Tuesday 4 October 2011

பக்கத்து மாவட்டத்திற்கு பணி மாறுதல் !

 அப்போது


                              "சரியான   நேரத்திற்கு  முன்பே   வந்துவிட்டாய். ராமசாமி!"   என்று ஏட்டய்யா ரொம்ப சந்தோசப்பட்டார்  . அப்போது தான் என் கடிகாரத்தை பார்த்தேன் அது என்னை விடவும் வேகமாக ஓடிக்கொண்டிருந்தது தெரிந்தது .  ரயில்   சரியான  நேரத்தில்   வந்துவிட்டது .   புறப்பட்டு   மறுநாள்  கடலூர்  வந்தோம் .      

           1962 ஜனவரியில்  எனக்கு  வைசூரி   போட்டுவிட்டது  .  கடலூர் அரசு   மருத்துவமனையில்   சேர்த்தார்கள் .   I.D.H. வார்டில்   சிகிச்சை  பெற்று வந்தேன் . மூன்று   நாட்கள்  கழித்து  வீட்டிற்கு  லெட்டர் எழுதினேன்  .  உடனே   அம்மா   பயந்து   தூத்துக்குடி   சித்தப்பா வீட்டிற்கு வந்து   சொல்லி இருக்கிறார்கள் .  அடுத்த  நாள்   போஸ்ட்  ஆபீஸ்லிருந்து   கடலூர் அரசு  மருத்துவமனைக்கு   போனில்   என்னைப்பற்றி   கேட்டிருக்கிறார்கள் .   மருத்துவமனை  டாக்டர்கள்    ராமசாமி I.D.H. வார்டில் சிகிட்சை பெற்றுவருகிறார் .   விரைவில்   சுகமாகிவிடும்  என்று   சொல்லியிருக்கிறார்கள் .   போஸ்ட்  ஆபீசில்  உள்ளவர்கள் I.D.H. வார்ட்  என்றால் சீரியஸ் வியாதியாக இருக்கும் I.D.H என்றாலே I Died Here  என்று சொன்னவுடனே   ரொம்பவும்  வருத்தப்பட்டு   இதை   வீட்டில்  சொன்னால்   பயந்துவிடுவார்கள்   என்று  சொல்லாமல்   ராமசாமி சுகமாக இருந்ததாக  சொன்னார்கள்   ஆகையால்  பயப்படவேண்டாம்   என்று சொல்லியிருக்கிறார்   ஒரு   வாரத்தில்   என்னை  டிஸ்சார்ஜ்   செய்துவிட்டார்கள்    21 நாட்கள்   கேரன்ட்டி   லீவ்    கொடுத்தார்கள்.    

                     அந்த  சமயம் அண்ணன் லக்ஷுமணனுக்கு திருமணம்  நடப்பதாக  இருந்தது. ஆகையால் ஊருக்கு புறப்பட்டு  சென்றேன் . என்னை பார்த்தவுடன்  அம்மாவுக்கு  ரொம்ப  சந்தோசம் . அண்ணன்  ராமருக்கு  ஆண்  குழந்தை (சேகர்)  பிறந்திருந்தது . அண்ணன் லக்ஷுமணனுக்கு எங்கள்  தாய்  மாமன்   திரு  சன்னாசி  அவர்கள்  மகள்   சமுத்திரக்கனியை   திருமணம் முடித்தார்கள் .  

                            லீவு  முடியும்  நேரம்   நான்  கடலூர் புறப்பட்டு  வந்தேன் .   லீவ்   முடிந்து   டுட்டியில் சேர்ந்தேன் . நாட்கள் நகர்ந்தன . ஹோட்டல் சாப்பாடு பிடிக்கவில்லை . அப்பொழுது  வீட்டிற்கு லெட்டர் எழுதினேன் . "அம்மாவையும்   தங்கை பாப்பாவையும் ரயிலில் அனுப்பிவையுங்கள் நான் ரயில் நிலையத்தில் எதிர்பார்த்து  கூட்டிசெல்கிறேன் " என்று சித்தப்பாவுக்கு எழுதினேன் . உடனே   சித்தப்பா அம்மாவிடம்  சொல்லி மறுநாளே அவர்களை கூட்டிவந்து  செங்கோட்டை மெட்ராஸ் பாசஞ்சர்  ரயிலில் அனுப்பிவைத்தார்கள் . அந்த   ரயில்  கடலூர்  வழியாகத்தான் வரும். அடுத்த  நாள் திருப்பாதிரிபுலியூர்  ரயில்  நிலையத்தில் காலை 8 manikku  வந்து  காத்திருந்தேன்  .   ரயில்   லேட்டாக   பத்து  மணிக்குதான்  வந்தது .  அவர்களை   வீட்டிற்கு  கூப்பிட்டு வந்தேன்  .  

                 போலீஸ்  கோர்டேர்ஸ்  வீடு   சின்னதாக இருந்தாலும்  வசதியாகத்தான்   இருந்தது . ஒரு  ஞாயிற்றுகிழமை   எனது  சார்ஜன்ட் திரு  கண்ணையா நாய்டு அவர்களிடம்   பெர்மிசன் கேட்டு கடலூர் காதி ஆபீசில் திரு  சுப்ரமணிய   ஐய்யர் அவர்கள்  தஞ்சாவூர்  அட்ரசை வாங்கிகொண்டு  தஞ்சாவூர் சென்றேன் .   அந்த  விலாசத்தை   கண்டுபிடித்து    அவர்கள் வீட்டிற்கு   சென்றேன் .   என்னை   போலீஸ் யூனிபார்மில்   பார்த்தவுடன்   அவர்கள் அனைவருக்கும் எல்லையில்லா சந்தோசம் .  அவர்கள்  மகள்   மைதிலி   சற்று   வளர்ந்திருந்தாள் .   என்னை சிறிது  நேரம்  பார்த்துவிட்டு   அடையாளம்  தெரியாமல்   அம்மா  பின்னல் பொய்   ஒளிந்துகொண்டாள் .   மைதிலிக்கு  ஒரு   தம்பி  பிறந்திருந்தான் .  சிறிதுநேரம்  கழித்து   என்னை  அடையாளம் கண்டுகொண்டாள்.  வாங்கிப்போயிருந்த   பண்டங்களை   கொடுத்தேன்.  வாங்கிகொண்டாள் .  அங்கே மதிய   உணவு   சாப்பிட்டேன் .  மாலையில்   கடலூர்   திரும்பினேன் .    அம்மாவிடமும்   தங்கையிடமும்   அவர்களை  பற்றி   சொன்னேன் . 

                         பக்கத்து  வீட்டு   நண்பர்   சில  நாட்களில்   அவர்கள் வீட்டில்  ஏதாவது   பதார்த்தங்கள்   செய்தால்   எங்கள்  வீட்டிற்கும்   கொடுப்பார்கள் .  அவர்கள்   மகன்  நான்கு  வயது  பையனிடம்   கொடுத்தனுப்புவார்கள்   அவன்  வரும்போதே   அவனுடைய  நண்பர்களையும்   கூடவே கூட்டிவருவான்  . பாட்டி  வாங்க   அக்கா  வாங்க மாமா  வாங்க இந்தாங்க எங்கள் அம்மா  கொடுத்தார்கள்   என்று   அவன் நண்பர்களுக்கு எல்லாவற்றையும்  கொடுத்துவிட்டு   எங்களுக்கும்   கொஞ்சம்   தருவான்.   எல்லோரும்  சேர்ந்து  சாப்பிடுவோம் .   சிரிப்பாகவும்   இருக்கும்.   அதேநேரம்   சந்தோசமாகவும்  இருக்கும் .   

                         ஒருநாள்  திடீரென்று   இரவு   ஆஜர்  பட்டியல்  (roll call) பார்க்கும்போது  , கன்னியாகுமரி   மாவட்டத்திற்கு   காவலர்கள்   கேட்கிறார்கள்.  சம்மதம்   உள்ளவர்கள்   எழுதிகொடுங்கள் .   அங்கே  காவலர்கென்று   பள்ளிக்கூடம்  ,  வீடு   கிடையாது   என்று சொன்னார்கள் .   இரண்டு  நாட்களுக்குள்  கொடுக்கவேண்டும்   என்று சொன்னார்கள் .  மறுநாள்   திருநெல்வேலி   மாவட்டத்தை  சேர்ந்த   அனைவரும்  கூடினோம் .  பள்ளிக்கூடம் , வீடு இல்லாமல்  எப்படி  ஒரு ஊர் இருக்கமுடியும்   நாம்  எல்லோரும் எழுதிகொடுப்போம்   என்று முடிவு  செய்தோம் .  ஒருசிலர்   எழுதிகொடுக்கவில்லை   மற்ற 15 நபர்கள்  எழுதிகொடுத்தோம் .  

                         பத்து   நாட்களில்  மாறுதல்  ஆர்டர்  வந்துவிட்டது .   அம்மாவுக்கும்   தங்கைக்கும்   ரொம்ப  சந்தோசம் . ஆர்டர்  கிடைத்த   மறுநாளே  நாங்கள்  புறப்பட்டுவிட்டோம் . மாறுதல் ஆர்டர் கிடைத்து  போகும்போது   ஏழு  நாட்கள்  லீவ்  உண்டு .   எல்லோரும்  அவரவர்களுக்கு   முடிந்த  நாட்களில்   புறப்பட்டார்கள் . எங்களுடன்   எங்கள் பக்கத்துக்கு ஊரான   வீரபண்டியபுரம்   போடிசாமி   நாயக்கர் , பி .எஸ் . சுப்பையா , மனுவேல்  பூபாலராயர்   ஆகியோர்   வந்தார்கள் .  அம்மா  நீங்களும்   தங்கையும்   வந்த   நல்லநேரம்தான்   இந்த   நம்  பக்கத்துக்கு மாவட்டத்திற்கு மாறுதல் கிடைத்திருக்கிறது  என்று அம்மாவிடம் நானும் என் நண்பர்களும்  சொன்னோம் .  

                           வீட்டிற்கு  வந்த மறுநாளே தூத்துக்குடி   சித்தப்பா   வீட்டிற்கு போய் எல்லோரையும்  பார்த்துவிட்டு பெரிய  அக்காள்  வீட்டுக்கு  போனேன் .   அங்கு  அக்காள் மக்கள்  பன்னீர்செல்வம் ,  சித்திரைக்கனி ,  கந்தசாமி   அவர்களுடன்   விளையாடிகொண்டிருந்து   விட்டு ஊருக்கு  புறப்பட்டேன் .  இங்கு   மாற்றி  வந்ததில்   அக்காவுக்கும் மச்சானுக்கும் ரொம்ப சந்தோசம் .  அக்டோபர்   முதல்   வாரத்தில்   கன்னியாகுமரி மாவட்டத்தில்   நாகர்கோயில்    மாவட்ட  காவல்  அலுவலகத்தில்   ஆஜராகவேண்டும் .   அதன்படி   நாங்கள் 15 காவலர்களும் ஆஜரானோம் .   அன்று  மாலை   எல்லோருக்கும்   எந்தெந்த   காவல் நிலையம் என்று நியமித்தார்கள் . எனக்கு கிடைத்த காவல் நிலையம் எது என்று என் பெயரை வாசித்து கூறினார்கள். 
                                                                                       அப்போது ................  

No comments:

Post a Comment