந்தே   போனோம் .   அப்பொழுது   பின்னால்   ஒருவர், "அய்யா! அய்யா! " என்று   எங்களை கூப்பிட்டுக்கொண்டே  வந்தார்.
                                                                      அப்போது ..........        

Monday 17 October 2011

திருநெல்வேலிக்கு மாறுதல்!

அப்போது.......                            

                            அம்மாவிடம் விஷயத்தை சொன்னவுடன் அம்மாவுக்கு  ரொம்பவும் சந்தோசம். அம்மாவிடம் ஏற்கெனவே ராமன்துறை   கணக்கப்பிள்ளை   வீட்டைப்பற்றி   சொல்லியிருக்கிறேன்  .  அம்மா   எங்களை  அந்த  வீட்டுக்கு   கூட்டிபோயேன்  என்று சொன்னார்கள் . ஒரு ஞாயித்துகிழமை   அம்மாவையும்    தங்கை  பாப்பாவையும்   அங்கே  அழைத்து  சென்றேன் .  அம்மாவுக்கு அவர்களையும்   அவர்கள்  மகள்   ரோஸ்மேரியையும் ரொம்ப   பிடித்துவிட்டது   என்று  நினைத்தேன் .   வீட்டிற்கு   வந்தவுடன்   அம்மா   என்னிடம் "இங்கல்லாம்  உனக்கு   பெண்பார்க்க கூடாதப்பா! ஏழையோ   பாழையோ   நம்ம   ஊர்பக்கம்தன்  பார்க்கவேண்டும்"  என்று சொன்னார்கள் . "அதற்கு   இப்போ   என்னம்மா  அவசரம்" என்று சொல்லிவிட்டேன் .

                          இரண்டு நாட்கள் கழித்து ராமன்துறை சென்றேன் .  ரோஸ்மேரியை சந்தித்து "அம்மா என்ன  சொன்னார்கள். நீங்கள்   எதாவது   அம்மாவிடம்  சொன்னீர்களா ?"   என்று கேட்டேன் . " நாங்கள்   ஒன்றும்   சொல்லவில்லை. உங்கள்  தங்கைதான்   எங்கள்   அண்ணன்   உங்களை  விரும்புகிறானா ?   என்று கேட்டாள் .   "நானும்   ஆமாம்   என்று சொன்னேன் . மேலும்    எங்கள் வீட்டில்    எல்லோரிடமும்    சம்மதம்   வாங்கி   விடுறேன் "  என்று   சொன்னாள் .   "இல்லம்மா முதலில்   என்   தங்கைக்கு  திருமணம்    நடக்கவேண்டும்   அப்புறம் என் சித்தப்பாவுக்கும் என் அம்மாவுக்கும்   உன்னை   பிடிக்கவேண்டும்"  என்று சொன்னேன் . "அப்போ   உங்கள்  சித்தப்பாவை   வரசொல்லுங்கள்   அல்லது   அவருடைய   விலாசம்  கொடுங்கள்   நான்   லெட்டர்   எழுதுகிறேன்   என்று   சொன்னாள்.  சித்தப்பாவின்   விலாசத்தை   அவளிடம்   கொடுத்துவிட்டு   விரைவில்   எனக்கு   திருநெல்வேலி    மாவட்டத்துக்கு   மாறுதல் வந்துவிடும்   என்று சொல்லிவிட்டு  வந்தேன் .         

கள் இறக்கியவன் சம்பவம் !

                      ஒருநாள்   குழித்துறை   நீதிமன்றந்தில்   ஒரு   ருசிகரமான   சம்பவம்   நடந்தது .   திருவட்டார்   காவல்நிலையத்திலிருந்து     ஒரு நபர்   பனைமரத்திலிருந்து  கள்   இறக்கியதாக   அந்த   நபரை   நீதிமன்றம் கொண்டுவந்தார்கள்  .  அந்த     நபரிடம்  நீதிபதி "நீ பனைமரத்தில்    கலயம் கட்டி கள் இறக்கிக்யதாக   உன்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது . அதற்கு நீ என்ன  சொல்லுகிறாய் ? " என்று கேட்டார் .   அதற்கு   அவன்   ஆமாம்  அய்யா   உண்மைதான்  என்று சொன்னான் .  " இதற்கு முன்பு இப்படி ஏதாவது தப்பு   செய்திருகிறாயா" என்று கேட்டார் .  அவன்   சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "அய்யா ஒரே  ஒரு  தடவை   மட்டும்   கள் இறக்கும்போது   அதோ   உட்கார்ந்திருகிறாரே   அந்த   ஏட்டு அங்கேயே பிடித்து   நூறு   ரூபாய்    அபராதம்   போட்டார்.   அங்கேயே   பணத்தை  கட்டிவிட்டேன். அது   தவிர   வேறு  எதுவும்   செய்ததில்லை  என்று அப்பாவியாய்   சொன்னான் .   உடனே   நீதிமன்றத்தில்    இருந்தவர்கள்   அனைவரும்   நீதிபதி   உள்பட   அனைவரும்   குபீரென்று   சிரித்தார்கள் . அந்த   குறிப்பிட்ட   ஏட்டய்யா   இவன்   பொய்   சொல்லுகிறான்   என்று முனங்கிக்கொண்டே   நழுவி   நீதிமன்றத்தை  விட்டு  வெளியே   சென்று  விட்டார் . அப்பாவியான   அந்த நபருக்கு நீதிபதி அவர்கள்   நூறு ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள் .  

                         நாகர்கோயில்   மாவட்ட   காவல்   அலுவலகத்தில்   காவலர்   தேர்வு    நடந்தது .   தம்பி   ராமலிங்கத்தை   வரவழைத்து   தீர்வுக்கு   அழைத்து  சென்றேன் .   அப்பொழுது   காவல்கண்காணிப்பாளர்    திரு   R.ராஜகோபால்  அவர்கள். ஆனால்   தேர்வில்   உயரத்தில்   ஒன்டரை   அங்குலம்   குறைந்து விட்டது .  அப்பொழுது    கடலூரில்   ஒருவன்   உயரம்   குறைந்ததற்கு   அவன் சுவரிலே   தலையை   முட்டி   வீங்க   செய்து    அரை   அங்குலத்தை   சரி  செய்தது    நினைவு    வந்தது. ஆனால்    இது    ஒன்றரை   அங்குலம் குறைவு   மேலும்   அந்த விபரீத   செயலை   நான்  விரும்பவில்லை . புதுக்கடை   வந்து   இரண்டு  நாட்கள்   கழித்து   தம்பி   ராமலிங்கத்துடன்   அம்மாவையும்   தங்கையையும் ஊருக்கு    அனுப்பிவைத்தேன் .


தங்கையின் திருமணம்!

                      அவர்கள் ஊருக்கு வந்த   ஒரு   மாதத்தில்   தங்கைக்கு   திருமண   ஏற்பாடுகள்   நடந்தது .  அம்மாவின்   பாலிய  சினேகிதி    திருமதி   மொட்டியாம்மா    திரு  சுடலை   அவர்கள்  இளைய  மகன்   திரு ஜெயராமன். திருமணமானது    சித்தப்பா, அத்தான் திரு முனியசாமி , ஆகியோர்   ஏற்பாட்டின்படி    மாப்பிள்ளையின்   சகோதரர்கள்   திரு   சந்தனசாமி , திரு சித்திரவேல், திரு சிதம்பரம் மற்றும் அவர்கள்   சகோதரிகள்    ஆகியோருடன்    பேசினார்கள்.  அவர்கள்   எல்லோருக்கும்    தங்கை   பாப்பாவை   பிடித்துவிட்டது .  மாப்பிள்ளை  விருதுநகரில்   ஒரு பேப்பர் மில்லில்   வேலைபார்த்தார்  .   திருமணம்   நல்லபடியாக  முடிந்து   அவர்கள்   விருதுநகரில்   குடியேறினார்கள் .  நானும்  ,  அம்மா  , அண்ணன் லக்ஷ்மணன்  ,  தம்பி   ராமலிங்கம்  ஆகியோர்   சீர்வரிசையுடன்   சென்று   தனிக்குடித்தனம்  வைத்தோம் .  அங்கு   25 போஸ்ட் கார்ட்கள்   25  வாங்கி   எல்லாவற்றிலும்   எனது   விலாசத்தை   எழுதி   தினசரி   ஒரு லெட்டர்   எழுதிப்போடு   என்று  சொல்லிவிட்டு   பிரியா   விடைபெற்று ஊருக்கு  வந்தோம் .  


திருநெல்வேலிக்கு மாறுதல்!

                 லீவு  முடிந்து   புதுக்கடை   வந்து  பணியில்  சேர்ந்தேன். ஒரு  வாரத்தில்   அதாவது   ஜூன்   மாதம்   1964 எனக்கு   திருநெல்வேலி   மாவட்டத்திற்கு   மாறுதல்   உத்தரவு   வந்தது .  உடனே    ராமன்துறை   வந்து   கணக்கபிள்ளை  வீட்டில்   எல்லோரிடமும்  சொலிவிட்டு  வந்தேன் .   காவல்நிலையத்தில்   எனக்கு   பிரிவுபசார   விழ   நடந்தது .  காவலர்   நண்பர்களிடமும், தமிழ்   பண்டிட்   திரு   அன்பையா  சார்   வீட்டில், ஆசிரியர்  திரு லீநோஸ்  , சலூன்கடை    சதாசிவம்    மற்றும்   போஸ்ட்   ஆபீஸ்   திரு   ராஜபாண்டியன்    அனைவரிடமும்    சொல்லிவிட்டு    திருநெல்வேலிக்கு    புறப்பட்டேன் .   அன்று   கில்லிகோடு போலீஸ்  ஸ்டேசனில்   ஏதோ   ஒரு   வழக்கில்   சம்மந்தப்பட்ட   ஆசிரியர்களை   கைவிலங்கு   போட்டு   கோர்ட்டுக்கு   கொண்டுபோனது   சம்மந்தமாக   பெரிய   பிரச்சனையாகி   மாவட்டம்   முழுவதும்   ஆர்ப்பாட்டங்கள்   நடந்தது .

                                                                              அப்போது.......

Saturday 15 October 2011

கலவர பாதிப்பு! விசாரணை! தீர்ப்பு!

அப்போது......

                        முப்பதைந்துபேர்   பெரிய   சிறிய   காயங்களுடன்    கதறிக் கொண்டிருந்தார்கள். சிறிது  நேரத்தில் பெரிய அதிகாரிகள்  வந்தார்கள்    காயம்பட்ட  அனைவரையும்   மருத்துவமனைக்கு   அனுப்பினோம் . சர்கிள்   இன்ஸ்பெக்டர் திரு பாலகிருஷ்ணன்   நாயர் , தக்கலை D.S.P. திரு பி.ஜெ.கருணாகரன்   மற்றும் ஆயுதப்படை   காவலர்கள்  இரண்டு லாரியில் வந்தார்கள் . ஊரில்   பெண்களை  தவிர   ஆண்கள்  யாரும்   இல்லை .  இதில்   நூற்றி  பதினைந்து  பேர்   மீதும்   காவலர்களை   பணி செய்யவிடாமல்   தடுத்ததாக   இருபத்தொரு  பேர்   மீதும்  வழக்கு  பதிவு  செய்யபட்டது

                  ஆயிரத்து  தொள்ளாயிரத்து  அறுபத்திமூன்று   மார்ச்  மாதம்   லீவில்   ஊருக்கு  போனேன். அம்மாவையும்   தங்கை  பாப்பாவையும் அழைத்துக் கொண்டு  வந்தேன்.  காவல்நிலையம்  பக்கத்திலேயே   ஒரு   வீடு  வாடகைக்கு   எடுத்து   குடியிருந்தோம்.  காவல்  நிலையத்தில் ரைட்டர்   திரு  நடராஜன்   எனக்கு  காவல்  நிலைய  வேலைகளை   நன்றாக   சொல்லிகொடுத்தார்.  நானும், காவலர்கள்  பாவெல் , முஸ்தபா   ஆகியோர்  காவல்நிலைய   வேலைகளை நன்றாக படித்துக்கொண்டு ரைட்டருக்கு   மிகவும்   உதவியாக  இருந்தோம்.  நான்   எனது   பணிநேரம்  முடிந்தாலும்   வீட்டிற்கு   போகாமல்   காவல் நிலைய வேலைகளை செய்து கொண்டிருப்பேன் .  நாளடைவில்   என்னை   கோர்ட்  அலுவல்களை  பார்க்க நியமித்தார்கள் . நான் கோர்ட் நடக்கும்  நாட்களில்  வழக்கு கட்டுகளை  எடுத்துக்கொண்டு   கோர்டுக்கு   போயி   அரசாங்க  வக்கீலுக்கு  உதவியாக இருப்பேன்.  அதன்  காரணமாகவும் ரைட்டர் நடராஜன் கற்றுகொடுத்த வேலைகளையும்    நாளடைவில்   முதல்  தாக்கல்  அறிக்கை, குற்ற பத்திரிக்கை,  இறுதி   அறிக்கை ஆகிய   வேலைகளை சாட்சிகளின்  வாக்குமூலங்களை   எழுதுவதற்கும்   நன்கு    தெரிந்து கொண்டேன் .

                           ஏட்டைய்யா ராமன்  நாயர் ,  விக்கன்  பாஸ்கரன் , விஸ்வம்பரன் நாயர் ,  தாமரைகுளம்   தாண்டவன்   ஆகியோர்களும்  காவல் நிலையம்   சம்மந்தபட்ட  எல்லா  வேலைகளையும்   சொல்லித்தந்தார்கள் .  S.I. திரு சங்கரபாண்டியன்   அவர்கள்   திருநெல்வேலி   மாவட்டம்   சங்கரன்கோயில்   பக்கமுள்ள   குருக்கல்பெட்டி   என்பதால் என்னிடம்   பிரியமாக  இருப்பார் .  கைதிகள்   சம்மந்தப்பட்ட   விசயங்களில்   என்னை ,  பாவேலை  முஸ்தபாவை மட்டும்தான் செய்யசொல்லுவார் .   முருகன்  என்றொரு   காவலர்  இருந்தார் .  மிகவும்   தமாசானவர் .  அவர்   கைதிகளிடம்  தமாசாவும் , கிண்டலடித்தும்   பேசியே  உண்மையை வரவழைத்து விடுவார்  .  இணையம்  புத்தன்துரை   வழக்கு குற்ற  பத்திரிக்கை    தயாரிக்கும்போது ,  அரசு  உதவி  வழக்கறிஞர்    திரு  தக்கலை   சோமசுந்தரம்  பிள்ளை   என்னைத்தான்   எழுத  கூஒப்பிடுவர் .   அவர் சொல்லசொல்ல  நான்  எழுதுவேன் .

தீர்ப்பின் மகிழ்ச்சி!

                         புத்தன்துரை கலவர வழக்கில்  நூற்றி இருபத்தாறு  நபர்கள்  மீது  குற்றபத்திரிக்கை தாக்கல்  செய்யப்பட்டது . நூற்றிருபது   சாட்சிகள் . சிறிது  நாட்களில்  வழக்கு விசாரணைக்கு  வந்தது .  ஒவ்வொரு  நாளும்  சாட்சிகள்  சொல்லவேண்டியதை  அவர்களுக்கு  சொல்லிக்கொடுக்கவேண்டும் . (ஞாபகப்படுத்தவேண்டும் ) . அவர்கள்   சாட்சி  கூண்டில்  ஏறி   சாட்சி  சொல்லும்போது   சரியாக சொல்லுகிறார்களா  என்று  கோர்ட்க்கு  வெளியே   ஜன்னல்  பக்கம்  நின்று  கவனிக்கவேண்டும் .  அந்த சாட்சி எதாவது சொல்ல  விட்டிருந்தால்   அடுத்த  சாட்சி கூண்டில் ஏறி  சாட்சி சொல்லும்போது விட்டுப்போனதையும்  சேர்த்து  சொல்லும்படி   சொல்லவேண்டும் . 

                       சர்கிள் இன்ஸ்பெக்டர் திரு பாலகிருஷ்ணன் நாயர்  அவர்கள்  அடிக்கடி  கோர்ட்டுக்கு  வருவார் . குறிப்பிட்ட  எந்த  வழக்கு எப்படி  நடக்கிறது  என்று பார்ப்பார் . அரசு முதல்  நிலை  வழக்கறிஞர் திரு ராமேஸ்வரலிங்கம்  அவர்கள் நாகர்கோயிலில் இருந்து   வருவார் .  எதிர் தரப்பு   வக்கீல்கள்   திருவளர்கள்   சீனியர்   லாயர்  பக்குரிட்டீன்  அதம் ,  ஜூனியர்கள்   திரு M.C பாலன் , திரு தியாகராஜன் , திரு கமலுதீன் .   இவர்கள்  மிகவும்   தேர்ச்சிபெற்ற  வக்கீல்கள் .  அனைவரும்  நாகர்கோயிலில் இருந்து வருவார்கள் .   

                                வழக்கு   சுமார்   எட்டு  மாதங்கள்   நடந்தது .  61 எதிரிகளுக்கு   தண்டனை   கிடைத்தது   காவலர்களை   தாக்கிய   வழக்கில் 11 எதிரிகளுக்கும்   தண்டனை கிடைத்தது .  மற்றவர்கள் விடுதலை  செய்யப்பட்டார்கள் .வழக்கு தண்டனையானவுடனே சர்கிள் இன்ஸ்பெக்டர் திரு பாலக்ருஷ்ணன்  நாயர்  அவர்கள் என்னை  கைகுலுக்கி   அவர்   பாக்கெட்டிலிருந்து   25  ரூபாய்   தந்தார்கள் . மேலும்  இவ்வழக்கு    விசாரணை   அதிகாரி   சப்  இன்ஸ்பெக்டர் திரு M.சங்கரபாண்டியன்   மற்றும்  எதிரிகளை   கைது  செய்ய   உதவியாக  இருந்தவர்களுக்கும்    போலீஸ்   இலாகா   மூலமாகவும்   பரிசு  (Reward) களும்   கிடைத்தது .   அந்த ஊரில்  (அந்த   மாவட்டத்தில் )  கிராமத்து   பொதுமக்கள்   காவலர்களை இன்சார்ஜ்   என்றும் , தலைமை  காவலர்களை அங்கதை என்றும் S.I. மற்றும் அதற்க்கு  மேலான  அதிகாரிகளைஅத்தேஹம்  என்றும் அழைப்பார்கள் .  இது   மலையாள   மொழியில்   மரியாதைக்குரிய   வார்த்தைகள் .   
            புதுக்கடையில்   போஸ்டாபீசில் வேலை   பார்க்கும்   தூத்துக்குடி   ராஜபாண்டியன் ,  புதுக்கடை   பக்கமுள்ள   முன்சிறை   உயர்நிலைப்பள்ளியில்   வேலைபார்க்கும்   தமிழ்   பண்டிட்   திரு அன்பையா    சார் ,  ஆசிரியர்   திரு  லீநோஸ்  ,  மற்றும் சலூன்   கடை   சதாசிவம் ஆகியோர்  எனக்கு  மிகவும்   நண்பர்கள் ஆனார்கள் .                                                                            
                           1964 மார்ச்  மாதம்  தமிழக   போலீஸ் அமைச்சர்   திரு P.கக்கன்ஜி   அவர்கள் குழிதுறைக்கு வந்தார்கள் .  அப்பொழுது   அமைச்சர்   தங்குமிடத்தில்   ( T.B)   நான் பாதுகாப்பு   பணியில்   இருந்தேன் .  எங்கள்   S.I. திரு சங்கரபாண்டியன் அவர்கள் அமைச்சர் தங்குமிடம் வருவதற்குமுன்    அங்கு   வந்து    அமைச்சரின்   தனி   உதவியாளரிடம்   பேசிக்கொண்டிருந்தார் .  அவர்கள்   முன்பே   நல்ல  நண்பர்களாம் .   அதனால் இவர்   புதுக்கடை   போலீஸ்  ஸ்டேஷனில்   வேலை பார்க்கிறேன் என்று  சொன்னவுடன்    அவர் "அப்போ   ராமசாமி  என்ற  காவலர்  அங்கு வேலை  பார்க்கிறாரா ?" என்று   கேட்டிருக்கிறார் .  உடனே  இவர் "ஆமாம்   ஏன்   அவர் தான்   இங்கு   பாதுகாப்பு   பணியில்   இருக்கிறார் ."  என்று சொல்லிருக்கிறார் .   "வேறொன்றுமில்லை    அவரது   சித்தப்பா   ராமசாமி   என்பவர்   தூத்துக்குடியில்    அமைச்சரை   சந்தித்து   இவருக்கு   புதுகடையிலிருந்து   திருநெல்வேலி   மாவட்டத்துக்கு   மாறுதல்   வேண்டுமென்று   மனு  கொடுத்துள்ளார் .  அமைச்சரும்   சென்னை  போனவுடன்   செய்கிறேன்   என்று சொல்லி   அந்த  மனுவை  என்னிடம்   தந்தார்கள் .  என்று  அவர் சொன்னவுடன் என்னை   உள்ளே   கூப்பிட்டு   விஷயத்தை   சொன்னார்கள் .  எனக்கு  ரொம்பவும்   சந்தோசம். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன்.
                                                                                      அப்போது,,,,,,,,,

Wednesday 5 October 2011

புத்தன்துரை கலவரம் !

அப்போது....
                                            காவல்  கண்காணிப்பாளர்  திரு  வாசுதேவ  பாட்  அவர்கள் மிகவும்   நல்லவர் . " நீங்கள்  அனைவரும்   திருநெல்வேலி   மாவட்டம்தானே  யாருக்காவது   குறிப்பிட்ட ஏதாவது   காவல்நிலையம்  வேண்டுமா ?" என்று  கேட்டார்கள் .  யாரும்  குறிப்பிட்டு   எதுவும்  கேட்கவில்லை . 

                          மறுநாள்   காலையில்   போஸ்டிங்  ஆர்டர்  கொடுத்தார்கள் .  எனக்கும்   திரு சக்திவேல்  பிள்ளைக்கும்   புதுக்கடை   காவல்  நிலையம் , பி.எஸ்.சுப்பையாவுக்கு   அருமனை ,  மனுவேல்  பூபாலராயருக்கு   கொல்லன்கோடு   கவல்நிலயமும்   போடப்பட்டிருந்தது .   அடுத்த  நாளே   டுட்டியில் சேரவேண்டும்   என்றும்   அந்த    ஆர்டரில் இருந்தது .   மறுநாளே   புதுக்கடை காவல்நிலையம் போய் நானும்   திரு சக்திவேல் பிள்ளையும்   டுட்டிக்கு   சேர்ந்தோம் .  சப்  இன்ஸ்பெக்டர்   திரு எம்.சங்கரபாண்டியன்   அவர்கள் அவரது  சொந்த  ஊர்   திருநெல்வேலி மாவட்டம்   சங்கரன்கோயில்   பக்கமுள்ள   குருக்கல்பெட்டி என்பதை  பின்னால்   தெரிந்துகொண்டேன் .  தலைமை  காவலர்கள்   திருவாளர்கள்   விஸ்வம்பர  நாயர் ,  விக்கன்  பாஸ்கரன் , ராமன்  நாயர் , தாமரைகுளம்   திரு  தாண்டவன் ,  ஸ்டேஷன் ரைட்டர்  திரு நடராசன் காவலர்கள்  திட்டுவிளை  முஸ்தபா ,  திருப்பதிசாரம்   பாவெல் , இரேநிபுரம்   பொன்னையா  நாடார் , முருகன் , ராஜசேகரன்   மற்றும்  பலர் .  எல்லோரும்  எனக்கு  மிகவும்   நல்ல நண்பர்கள்  . எல்லோரும்   ஒற்றுமையுடன்   பணிபுரிந்தோம் .

கால்சட்டை இல்லாமல் நடந்து சென்றது !


                            கடலூரில்  சொன்னதுபோல் இங்கு காவலர்களுக்கென்று   வீடு  எதுவும் கிடையாது .  நானும்   திரு சக்திவேல் பிள்ளையும் ஒரு  வீட்டு  மாடியில்  ஒரு அறையில்   இருவரும்   வாடகைக்கு   தங்கியிருந்தோம் .  டுட்டியில் மிகவும் உஷாராகவும்   சரியாகவும்  இருப்போம். சரியான  நேரத்தில்   டுட்ட்டிக்கு   சென்றுவிடுவேன் .  ஒருநாள்   நேரமாகிவிட்டது.   அவசரமாக   புறப்பட்டேன் .   

                         அந்தகாலத்தில்   காவலர் யூனிபோர்ம்    எப்படிஎன்றல்   அண்ட்ராயர்  மாதிரி   ஒரு காக்கி  அரைகால்  சட்டை   காலர்   இல்லாத   காக்கி முழுக்கை  சட்டை. இடுப்பில்   மேல்சட்டைக்கு  மேல  மூன்று   இன்ச்   அகலமுள்ள  பெல்ட்  .  காலில்  சாக்ஸ்   அதற்குமேல்   ஹோச்ச்டப்  கால்  முட்டிவரையில்   போட்டு    காலில் உள்ள ஷூவின்  மேல்பகுதியும்   ஹோச்ப்பையும்   இணைத்து   ஒரு பட்டி என்ற   ஒரு நீளமான   நாலு  இன்ச் அகலமுள்ள உல்லன் துணியை   (பட்டி) சுற்றவேண்டும்.  தலையில்   அந்தகால   உயரம்  நீளமான   தொப்பி .  

வீதியில் நடந்தேன் !

                     அன்று   நான்   எல்லாம்  போட்டுவிட்டேன். ஆனால் உள்ளாடை போட்டுகொண்டு அரைக்கால்  சட்டை  மட்டும்  போடா  மறந்துவிட்டேன்  .  அவசரமாக  வேகமாக   பஜாரில்   நடந்து  வந்தேன் . பஜாரில்   உள்ள கடைகளில்  இருப்பவர்கள்   அனைவரும் என்னை  பார்த்து   பார்த்து சிரிக்கிறார்கள் .  எனக்கு   ஒன்றுமே  புரியவில்லை .  பத்து    கடைகள்   நடந்து வந்தபின்பு   நண்பர்   சலூன்  கடை   சதாசிவம் " சார்  கடைக்குள்ள   வாங்க " என்றார் . "ஏன்   கால்சட்டை  போடவில்லை   என்று அவர்  சுட்டி  காட்டியபின்புதான்   எனக்கு தெரிந்தது  . அதன்   பிறகுதான்  எனக்கு வெட்கமாக இருந்தது .  உடனே   சட்டையை   கழட்டிவைத்துவிட்டு சலூன் கடையிலுள்ள  துணியை வாங்கி  வசதியாக   கட்டிக்கொண்டு    திரும்ப   எனது   அறைக்கு   ஓடினேன் .   அதன்பின்பு   அரைக்கால் சட்டையை அணிந்துகொண்டு   காவல்நிலையத்துக்கு   போனேன் .

புத்தன்துரை கலவரம் !
    
                             தேங்காபட்டணம் அருகில்  இணையம்  புத்தன்துரை   என்ற ஊரில்  அடிக்கடி   அங்குள்ள  ஆர் . சி   சாமியார்  கோஷ்டிக்கும்   ஊரிலுள்ள    மற்றவர்களுக்கும் சண்டை  வந்துகொண்டே   இருக்கும் . அதனால்   அங்கு  எப்பொழுதும்   இரண்டு   காவலர்கள்   பாதுகாப்பு  பணியில்  இருப்பார்கள் . நானும்  அந்த பாதுகாப்பு பணிக்கு   போவேன் .  அங்கு  போகும்போது   தேங்காபட்டணம் வரை   பஸ்ஸில்   சென்று   அப்பால்  நடந்து ராமன்துறை  என்ற ஊர் வழியாக   போகவேண்டும் . அப்படி  போகும்போது ராமன்துரையில் வழிமேல் உள்ள அவ்வூர்  கணக்கபிள்ளை வீட்டில்   சற்று   இருந்து இளைப்பாறிவிட்டு  செல்வேன் .  அதனால் அந்த வீட்டில் உள்ளவர்கள்  அனைவரும் நன்கு  பழக்கமாகி  விட்டார்கள் . 

ரோஸ் மேரி!

                          கணக்குபிள்ளையின்  மகள்  ரோஸ்மேரி   ஆசிரியை  பயிற்சி  முடித்து தக்கலை அருகில்   செம்பருத்திவிளை என்ற ஊரில்  டீச்சராக   பணிபுரிந்து  வருகிறாள் .   அவர்களுக்கு  நெருங்கிய   சொந்தக்காரர்   திரு ஜோசப்   என்பவர்   தூத்துக்குடியில்   நீதிபதியாக  இருந்தார் .  நான் ஊருக்கு  போகும்போதெல்லாம்   அவரை  பார்த்துவிட்டு   வருவேன் .   சில  நேரம்  அவர் எதாவது   என்னிடம் சொல்லியனுப்புவார்  .  அதை  நான் ராமன்துறை கணக்குபிள்ளை  வீட்டில் வந்து  சொல்லுவேன் .  நான் டுட்டியில் இருக்கும்போது   கடற்கரையில் மீன்  வாங்கி இவர்கள்   வீட்டில் கொடுத்துவிட்டால்   நன்கு பொறித்து   தருவார்கள் . இப்படியாக  அந்த  வீட்டிலுள்ளவர்களுக்கும் எனக்கும்    நல்ல பழக்கம் ஏற்பட்டது .   அவர்கள்   பொறித்து தரும்  மீனை  வாங்கிகொண்டு   ஹோட்டலில்  வைத்து  நானும்  என்னுடன்  பணியிலிருக்கும்   காவலரும்  சேர்ந்து  சாப்பிடுவோம் .   

                        நாளடைவில்   புதுக்கடையில்   தனியாக  ஒரு வீடுபார்த்து ஊரில்போய் அம்மாவையும்   தங்கை   பாப்பாவையும்   கூட்டிவந்தேன் .  தம்பி   ராமலிங்கம்   குறிஞ்சிப்பாடியில்   இருக்கும்போது   உடல்  நலம்   பாதிக்கப்பட்டு   வேலையை  விட்டு ஊருக்கு வந்துவிட்டான்  . அங்கே ரயில்வேயில் கேங்  கூலியாக   வேலைபார்த்து  வந்தான் .  எந்தெந்த ஊரில் வேலை  நடக்கிறதோ   அங்கேயே   தங்கிகொள்வான் .

கலவரம்!

                           ஒருநாள்   புத்தன்துரை ஊரில் கலவரம்  வெடித்தது. இரண்டு   கோஷ்ட்டிக்கு பயங்கர சண்டை .  பாதுகாப்பு  பணியிலிருந்த   காவலர்களுக்கும்   அடிவிழுந்தது .  அன்று நான் பணியிலில்லை . காவலர்  முஸ்தபா  என்பவரும்  ஒரு வயதான   காவலரும் பணியிலிருந்தார்கள்.   அந்த ஊரில் போன்  வசதியும்   கிடையாது . கடற்கரையில் சண்டை நடக்கிறது.   காவலர் முஸ்தபா தொப்பியை கலவரக்காரர்கள்   பிடுங்கி  கடலிலே  வீசிவிட்டார்கள் .  காவலர் முஸ்தபா ரோடு  பக்கம்  வந்து பஸ்  , கார் , லாரி   ஏதாவது வருகிறதா   என்று பார்த்திருக்கிறார்.   

                        சிறிது  நேரத்தில் தேங்காபட்டினம் சாஹிப்  கார் வந்துள்ளது . சாதாரணமாக   முஸ்லிம்   காரில்  கொசபெண்கள் வரும்போது   மற்றவர்களை   காரில் ஏற்றமாட்டார்கள்.  ஆனால் முஸ்தபாவை   அவருக்கு  நன்றாக  தெரியும் . அதனால் காரை நிறுத்தி  உனக்கும்   காயம்  உள்ளதா  என்று கேட்டு  அவரை காரில்  ஏற்றிக்கொண்டு  தேங்காபட்டினம்  வந்துள்ளார் .   அங்கே வந்தபின்புதான் காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்   காவல்நிலையத்தில்  ஒரு காவலரைமட்டும்  வைத்துவிட்டு    நாகர்கோயில்   காவல் கண்காணிப்பாளர்   அலுவலகத்திற்கு   தகவல் கொடுத்துவிட்டு நாங்கள் எல்லோரும்   புத்தந்துரைக்கு  சென்றோம் .  அங்கே சென்ற பின்பு தான் ஒரு கலவரம் எவ்வளவு பாதிப்பை உண்டாக்கும் என்பதை அறிய முடிந்தது.
                                                                                         அங்கே............

Tuesday 4 October 2011

பக்கத்து மாவட்டத்திற்கு பணி மாறுதல் !

 அப்போது


                              "சரியான   நேரத்திற்கு  முன்பே   வந்துவிட்டாய். ராமசாமி!"   என்று ஏட்டய்யா ரொம்ப சந்தோசப்பட்டார்  . அப்போது தான் என் கடிகாரத்தை பார்த்தேன் அது என்னை விடவும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது தெரிந்தது .  ரயில்   சரியான  நேரத்தில்   வந்துவிட்டது .   புறப்பட்டு   மறுநாள்  கடலூர்  வந்தோம் .      

           1962 ஜனவரியில்  எனக்கு  வைசூரி   போட்டுவிட்டது  .  கடலூர் அரசு   மருத்துவமனையில்   சேர்த்தார்கள் .   I.D.H. வார்டில்   சிகிச்சை  பெற்று வந்தேன் . மூன்று   நாட்கள்  கழித்து  வீட்டிற்கு  லெட்டர் எழுதினேன்  .  உடனே   அம்மா   பயந்து   தூத்துக்குடி   சித்தப்பா வீட்டிற்கு வந்து   சொல்லி இருக்கிறார்கள் .  அடுத்த  நாள்   போஸ்ட்  ஆபீஸ்லிருந்து   கடலூர் அரசு  மருத்துவமனைக்கு   போனில்   என்னைப்பற்றி   கேட்டிருக்கிறார்கள் .   மருத்துவமனை  டாக்டர்கள்    ராமசாமி I.D.H. வார்டில் சிகிட்சை பெற்றுவருகிறார் .   விரைவில்   சுகமாகிவிடும்  என்று   சொல்லியிருக்கிறார்கள் .   போஸ்ட்  ஆபீசில்  உள்ளவர்கள் I.D.H. வார்ட்  என்றால் சீரியஸ் வியாதியாக இருக்கும் I.D.H என்றாலே I Died Here  என்று சொன்னவுடனே   ரொம்பவும்  வருத்தப்பட்டு   இதை   வீட்டில்  சொன்னால்   பயந்துவிடுவார்கள்   என்று  சொல்லாமல்   ராமசாமி சுகமாக இருந்ததாக  சொன்னார்கள்   ஆகையால்  பயப்படவேண்டாம்   என்று சொல்லியிருக்கிறார்   ஒரு   வாரத்தில்   என்னை  டிஸ்சார்ஜ்   செய்துவிட்டார்கள்    21 நாட்கள்   கேரன்ட்டி   லீவ்    கொடுத்தார்கள்.    

                     அந்த  சமயம் அண்ணன் லக்ஷுமணனுக்கு திருமணம்  நடப்பதாக  இருந்தது. ஆகையால் ஊருக்கு புறப்பட்டு  சென்றேன் . என்னை பார்த்தவுடன்  அம்மாவுக்கு  ரொம்ப  சந்தோசம் . அண்ணன்  ராமருக்கு  ஆண்  குழந்தை (சேகர்)  பிறந்திருந்தது . அண்ணன் லக்ஷுமணனுக்கு எங்கள்  தாய்  மாமன்   திரு  சன்னாசி  அவர்கள்  மகள்   சமுத்திரக்கனியை   திருமணம் முடித்தார்கள் .  

                            லீவு  முடியும்  நேரம்   நான்  கடலூர் புறப்பட்டு  வந்தேன் .   லீவ்   முடிந்து   டுட்டியில் சேர்ந்தேன் . நாட்கள் நகர்ந்தன . ஹோட்டல் சாப்பாடு பிடிக்கவில்லை . அப்பொழுது  வீட்டிற்கு லெட்டர் எழுதினேன் . "அம்மாவையும்   தங்கை பாப்பாவையும் ரயிலில் அனுப்பிவையுங்கள் நான் ரயில் நிலையத்தில் எதிர்பார்த்து  கூட்டிசெல்கிறேன் " என்று சித்தப்பாவுக்கு எழுதினேன் . உடனே   சித்தப்பா அம்மாவிடம்  சொல்லி மறுநாளே அவர்களை கூட்டிவந்து  செங்கோட்டை மெட்ராஸ் பாசஞ்சர்  ரயிலில் அனுப்பிவைத்தார்கள் . அந்த   ரயில்  கடலூர்  வழியாகத்தான் வரும். அடுத்த  நாள் திருப்பாதிரிபுலியூர்  ரயில்  நிலையத்தில் காலை 8 manikku  வந்து  காத்திருந்தேன்  .   ரயில்   லேட்டாக   பத்து  மணிக்குதான்  வந்தது .  அவர்களை   வீட்டிற்கு  கூப்பிட்டு வந்தேன்  .  

                 போலீஸ்  கோர்டேர்ஸ்  வீடு   சின்னதாக இருந்தாலும்  வசதியாகத்தான்   இருந்தது . ஒரு  ஞாயிற்றுகிழமை   எனது  சார்ஜன்ட் திரு  கண்ணையா நாய்டு அவர்களிடம்   பெர்மிசன் கேட்டு கடலூர் காதி ஆபீசில் திரு  சுப்ரமணிய   ஐய்யர் அவர்கள்  தஞ்சாவூர்  அட்ரசை வாங்கிகொண்டு  தஞ்சாவூர் சென்றேன் .   அந்த  விலாசத்தை   கண்டுபிடித்து    அவர்கள் வீட்டிற்கு   சென்றேன் .   என்னை   போலீஸ் யூனிபார்மில்   பார்த்தவுடன்   அவர்கள் அனைவருக்கும் எல்லையில்லா சந்தோசம் .  அவர்கள்  மகள்   மைதிலி   சற்று   வளர்ந்திருந்தாள் .   என்னை சிறிது  நேரம்  பார்த்துவிட்டு   அடையாளம்  தெரியாமல்   அம்மா  பின்னல் பொய்   ஒளிந்துகொண்டாள் .   மைதிலிக்கு  ஒரு   தம்பி  பிறந்திருந்தான் .  சிறிதுநேரம்  கழித்து   என்னை  அடையாளம் கண்டுகொண்டாள்.  வாங்கிப்போயிருந்த   பண்டங்களை   கொடுத்தேன்.  வாங்கிகொண்டாள் .  அங்கே மதிய   உணவு   சாப்பிட்டேன் .  மாலையில்   கடலூர்   திரும்பினேன் .    அம்மாவிடமும்   தங்கையிடமும்   அவர்களை  பற்றி   சொன்னேன் . 

                         பக்கத்து  வீட்டு   நண்பர்   சில  நாட்களில்   அவர்கள் வீட்டில்  ஏதாவது   பதார்த்தங்கள்   செய்தால்   எங்கள்  வீட்டிற்கும்   கொடுப்பார்கள் .  அவர்கள்   மகன்  நான்கு  வயது  பையனிடம்   கொடுத்தனுப்புவார்கள்   அவன்  வரும்போதே   அவனுடைய  நண்பர்களையும்   கூடவே கூட்டிவருவான்  . பாட்டி  வாங்க   அக்கா  வாங்க மாமா  வாங்க இந்தாங்க எங்கள் அம்மா  கொடுத்தார்கள்   என்று   அவன் நண்பர்களுக்கு எல்லாவற்றையும்  கொடுத்துவிட்டு   எங்களுக்கும்   கொஞ்சம்   தருவான்.   எல்லோரும்  சேர்ந்து  சாப்பிடுவோம் .   சிரிப்பாகவும்   இருக்கும்.   அதேநேரம்   சந்தோசமாகவும்  இருக்கும் .   

                         ஒருநாள்  திடீரென்று   இரவு   ஆஜர்  பட்டியல்  (roll call) பார்க்கும்போது  , கன்னியாகுமரி   மாவட்டத்திற்கு   காவலர்கள்   கேட்கிறார்கள்.  சம்மதம்   உள்ளவர்கள்   எழுதிகொடுங்கள் .   அங்கே  காவலர்கென்று   பள்ளிக்கூடம்  ,  வீடு   கிடையாது   என்று சொன்னார்கள் .   இரண்டு  நாட்களுக்குள்  கொடுக்கவேண்டும்   என்று சொன்னார்கள் .  மறுநாள்   திருநெல்வேலி   மாவட்டத்தை  சேர்ந்த   அனைவரும்  கூடினோம் .  பள்ளிக்கூடம் , வீடு இல்லாமல்  எப்படி  ஒரு ஊர் இருக்கமுடியும்   நாம்  எல்லோரும் எழுதிகொடுப்போம்   என்று முடிவு  செய்தோம் .  ஒருசிலர்   எழுதிகொடுக்கவில்லை   மற்ற 15 நபர்கள்  எழுதிகொடுத்தோம் .  

                         பத்து   நாட்களில்  மாறுதல்  ஆர்டர்  வந்துவிட்டது .   அம்மாவுக்கும்   தங்கைக்கும்   ரொம்ப  சந்தோசம் . ஆர்டர்  கிடைத்த   மறுநாளே  நாங்கள்  புறப்பட்டுவிட்டோம் . மாறுதல் ஆர்டர் கிடைத்து  போகும்போது   ஏழு  நாட்கள்  லீவ்  உண்டு .   எல்லோரும்  அவரவர்களுக்கு   முடிந்த  நாட்களில்   புறப்பட்டார்கள் . எங்களுடன்   எங்கள் பக்கத்துக்கு ஊரான   வீரபண்டியபுரம்   போடிசாமி   நாயக்கர் , பி .எஸ் . சுப்பையா , மனுவேல்  பூபாலராயர்   ஆகியோர்   வந்தார்கள் .  அம்மா  நீங்களும்   தங்கையும்   வந்த   நல்லநேரம்தான்   இந்த   நம்  பக்கத்துக்கு மாவட்டத்திற்கு மாறுதல் கிடைத்திருக்கிறது  என்று அம்மாவிடம் நானும் என் நண்பர்களும்  சொன்னோம் .  

                           வீட்டிற்கு  வந்த மறுநாளே தூத்துக்குடி   சித்தப்பா   வீட்டிற்கு போய் எல்லோரையும்  பார்த்துவிட்டு பெரிய  அக்காள்  வீட்டுக்கு  போனேன் .   அங்கு  அக்காள் மக்கள்  பன்னீர்செல்வம் ,  சித்திரைக்கனி ,  கந்தசாமி   அவர்களுடன்   விளையாடிகொண்டிருந்து   விட்டு ஊருக்கு  புறப்பட்டேன் .  இங்கு   மாற்றி  வந்ததில்   அக்காவுக்கும் மச்சானுக்கும் ரொம்ப சந்தோசம் .  அக்டோபர்   முதல்   வாரத்தில்   கன்னியாகுமரி மாவட்டத்தில்   நாகர்கோயில்    மாவட்ட  காவல்  அலுவலகத்தில்   ஆஜராகவேண்டும் .   அதன்படி   நாங்கள் 15 காவலர்களும் ஆஜரானோம் .   அன்று  மாலை   எல்லோருக்கும்   எந்தெந்த   காவல் நிலையம் என்று நியமித்தார்கள் . எனக்கு கிடைத்த காவல் நிலையம் எது என்று என் பெயரை வாசித்து கூறினார்கள். 
                                                                                       அப்போது ................