Tuesday 25 October 2011

பாராட்டும் வழக்கு பதிவுகளும் !

அப்போது

                            "நானும் சித்தப்பாவோடுதான் இருப்பேன்" என்று எங்கள் பெரிய அண்ணன் மகன் ஐந்து வயது நிரம்பிய சேகர் அழுது கொண்டிருந்தான். "அவனும் எங்களோடு இருக்கட்டும்" என்று நான் கூறியவுடன்  எங்களுடன் இருந்தான். விஜயநாராயனத்தில் எழுத்தர் வேலையும் வாழ்க்கையும் சந்தோசமாக போய்க்கொண்டிருந்தது.


பாராட்டு!

                 ஒருநாள் நான் காவல் நிலையத்தில் இருக்கும்போது ஸ்ரீவைகுண்டம் துணை கண்காணிப்பாளர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் காவல் நிலையத்தை திடீர் பார்வையிட வந்தார்கள். அவர் மிகவும் கறாரான அதிகாரி. அவரை பார்த்தாலே மற்ற அதிகாரிகள் பயந்து ஓடுவார்கள். அந்த நேரம் பார்த்து உதவி ஆய்வாளரும் இல்லை அவர் கோர்ட்டுக்கு சென்றிருந்தார். தலைமை காவலரும் லீவில் சென்றிருந்தார். எந்த அதிகாரியும் காவல் நிலையம் பார்வையிட வந்தால்  முதலில் பணப்பதிவேடைத்தான் கேட்பார்கள். அவர் வந்தவுடன் பணப்பதிவேடையும் கையிருப்பு பணத்தையும் கொண்டு அவர் முன்பு வைத்தேன். பணப்பதிவேடு நான்கு  நாட்களாக எழுதவில்லை. அதிகாரி என்னை மிகவும் கடிந்துகொண்டார். ஏன் எழுதவில்லை என்று கேட்டார்.  நான் எழுத்தர் பணப்பதிவேடு எழுதகூடாது "என்பதற்காக நான் எழுதவில்லை" என்று சொன்னேன். அதற்கு அவர் "அப்போ உனக்கு பணப்பதிவேடு எழுத தெரியாது, அதனாலதான் நீ எழுதவில்லை " என்று சொன்னார். "அய்யா எனக்கு பணப்பதிவேடு நன்றாக எழுத தெரியும்" என்று அதுவரை எழுத வேண்டியதை நான் தனி தாளில்  எழுதி வைத்திருந்ததை கொண்டுவந்து காட்டினேன் . உடனே அதை படித்து பார்த்துவிட்டு "சபாஷ்! இதேபோலே எழுதிகொண்டுவா" என்றார். அதைபோலே எழுதிக்கொண்டு கொடுத்தேன். பணப்பதிவேட்டின்படி கையிருப்பு பணமும் சரியாக இருந்தது. அதிகாரி மிகவும் சந்தோசப்பட்டு அதிகாரிகள் பார்வை பதிவேட்டில் நல்லவிதமாக எழுதிவிட்டு சென்றார்.

வறுமை வழக்கு  

                      ஒரு நாள் நான் காவல்நிலையத்தில் இருக்கும்போது முப்பத்தைந்து வயதுள்ள ஒரு பெண் தலையில் முக்காடு போட்டுகொண்டு அழுதுகொண்டு வந்தாள். அவள் தலைக்குமேல் ஏதோ நீட்டி கொண்டிருந்தது. முக்காட்டை நீக்கியபின்பு பார்த்தால் தலையில் ஒரு கத்தி நீட்டி கொண்டிருந்தது. அவளை உட்காரவைத்து காப்பி வாங்கி கொடுத்து விசாரித்தேன்.

                      அது ஒரு நெல் கதிர் அறுக்கும் பன்னரிவாள் என்று தெரிந்தது. அந்த பெண்ணை விசாரித்தேன். அந்த காலம் வறுமையின் கொடுமை. அதன் விளைவு தன் பதினைந்து வயது மகன் சப்பிடும்போது இன்னும் கொஞ்சம் சோறு வேண்டும் என்று கேட்டிருக்கிறான். வேறு வழி இல்லாமல் சோறு இல்லாமல் சோறுவடித்த கஞ்சி தண்ணியை கொடுத்திருக்கிறாள். பசி மகன் கண்ணை மறைக்க கத்தியை எடுத்து தாயின் தலையில் வெட்டியிருக்கிறான் .

                       அவனை ஒரு காவலர் மூலமாக அழைத்துவரசெய்து விசாரித்தேன். அன்று உதவி ஆய்வாளரும் தலைமை காவலரும் வேறு அலுவலாக வெளியே போயிருந்தார்கள். அதனால் அந்த பெண்ணை ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி அந்த கத்தியை எடுக்கும்படி சொன்னேன் . அந்த டாக்டருக்கு எனது பணம் ரூபாய் பத்து கொடுத்து அந்த சிறுவனிடம் "என்னப்பா! நம்மை பத்து மாதம் கருவறையில பாதுகாத்து சுமந்து பெற்ற தாயை அவள் கல்லறைக்கு போகும்வரை காப்பாற்ற வேண்டிய மகனே இப்படி செய்யலாமா?" எச்சரித்து வழக்கு ஏதும் பதியாமல் அனுப்பினேன். மேலும் அந்த பெண்ணுக்கு ஒரு காவலர் சாப்பாடு வாங்கி கொடுத்தார்.


ஒரு பெண்ணின் பண வழக்கு 

                        விஜயனாராயனத்தில்  பெரும்தனக்கரர் திரு ராஜகோபால் பாண்டியன் அவர்கள் அவர் தம்பி திரு இலங்காமணி தேவர் மற்றும் தெற்கு விஜயனரயனத்தில் திரு வாலிபால் மாடசாமி, அவர் தம்பி திரு சங்கரபாண்டியன், மற்றொரு தம்பி திரு ராமசந்திரன் இவர் கிராம அதிகாரியாக இருந்தார். இவர்கள்தான் இந்த ஊரில் முக்கியமான நபர்கள்.  ஒரு நாள் தலையாரி ஒருவர் ஒரு வழக்கு கொண்டுவந்தார்.

                    சாதரணமாக இங்கெல்லாம் கிராம அதிகாரிகள் மூலமாகதான் வழக்குகள் வரும். அன்று அதுபோல அந்த தலையாரி கொண்டுவந்த ரிப்போர்ட்டில் காரியாண்டி என்ற ஊரில் பஞ்சாயத்து கடைநிலை ஊழியர் ஒரு பெண் தனது "வீட்டில் சம்பளப்பணம் வாங்கி  தலையணை கீழ வைத்து படுத்திருந்தேன் இரவு ஒரு மணிக்கு யாரோ ஒருவர் கதவை தட்டினார். நான் கதவை திறந்தேன் எனது தலையில் கம்பால் ஒரு அடி விழுந்தது நான் மயங்கி கீழ விழுந்துவிட்டேன். காலையில் எழுந்து பார்த்தேன் எனது பணம் வைத்திருந்த பணப்பை வீட்டு முன்பு கிடந்தது. அதிலிருந்த இருநூறு  ரூபாயை காணவில்லை" என்று எழுதியிருந்தது.

                     நான் அந்த ரிப்போர்டை வாங்கி வழக்கு பதிவு செய்தேன். அன்று புதிய தலைமை காவலராக திரு ராஜா என்பவர் வந்திருந்தார். அன்று அவர் நீதிமன்ற அலுவலாக நான்குநேரிக்கு சென்று விட்டார். உதவி ஆய்வாளரும் வேறு ஒரு வழக்கு விசாரணைக்கு சென்றிருந்தார். இந்த வழக்கில் திருடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்ததற்கு ஒரு பிரிவும், அந்த பெண்ணை கம்பால் அடித்தற்கு ஒரு பிரிவும் மற்றும் பணத்தை திருடியதற்கு ஒரு பிரிவும சேர்த்து வழக்கு பதிவு செய்து ஒரு காவலர் மூலமாக முதல் தகவல் அறிக்கையை தலைமை காவலர் திரு ராஜா அவர்கள் விசாரணைக்காக அனுப்பினேன். வழக்கமாக சர்க்கிள் ஆபிசுக்கு போகவேண்டிய முதல் தகவல் அறிக்கை இரண்டுநாள் கழித்துதான் செல்லும். அந்த முதல் தகவல் அறிக்கை கிடைத்தவுடன் இன்ஸ்பெக்டர் திரு சுப்ரமணிய பிள்ளை அவர்கள் நான் தயாரித்த முதல் தகவல் அறிக்கை சரியில்லை என்று எனக்கு  ஒரு மெமோ அனுப்பினார்.
                                                                                      அப்போது........

No comments:

Post a Comment