Saturday 15 October 2011

கலவர பாதிப்பு! விசாரணை! தீர்ப்பு!

அப்போது......

                        முப்பதைந்துபேர்   பெரிய   சிறிய   காயங்களுடன்    கதறிக் கொண்டிருந்தார்கள். சிறிது  நேரத்தில் பெரிய அதிகாரிகள்  வந்தார்கள்    காயம்பட்ட  அனைவரையும்   மருத்துவமனைக்கு   அனுப்பினோம் . சர்கிள்   இன்ஸ்பெக்டர் திரு பாலகிருஷ்ணன்   நாயர் , தக்கலை D.S.P. திரு பி.ஜெ.கருணாகரன்   மற்றும் ஆயுதப்படை   காவலர்கள்  இரண்டு லாரியில் வந்தார்கள் . ஊரில்   பெண்களை  தவிர   ஆண்கள்  யாரும்   இல்லை .  இதில்   நூற்றி  பதினைந்து  பேர்   மீதும்   காவலர்களை   பணி செய்யவிடாமல்   தடுத்ததாக   இருபத்தொரு  பேர்   மீதும்  வழக்கு  பதிவு  செய்யபட்டது

                  ஆயிரத்து  தொள்ளாயிரத்து  அறுபத்திமூன்று   மார்ச்  மாதம்   லீவில்   ஊருக்கு  போனேன். அம்மாவையும்   தங்கை  பாப்பாவையும் அழைத்துக் கொண்டு  வந்தேன்.  காவல்நிலையம்  பக்கத்திலேயே   ஒரு   வீடு  வாடகைக்கு   எடுத்து   குடியிருந்தோம்.  காவல்  நிலையத்தில் ரைட்டர்   திரு  நடராஜன்   எனக்கு  காவல்  நிலைய  வேலைகளை   நன்றாக   சொல்லிகொடுத்தார்.  நானும், காவலர்கள்  பாவெல் , முஸ்தபா   ஆகியோர்  காவல்நிலைய   வேலைகளை நன்றாக படித்துக்கொண்டு ரைட்டருக்கு   மிகவும்   உதவியாக  இருந்தோம்.  நான்   எனது   பணிநேரம்  முடிந்தாலும்   வீட்டிற்கு   போகாமல்   காவல் நிலைய வேலைகளை செய்து கொண்டிருப்பேன் .  நாளடைவில்   என்னை   கோர்ட்  அலுவல்களை  பார்க்க நியமித்தார்கள் . நான் கோர்ட் நடக்கும்  நாட்களில்  வழக்கு கட்டுகளை  எடுத்துக்கொண்டு   கோர்டுக்கு   போயி   அரசாங்க  வக்கீலுக்கு  உதவியாக இருப்பேன்.  அதன்  காரணமாகவும் ரைட்டர் நடராஜன் கற்றுகொடுத்த வேலைகளையும்    நாளடைவில்   முதல்  தாக்கல்  அறிக்கை, குற்ற பத்திரிக்கை,  இறுதி   அறிக்கை ஆகிய   வேலைகளை சாட்சிகளின்  வாக்குமூலங்களை   எழுதுவதற்கும்   நன்கு    தெரிந்து கொண்டேன் .

                           ஏட்டைய்யா ராமன்  நாயர் ,  விக்கன்  பாஸ்கரன் , விஸ்வம்பரன் நாயர் ,  தாமரைகுளம்   தாண்டவன்   ஆகியோர்களும்  காவல் நிலையம்   சம்மந்தபட்ட  எல்லா  வேலைகளையும்   சொல்லித்தந்தார்கள் .  S.I. திரு சங்கரபாண்டியன்   அவர்கள்   திருநெல்வேலி   மாவட்டம்   சங்கரன்கோயில்   பக்கமுள்ள   குருக்கல்பெட்டி   என்பதால் என்னிடம்   பிரியமாக  இருப்பார் .  கைதிகள்   சம்மந்தப்பட்ட   விசயங்களில்   என்னை ,  பாவேலை  முஸ்தபாவை மட்டும்தான் செய்யசொல்லுவார் .   முருகன்  என்றொரு   காவலர்  இருந்தார் .  மிகவும்   தமாசானவர் .  அவர்   கைதிகளிடம்  தமாசாவும் , கிண்டலடித்தும்   பேசியே  உண்மையை வரவழைத்து விடுவார்  .  இணையம்  புத்தன்துரை   வழக்கு குற்ற  பத்திரிக்கை    தயாரிக்கும்போது ,  அரசு  உதவி  வழக்கறிஞர்    திரு  தக்கலை   சோமசுந்தரம்  பிள்ளை   என்னைத்தான்   எழுத  கூஒப்பிடுவர் .   அவர் சொல்லசொல்ல  நான்  எழுதுவேன் .

தீர்ப்பின் மகிழ்ச்சி!

                         புத்தன்துரை கலவர வழக்கில்  நூற்றி இருபத்தாறு  நபர்கள்  மீது  குற்றபத்திரிக்கை தாக்கல்  செய்யப்பட்டது . நூற்றிருபது   சாட்சிகள் . சிறிது  நாட்களில்  வழக்கு விசாரணைக்கு  வந்தது .  ஒவ்வொரு  நாளும்  சாட்சிகள்  சொல்லவேண்டியதை  அவர்களுக்கு  சொல்லிக்கொடுக்கவேண்டும் . (ஞாபகப்படுத்தவேண்டும் ) . அவர்கள்   சாட்சி  கூண்டில்  ஏறி   சாட்சி  சொல்லும்போது   சரியாக சொல்லுகிறார்களா  என்று  கோர்ட்க்கு  வெளியே   ஜன்னல்  பக்கம்  நின்று  கவனிக்கவேண்டும் .  அந்த சாட்சி எதாவது சொல்ல  விட்டிருந்தால்   அடுத்த  சாட்சி கூண்டில் ஏறி  சாட்சி சொல்லும்போது விட்டுப்போனதையும்  சேர்த்து  சொல்லும்படி   சொல்லவேண்டும் . 

                       சர்கிள் இன்ஸ்பெக்டர் திரு பாலகிருஷ்ணன் நாயர்  அவர்கள்  அடிக்கடி  கோர்ட்டுக்கு  வருவார் . குறிப்பிட்ட  எந்த  வழக்கு எப்படி  நடக்கிறது  என்று பார்ப்பார் . அரசு முதல்  நிலை  வழக்கறிஞர் திரு ராமேஸ்வரலிங்கம்  அவர்கள் நாகர்கோயிலில் இருந்து   வருவார் .  எதிர் தரப்பு   வக்கீல்கள்   திருவளர்கள்   சீனியர்   லாயர்  பக்குரிட்டீன்  அதம் ,  ஜூனியர்கள்   திரு M.C பாலன் , திரு தியாகராஜன் , திரு கமலுதீன் .   இவர்கள்  மிகவும்   தேர்ச்சிபெற்ற  வக்கீல்கள் .  அனைவரும்  நாகர்கோயிலில் இருந்து வருவார்கள் .   

                                வழக்கு   சுமார்   எட்டு  மாதங்கள்   நடந்தது .  61 எதிரிகளுக்கு   தண்டனை   கிடைத்தது   காவலர்களை   தாக்கிய   வழக்கில் 11 எதிரிகளுக்கும்   தண்டனை கிடைத்தது .  மற்றவர்கள் விடுதலை  செய்யப்பட்டார்கள் .வழக்கு தண்டனையானவுடனே சர்கிள் இன்ஸ்பெக்டர் திரு பாலக்ருஷ்ணன்  நாயர்  அவர்கள் என்னை  கைகுலுக்கி   அவர்   பாக்கெட்டிலிருந்து   25  ரூபாய்   தந்தார்கள் . மேலும்  இவ்வழக்கு    விசாரணை   அதிகாரி   சப்  இன்ஸ்பெக்டர் திரு M.சங்கரபாண்டியன்   மற்றும்  எதிரிகளை   கைது  செய்ய   உதவியாக  இருந்தவர்களுக்கும்    போலீஸ்   இலாகா   மூலமாகவும்   பரிசு  (Reward) களும்   கிடைத்தது .   அந்த ஊரில்  (அந்த   மாவட்டத்தில் )  கிராமத்து   பொதுமக்கள்   காவலர்களை இன்சார்ஜ்   என்றும் , தலைமை  காவலர்களை அங்கதை என்றும் S.I. மற்றும் அதற்க்கு  மேலான  அதிகாரிகளைஅத்தேஹம்  என்றும் அழைப்பார்கள் .  இது   மலையாள   மொழியில்   மரியாதைக்குரிய   வார்த்தைகள் .   
            புதுக்கடையில்   போஸ்டாபீசில் வேலை   பார்க்கும்   தூத்துக்குடி   ராஜபாண்டியன் ,  புதுக்கடை   பக்கமுள்ள   முன்சிறை   உயர்நிலைப்பள்ளியில்   வேலைபார்க்கும்   தமிழ்   பண்டிட்   திரு அன்பையா    சார் ,  ஆசிரியர்   திரு  லீநோஸ்  ,  மற்றும் சலூன்   கடை   சதாசிவம் ஆகியோர்  எனக்கு  மிகவும்   நண்பர்கள் ஆனார்கள் .                                                                            
                           1964 மார்ச்  மாதம்  தமிழக   போலீஸ் அமைச்சர்   திரு P.கக்கன்ஜி   அவர்கள் குழிதுறைக்கு வந்தார்கள் .  அப்பொழுது   அமைச்சர்   தங்குமிடத்தில்   ( T.B)   நான் பாதுகாப்பு   பணியில்   இருந்தேன் .  எங்கள்   S.I. திரு சங்கரபாண்டியன் அவர்கள் அமைச்சர் தங்குமிடம் வருவதற்குமுன்    அங்கு   வந்து    அமைச்சரின்   தனி   உதவியாளரிடம்   பேசிக்கொண்டிருந்தார் .  அவர்கள்   முன்பே   நல்ல  நண்பர்களாம் .   அதனால் இவர்   புதுக்கடை   போலீஸ்  ஸ்டேஷனில்   வேலை பார்க்கிறேன் என்று  சொன்னவுடன்    அவர் "அப்போ   ராமசாமி  என்ற  காவலர்  அங்கு வேலை  பார்க்கிறாரா ?" என்று   கேட்டிருக்கிறார் .  உடனே  இவர் "ஆமாம்   ஏன்   அவர் தான்   இங்கு   பாதுகாப்பு   பணியில்   இருக்கிறார் ."  என்று சொல்லிருக்கிறார் .   "வேறொன்றுமில்லை    அவரது   சித்தப்பா   ராமசாமி   என்பவர்   தூத்துக்குடியில்    அமைச்சரை   சந்தித்து   இவருக்கு   புதுகடையிலிருந்து   திருநெல்வேலி   மாவட்டத்துக்கு   மாறுதல்   வேண்டுமென்று   மனு  கொடுத்துள்ளார் .  அமைச்சரும்   சென்னை  போனவுடன்   செய்கிறேன்   என்று சொல்லி   அந்த  மனுவை  என்னிடம்   தந்தார்கள் .  என்று  அவர் சொன்னவுடன் என்னை   உள்ளே   கூப்பிட்டு   விஷயத்தை   சொன்னார்கள் .  எனக்கு  ரொம்பவும்   சந்தோசம். வீட்டிற்கு வந்து அம்மாவிடம் விஷயத்தை சொன்னேன்.
                                                                                      அப்போது,,,,,,,,,

No comments:

Post a Comment