Monday 17 October 2011

திருநெல்வேலிக்கு மாறுதல்!

அப்போது.......                            

                            அம்மாவிடம் விஷயத்தை சொன்னவுடன் அம்மாவுக்கு  ரொம்பவும் சந்தோசம். அம்மாவிடம் ஏற்கெனவே ராமன்துறை   கணக்கப்பிள்ளை   வீட்டைப்பற்றி   சொல்லியிருக்கிறேன்  .  அம்மா   எங்களை  அந்த  வீட்டுக்கு   கூட்டிபோயேன்  என்று சொன்னார்கள் . ஒரு ஞாயித்துகிழமை   அம்மாவையும்    தங்கை  பாப்பாவையும்   அங்கே  அழைத்து  சென்றேன் .  அம்மாவுக்கு அவர்களையும்   அவர்கள்  மகள்   ரோஸ்மேரியையும் ரொம்ப   பிடித்துவிட்டது   என்று  நினைத்தேன் .   வீட்டிற்கு   வந்தவுடன்   அம்மா   என்னிடம் "இங்கல்லாம்  உனக்கு   பெண்பார்க்க கூடாதப்பா! ஏழையோ   பாழையோ   நம்ம   ஊர்பக்கம்தன்  பார்க்கவேண்டும்"  என்று சொன்னார்கள் . "அதற்கு   இப்போ   என்னம்மா  அவசரம்" என்று சொல்லிவிட்டேன் .

                          இரண்டு நாட்கள் கழித்து ராமன்துறை சென்றேன் .  ரோஸ்மேரியை சந்தித்து "அம்மா என்ன  சொன்னார்கள். நீங்கள்   எதாவது   அம்மாவிடம்  சொன்னீர்களா ?"   என்று கேட்டேன் . " நாங்கள்   ஒன்றும்   சொல்லவில்லை. உங்கள்  தங்கைதான்   எங்கள்   அண்ணன்   உங்களை  விரும்புகிறானா ?   என்று கேட்டாள் .   "நானும்   ஆமாம்   என்று சொன்னேன் . மேலும்    எங்கள் வீட்டில்    எல்லோரிடமும்    சம்மதம்   வாங்கி   விடுறேன் "  என்று   சொன்னாள் .   "இல்லம்மா முதலில்   என்   தங்கைக்கு  திருமணம்    நடக்கவேண்டும்   அப்புறம் என் சித்தப்பாவுக்கும் என் அம்மாவுக்கும்   உன்னை   பிடிக்கவேண்டும்"  என்று சொன்னேன் . "அப்போ   உங்கள்  சித்தப்பாவை   வரசொல்லுங்கள்   அல்லது   அவருடைய   விலாசம்  கொடுங்கள்   நான்   லெட்டர்   எழுதுகிறேன்   என்று   சொன்னாள்.  சித்தப்பாவின்   விலாசத்தை   அவளிடம்   கொடுத்துவிட்டு   விரைவில்   எனக்கு   திருநெல்வேலி    மாவட்டத்துக்கு   மாறுதல் வந்துவிடும்   என்று சொல்லிவிட்டு  வந்தேன் .         

கள் இறக்கியவன் சம்பவம் !

                      ஒருநாள்   குழித்துறை   நீதிமன்றந்தில்   ஒரு   ருசிகரமான   சம்பவம்   நடந்தது .   திருவட்டார்   காவல்நிலையத்திலிருந்து     ஒரு நபர்   பனைமரத்திலிருந்து  கள்   இறக்கியதாக   அந்த   நபரை   நீதிமன்றம் கொண்டுவந்தார்கள்  .  அந்த     நபரிடம்  நீதிபதி "நீ பனைமரத்தில்    கலயம் கட்டி கள் இறக்கிக்யதாக   உன்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது . அதற்கு நீ என்ன  சொல்லுகிறாய் ? " என்று கேட்டார் .   அதற்கு   அவன்   ஆமாம்  அய்யா   உண்மைதான்  என்று சொன்னான் .  " இதற்கு முன்பு இப்படி ஏதாவது தப்பு   செய்திருகிறாயா" என்று கேட்டார் .  அவன்   சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, "அய்யா ஒரே  ஒரு  தடவை   மட்டும்   கள் இறக்கும்போது   அதோ   உட்கார்ந்திருகிறாரே   அந்த   ஏட்டு அங்கேயே பிடித்து   நூறு   ரூபாய்    அபராதம்   போட்டார்.   அங்கேயே   பணத்தை  கட்டிவிட்டேன். அது   தவிர   வேறு  எதுவும்   செய்ததில்லை  என்று அப்பாவியாய்   சொன்னான் .   உடனே   நீதிமன்றத்தில்    இருந்தவர்கள்   அனைவரும்   நீதிபதி   உள்பட   அனைவரும்   குபீரென்று   சிரித்தார்கள் . அந்த   குறிப்பிட்ட   ஏட்டய்யா   இவன்   பொய்   சொல்லுகிறான்   என்று முனங்கிக்கொண்டே   நழுவி   நீதிமன்றத்தை  விட்டு  வெளியே   சென்று  விட்டார் . அப்பாவியான   அந்த நபருக்கு நீதிபதி அவர்கள்   நூறு ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள் .  

                         நாகர்கோயில்   மாவட்ட   காவல்   அலுவலகத்தில்   காவலர்   தேர்வு    நடந்தது .   தம்பி   ராமலிங்கத்தை   வரவழைத்து   தீர்வுக்கு   அழைத்து  சென்றேன் .   அப்பொழுது   காவல்கண்காணிப்பாளர்    திரு   R.ராஜகோபால்  அவர்கள். ஆனால்   தேர்வில்   உயரத்தில்   ஒன்டரை   அங்குலம்   குறைந்து விட்டது .  அப்பொழுது    கடலூரில்   ஒருவன்   உயரம்   குறைந்ததற்கு   அவன் சுவரிலே   தலையை   முட்டி   வீங்க   செய்து    அரை   அங்குலத்தை   சரி  செய்தது    நினைவு    வந்தது. ஆனால்    இது    ஒன்றரை   அங்குலம் குறைவு   மேலும்   அந்த விபரீத   செயலை   நான்  விரும்பவில்லை . புதுக்கடை   வந்து   இரண்டு  நாட்கள்   கழித்து   தம்பி   ராமலிங்கத்துடன்   அம்மாவையும்   தங்கையையும் ஊருக்கு    அனுப்பிவைத்தேன் .


தங்கையின் திருமணம்!

                      அவர்கள் ஊருக்கு வந்த   ஒரு   மாதத்தில்   தங்கைக்கு   திருமண   ஏற்பாடுகள்   நடந்தது .  அம்மாவின்   பாலிய  சினேகிதி    திருமதி   மொட்டியாம்மா    திரு  சுடலை   அவர்கள்  இளைய  மகன்   திரு ஜெயராமன். திருமணமானது    சித்தப்பா, அத்தான் திரு முனியசாமி , ஆகியோர்   ஏற்பாட்டின்படி    மாப்பிள்ளையின்   சகோதரர்கள்   திரு   சந்தனசாமி , திரு சித்திரவேல், திரு சிதம்பரம் மற்றும் அவர்கள்   சகோதரிகள்    ஆகியோருடன்    பேசினார்கள்.  அவர்கள்   எல்லோருக்கும்    தங்கை   பாப்பாவை   பிடித்துவிட்டது .  மாப்பிள்ளை  விருதுநகரில்   ஒரு பேப்பர் மில்லில்   வேலைபார்த்தார்  .   திருமணம்   நல்லபடியாக  முடிந்து   அவர்கள்   விருதுநகரில்   குடியேறினார்கள் .  நானும்  ,  அம்மா  , அண்ணன் லக்ஷ்மணன்  ,  தம்பி   ராமலிங்கம்  ஆகியோர்   சீர்வரிசையுடன்   சென்று   தனிக்குடித்தனம்  வைத்தோம் .  அங்கு   25 போஸ்ட் கார்ட்கள்   25  வாங்கி   எல்லாவற்றிலும்   எனது   விலாசத்தை   எழுதி   தினசரி   ஒரு லெட்டர்   எழுதிப்போடு   என்று  சொல்லிவிட்டு   பிரியா   விடைபெற்று ஊருக்கு  வந்தோம் .  


திருநெல்வேலிக்கு மாறுதல்!

                 லீவு  முடிந்து   புதுக்கடை   வந்து  பணியில்  சேர்ந்தேன். ஒரு  வாரத்தில்   அதாவது   ஜூன்   மாதம்   1964 எனக்கு   திருநெல்வேலி   மாவட்டத்திற்கு   மாறுதல்   உத்தரவு   வந்தது .  உடனே    ராமன்துறை   வந்து   கணக்கபிள்ளை  வீட்டில்   எல்லோரிடமும்  சொலிவிட்டு  வந்தேன் .   காவல்நிலையத்தில்   எனக்கு   பிரிவுபசார   விழ   நடந்தது .  காவலர்   நண்பர்களிடமும், தமிழ்   பண்டிட்   திரு   அன்பையா  சார்   வீட்டில், ஆசிரியர்  திரு லீநோஸ்  , சலூன்கடை    சதாசிவம்    மற்றும்   போஸ்ட்   ஆபீஸ்   திரு   ராஜபாண்டியன்    அனைவரிடமும்    சொல்லிவிட்டு    திருநெல்வேலிக்கு    புறப்பட்டேன் .   அன்று   கில்லிகோடு போலீஸ்  ஸ்டேசனில்   ஏதோ   ஒரு   வழக்கில்   சம்மந்தப்பட்ட   ஆசிரியர்களை   கைவிலங்கு   போட்டு   கோர்ட்டுக்கு   கொண்டுபோனது   சம்மந்தமாக   பெரிய   பிரச்சனையாகி   மாவட்டம்   முழுவதும்   ஆர்ப்பாட்டங்கள்   நடந்தது .

                                                                              அப்போது.......

1 comment:

  1. எல்லாம் அவன் செயல் படத்தில் வண்டு முருகன் வடிவேலை கோர்ட்டில் மாட்டிவிட்டகதை கள் இறக்கியவன் குழித்துறை கோர்ட்டில் சொன்ன statement லிருந்து சுட்டிருப்பார்கள் போல.

    ReplyDelete