Wednesday 19 October 2011

என் திருமணம்!

அப்போது 

                               அவர் கூப்பிட்ட குரல் கேட்டு  நின்றோம். பக்கத்தில் வந்த அவர் "நான் முத்தம்மாளின் புருஷன் சண்முகம் என்று சொன்னார். "அய்யா அந்த பெண்ணின் அப்பா அம்மாவிடம் சொல்லிவிட்டோம். கட்டாயம் நாளை மறுநாள் வந்துவிடுங்கள்" என்று சொன்னார். நாங்களும் "சரி நாளை மறுநாள் மாலையில் வருகிறோம்" என்று சொல்லிவிட்டு நல்லுருக்கு நடந்தோம். நல்லூர் வந்து மச்சான், அக்காள், மருமக்கள் பன்னீர்செல்வம், கந்தசாமி, சித்திரைக்கனி எல்லோரையும் பார்த்துவிட்டு, பெண் விசயத்தையும் சொல்லி நீங்களும் வந்துவிடுங்கள் என்று சொல்லிவிட்டு ஆத்தூருக்கு நடந்தே வந்து பஸ் ஏறி தூத்துக்குடி வந்தோம் . 

                                 மீளவிட்டான் போய் அம்மாவிடம் பெண் விஷயத்தை சொன்னேன். நாளைமறுநாள் நீங்களும் அண்ணன், அண்ணி, சித்தப்பா, சித்தி எல்லோரும் பார்த்துவிட்டு வாருங்கள். நல்லூரிலிருந்து அக்காவும் மச்சானும் ஆறுமுகநேரிக்கு  வந்துவிடுவார்கள். நான் வரவில்லை" என்று சொன்னேன். "ஏன் நீ பெண்ணை பார்க்கவேண்டாமா? . உனக்கு பெண்ணை பிடித்திருந்தால் தானே மேற்கொண்டு பேசமுடியும்" என்று சொன்னார்கள் . "உங்களுக்கு பிடித்திருந்தால் போதும். பின்பு பேசிமுடிவு செய்யும்போது நான் பார்த்து கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டேன்.  

                 மறுநாள் சித்தப்பாவிடம் போய் நான் பணிக்கு போகவேண்டும். இது பதவி உயர்வு. உடனே பணிக்கு சேரவேண்டும். நீங்கள் பெண்ணை பார்த்து  விட்டு வாருங்கள் " என்று சொன்னேன். உடனே சித்தப்பா "ஏன் ராமந்துரையிலிருந்து ஒரு பெண் என்னை மாமா மாமா என்று லெட்டர் எழுதி இருந்தாளே! அந்த பெண்ணை முடிக்கலாம் என்று சொல்கிறாயா?" என்று சொன்னார் . "அப்படியில்லை. நான் நிச்சயமாக இந்த எழுத்தர் பணியில் நாளைமறுநாள் சேரவேண்டும். இந்த பெண்ணையே முடிவு செய்யுங்கள்" என்று சொல்லிவிட்டு விஜயநாராயணம் புறப்பட்டேன். அவர்கள்      பெண்பார்க்க போன அன்று நான் விஜயநாராயணம் காவல் நிலையம் வந்து பணியில் சேர்ந்தேன்.

                         உதவி ஆய்வாளர் திரு செய்யத் செரிப் அவர்கள், தலைமை காவலர் திரு களக்காடு முகமது , காவலர்கள் முடிவைத்தானேந்தல் சுப்பையா பிள்ளை, தென்காசி சண்முகவேல் ஆசாரி, நாகர்கோயில் ஜான் , மற்றும் அனைவரும் நல்லவர்களாகவே இருந்தார்கள். மறுநாள் வள்ளியூர் வந்து சர்க்கிள் இன்ஸ்பெக்டர் திரு சுப்ரமணிய பிள்ளை அவர்களை மரியாதையின் நிமித்தம் பார்த்து அறிவுரைகள் பெற்று காவல் நிலையம் வந்தேன்.

மீண்டும் பெண் பார்க்க சென்றேன் 

                      ஒரு மாதம் கழித்து இரண்டுநாட்கள் லீவு எடுத்து வூருக்கு போனேன்.  "பெண் பார்க்க போகவேண்டும்" என்று அம்மா சொன்னார்கள் . "உங்களுக்கு பெண் பிடித்திருக்கிறதா?" என்று கேட்டேன்.  அம்மா ரொம்பபிடித்திருக்கிறது. நல்ல பெண்ணாக தெரிகிறது" என்று சொன்னார்கள். "நீயும் பெண்ணை பார்த்துவிட்டால் பேசி முடிவு செய்து விடலாம்" என்றார்கள். "நீங்கள் பார்த்துவிட்டீர்கள். உங்களுக்கு பிடித்திருகிறதா அது போதும்" என்றேன். "உன்னை அவர்களுக்கும், பெண்ணுக்கும் பிடிக்கவேண்டாமா? அதனால் நாளைக்கு எல்லோரும் போய் பார்ப்போம். உன்னை அவர்களுக்கு பிடித்திருந்தால் பேசி முடிவு செய்துவிடலாம்" என்றார்கள்.  மறுநாள் அம்மா, சித்தப்பா, சித்தி, அண்ணன் லக்ஷ்மணன், அண்ணி சமுத்திரக்கனி, அனைவரும் செல்வராஜபுரம்  போனோம். அங்கே  பெண்ணின் அப்பா திரு ஆகாசமுத்து ,  அம்மா திருமதி வெள்ளையம்மாள், பெண்ணின் தாய்மாமன் திரு தோப்பூர் கோபாலகிருஸ்ணன், பெண்ணின் தாத்தா திரு அனந்தையா மற்றும் ஊர் பெரியவர்கள் இருந்தார்கள்.

                   காப்பி பிஸ்கட் எல்லாம் தந்தார்கள். ஆனால் அந்த ஊர் வழக்கப்படி பெண்ணை மாப்பிள்ளையிடம் காட்டமாட்டார்களாம். பெண்ணுக்கு தெரியாமல் மறைவாக நின்றுதான் பர்த்துக்கொள்ளவேண்டுமாம். நானும் பெண்ணை பார்க்கவேண்டுமென்று சொல்லவில்லை. பெண்ணின் தாய்மாமன் திரு கோபாலகிருஷ்ணன் அவர்களுக்கும் சித்தப்பாவுக்கும் முன்பே நல்ல பழக்கம் இருந்திருகிறது. அதனால் அவர் "வேறு எதுவும் பேசவேண்டாம். இதே மாப்பிள்ளை இதே பெண்தான் ஆவணி மாதம் கல்யாணம்" என்று சொல்லிவிட்டார். (பின்னாளில் சித்தப்பா மகன் தர்மலிங்கத்துக்கு திருநெல்வேலி மாவட்டத்தில் பாவூர்சத்திரம் என்ற ஊரில் பிரேமா என்ற பெண்ணை பார்க்க போயிருந்தோம், அப்பொழுதுஅந்த பெண்ணே எல்லோருக்கும் காப்பி கொடுத்தாள். அதுமட்டுமல்ல பெண்ணும் மாப்பிள்ளையும் தனியாக பேசவேண்டுமாம் என்று ஒருவர் சொன்னார்.  உடனே இருவரும் ஒரு தனி அறையில் ஐந்து நிமிஷம் பேசிவிட்டு வந்தார்கள்.  ஊருக்கு திரும்பி வரும்போது எனது மனைவி என் காதோரம் வந்து நீங்களும் இருக்கிறீர்களே என்னை பெண்பார்க்க வந்தபோது பெண்ணை நேரில் பார்க்கவேண்டும் என்று சொல்லவேண்டாமா  எனக்கும் உங்களை அந்த நேரம் பார்க்கவேண்டும் என்ற ஆசை இருக்காதா என்று சொல்லி வெட்கத்துடன்  சிரித்தாள்.) பின்பு ஆறுமுகநேரி பள்ளிவாசல் வந்து பஸ்சில் ஊருக்கு  வந்தோம். நான் எனது பணிக்கு சென்றுவிட்டேன்.  

                ஒருநாள் அம்மாவிடமிருந்து உடனே புறப்பட்டுவா என்று லெட்டர் வந்தது. என்னமோ ஏதோ என்று இரண்டு நாட்கள் லீவு எடுத்து மீளவிட்டான் வந்தேன். அம்மாவிடம் "என்னம்மா அவசரம்" என்றேன். "வேறொன்றுமில்லை அந்த பெண்ணின் பாட்டிஉன்னை பார்க்கவேண்டுமாம். அவளுக்கு பிடித்திருந்தால் தான் திருமணம் நடக்குமாம். நீ அங்கு போய் அந்த பாட்டியை.பார்த்துவிட்டுவா" என்று சொன்னார்கள்.  "சரியம்மா" என்று சொல்லிவிட்டு ஆறுமுகநேரி அந்த பாட்டி வீடிற்கு போனேன். 

                        பாட்டி வீட்டில் இல்லை. பக்கத்து வீட்டில் கொஞ்சம் இருங்கள் இப்போ வந்துவிடுவாள் என்று சொன்னார்கள். சிறிது நேரத்தில் சுமார் எண்பது வயதிருக்கும் பாட்டி வந்தாள். உடனே பக்கத்து வீட்டுக்காரி "பாட்டி!  எங்கே போனீர்கள்? மாப்பிள்ளை ரொம்ப  நேரமா காத்திருக்கிறார்" என்று சொன்னாள்.  அதற்கு அந்த பாட்டி "எனது அம்மாவை ரயிலில் அனுப்பிவிட்டு வந்தேன்" என்று சொன்னவுடன் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இவ்வளவு பெரிய பாட்டிக்கு அம்மா இன்னும் இருக்கிறர்களா! அப்போ அந்த பாட்டிக்கு எத்தனை வயதிருக்கும் என்று நினைத்துக் கொண்டேன்.


என் திருமணம்!

                              திருமணதிற்கு முதல் நாள் இரவு நங்கள் எல்ல்லோரும் ஆறுமுகநேரி பெண் வீட்டிற்கு வந்துவிட்டோம். அப்பொழுது எனது தாய்மாமன் திரு சன்னாசி அவர்கள் மகள் பஞ்சவர்ணத்திற்கு வயிற்று வலி என்று சொன்னாள். உடனே "நான் போய் பெண்வீட்டில் சுக்குகாப்பியோ அல்லது வெந்நீரோ வங்கி வருகிறேன்" என்று சொல்லிவிட்டு பெண்வீட்டில் போய் மப்பிள்ளைக்கு வெந்நீர் வேண்டுமாம் கொடுங்கள்.என்று கேட்டேன். 

                    இப்பொழுதாவது பெண்ணை பார்த்துவிடலாம் என்று நினைத்தேன். கையில் வெந்நீருடன் வந்த பெண் மறைவாக நின்று கொண்டு "நீங்கள் யார்?" என்று கேட்டாள். நான் மாப்பிள்ளையின் தம்பி என்று சொன்னேன்.உடனே அவள் நான் பொய் சொன்னதை தெரிந்துகொண்டாள். ஏனன்றால் அவள் அன்று  பெண் பார்க்கவந்தபோது என்னை கதவு இடைவெளியில் பார்த்திருக்கிறாள். 
அதனால் அவள் வெந்நீர் கொண்டுவந்த செம்பை திண்ணையில் வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டாள்.  அப்பொழுதும் பெண்ணை பார்க்க முடியவில்லை.




                       29.8.1965  எங்கள் திருமணம் மிக சிறப்பாக ஆறுமுகநேரியில்  பெண்ணின் வீட்டில் நடந்தது.  காலை ஆறுமணிக்கு குளித்துவிட்டு மாப்பிள்ளைக்கு ரெடியானேன்.நான் மணமேடையில் அமர்திருந்தேன். பதினைந்து நிமிடங்கள் ஆகியும் பெண் மணமேடைக்கு வரவில்லை. பெண்ணின் ஒரே தம்பி ஏழு வயது கனகராஜை விளையாட்டாக அழைத்து "ஏய்! பெண்ணை சீக்கிரம் வரசொல்!" என்று சொன்னேன். அந்த சிறுவனும் வீட்டிற்குள் போயி அக்காளை சீக்கிரம் அழைத்து வாருங்கள்.என்று சொன்னான். மணமேடை முன்பு இருந்த எல்லோரும் சிரித்தார்கள். எனக்கு வெட்கமாக இருந்தது. நான் எனது கழுத்திலுள்ள மாலைலிருது உதிர்ந்த ரோஜா இதழ்களை எடுத்து தின்றுகொண்டிருந்தேன். அதைப்பார்த்த பெண்ணின் தோழி ஒருத்தி "ஏய்! சீக்கிரம் வாடி! மாப்பிள்ளை ரோஜா மாலையை முழுதும் தின்று விடுவார் போலிருக்கிறது "என்று சொல்லிக்கொண்டே பெண்ணை அழைத்து கொண்டு வந்தார்கள். அப்பொழுது தான் நான் பெண்ணின் முகத்தை பார்த்தேன். பதினாறு வயதே நிரம்பிய பால் வடியும் முகம். 

                       பெண்ணின் தாய்மாமன் திரு பு. முருகபெருமாள், திரு ராமசந்திரன், திரு கோபாலகிருஷ்ணன், திரு நடராஜன், திரு மோட்டார் என்ற நடராஜன், காயல்பட்டணம் அருணாச்சலபுரம் திரு செந்திவேல் அவர்கள் மற்றும் எல்லா உறவினர்களும் வந்திருந்தார்கள். எல்லா உறவுகள், ஊர் பொதுமக்கள் முன்பாக வெகு சிறப்பாக திருமணம் நடந்தது. கெட்டிமேளம் கொட்ட பெண்களின் குலவை சத்தத்தில் தாலி கட்டினேன். பெண்ணின் அப்பா வந்து பெண்ணின் கையைபிடித்து என் கையில் கொடுத்தார். ஒரு குழந்தையின் கைப்போல இருந்தது. பின்பு ஒரு ஜீப்பில் எங்களை ஊர்வலமாக அழைத்து சென்றார்கள்.  ஒரு உறவினர் பெண்ணின் சித்தி  வீட்டு பக்கம் ஊர்வலம் போகும்போது பால் பழம் கொடுத்தார்கள்.  பெண்ணுக்கு பால் என்றாலே பிடிக்காதாம். அதனால் முழுவதும் நானே குடித்தேன்.  அன்று மாலை எங்கள் வீட்டிற்கு மீளவிட்டான் போனோம். வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

வரவேற்பு நிகழ்ச்சி!

                            இரவு எட்டு மணிக்கு தூத்துக்குடி சித்தப்பா திரு ராமசாமி அவர்கள் வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.  வளர்மதி இசைக்குழுவினரின் இன்னிசை விருந்து நடந்தது. அந்த நிகழ்ச்சியில் மற்றொரு சித்தப்பா திரு தங்கராஜ் அவர்களும் பாடினார்கள். பெரிய சித்தப்பா திரு பாண்டியன் அவர்களும் சித்தி பிரமு, சித்தி ராமு எல்லோரும் கலந்து கொண்டு எங்களை வாழ்த்தினார்கள்.  மறுநாள் ஆறுமுகநேரி சென்றோம்.

                          திருமணத்திற்காக  மூன்று நாட்கள் லீவுதான் கொடுத்தார்கள். லீவு முடிந்து. விஜயநாராயணம் சென்றோம் . பெண் வீட்டார் பெண்ணின் அப்பா அம்மா, பெண்ணின் சித்தப்பா திரு புலமாடன் சித்தி லிங்கம்மாள் ஆகியோர் சீர்வரிசை  கொண்டுவந்தார்கள். எங்கள் வீட்டிலிருந்து அம்மா, பெரிய அக்கா ஷன்முககனி, மச்சான் திரு ப.முனியசாமி,  தங்கை பாப்பா, தங்கை மாப்பிள்ளை திரு சு. ஜெயராமன், சித்தப்பா திரு எம்.ராமசாமி, சித்தி ராமு ஆகியோர் வந்தோம். விஜயனாராயனத்தில் காவலர்கள் எல்லோரும் வீட்டிற்கு வந்து பரிசுகளை தந்தார்கள். காவல்நிலையத்தில் புதிய உதவி ஆய்வாளர் திரு கிருஸ்த்துதாஸ் தலைமையில் புதிய தலைமை காவலர் திரு ராஜா மற்றும் காவலர்கள் கலந்துகொண்டு வாழ்த்தி பரிசுகள் வழங்கினார்கள்.  மறுநாளே எங்களுடன் அம்மாவை  மட்டும் வைத்து விட்டு உறவினர்கள்  எல்லோரும் ஊருக்கு புறப்பட்டார்கள். 

                                                                                அப்போது...

1 comment:

  1. படிக்க மிகவும் நன்றாக இருக்கிறது மாமா, ஆவலுடன் காத்திருக்கிறோம்....

    ReplyDelete