Saturday 12 November 2011

மகன் முத்துக்குமரன் எழுந்தான்! !

அப்போது.....
                       
                         சிறிது நேரத்தில் என் மனைவி அவளுடைய சொந்த பந்தங்களுடன் வந்தாள். சில காரணங்களினால் தாமதமானதை பயத்துடன் கூறினாள் . அதுவும் சரிதான் என்று சமாதானம் ஆகினேன். 

                      காரியங்கள் முடிந்து சில நாட்களில் அண்ணன் லட்சுமணன் வீட்டில் அம்மா இருந்துகொண்டார்கள். நான் மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு அம்பாசமுத்திரம் வந்தேன். கூடவே என் மாமியாரும் வந்தார்கள்.  அம்பாசமுத்திரம் பெரியகுளம் தெருவில் சிவன் ஏட்டையா வீட்டில் வாடகைக்கு இருந்தோம். 

காவல் நிலையத்தில் .......

             சில மாதங்களில் ஆய்வாளர் திரு காசி அருணாசலம் அவர்கள் மாற்றப்பட்டு திரு விஜயராமச்சந்திரன் அவர்கள் ஆய்வாளராக பொறுப்பேற்றார்.அப்பொழுது அம்பாசமுத்திரம் துணை கண்காணிப்பாளராக  இருந்த திரு கே.குருவையா அவர்களுக்கும் ஆய்வாளர் திரு விஜயராமசந்திரன் அவர்களுக்குமிடையே நல்ல அபிப்ராயம் உண்டு. இந்த  ஆய்வாளரிடம்  தான் நான் நல்ல பல விசயங்களை தெரிந்து கொண்டேன். அதிகாரிகளிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும், யார் யாரிடம்  எப்படி பேசவேண்டும் என்பதுபோன்ற நிறைய விசயங்களை கற்றுக்கொடுத்தார். சில தினங்களில் அவர்கள் குடும்பமும் வந்துவிட்டது. கீழரதவீதியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார்கள். அவர்கள் மனைவியின் சொந்தஊர் திருநெல்வேலி. அங்கு திரு சிவசுப்ரமணி நாடார்.Ex.M.L.C.அவர்கள் மகள். இவர்களுக்கு ஒரு மகளும் இரண்டு மகன்களும் இருந்தார்கள். எல்லோரும் மிகவும் நல்லவர்கள். இவர் ஆய்வாளராக இருந்தபோது சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள் இருந்தது.  காரணம்  இவருடைய அறிவுரையின்படி சர்க்கிளிலுள்ள எல்லா உதவி ஆய்வாளர்களும் மிகவும் திறமையாக பணியாற்றி குற்றங்கள் அதிகம் நடக்காமல் பார்த்துக்கொண்டார்கள்.

கைதியின் மரணம் !

                           ஒரு தடவை விக்கிரமசிங்கபுரத்தில் கைதி ஒருவன் தற்கொலை செய்துகொண்டதாக விக்கிரமசிங்கபுரம் உதவி ஆயிவாளர் திரு குருசுமுத்து அவர்கள் காலையிலேயே ஆய்வாளர் திரு விஜயரமசந்திரன் அவர்களை பார்த்து மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கேட்டார். அப்பொழுது அவருக்கு சொன்ன அந்த அறிவுரைகள் பின்னாளில் நான் காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் ஆய்வாளராக இருந்தபோது எனக்கு மிகவும் உதவியாகவும் பொதுமக்களிடம் நற்பெயரையும் பெற்றுத்தந்தது.மனிதன் செல்வம், செல்வம் என்று ஆசைபடுவது இயற்கைதான். ஏனென்றால் ஒருவனை செல்வத்தை வைத்துத்தான் எடைபோடுகிறார்கள்.மனிதன் செல்வத்தை சேர்த்து எவ்வளவு உச்சிக்குபோனாலும் அவன் அங்கேயே தங்கிவிடமுடியாது.

                         ஆய்வாளர் திரு விஜயரமசந்திரன் அவர்கள் எல்லோரிடமும் ஒரே மாதிரியாக அன்பாகவே நடந்துகொள்வார். தனக்கு கீழ் பணிபுரியும் அனைவருக்கும் அறிவுரைகள் வழங்குவதில் சற்று கடுமையாகவும் இருப்பார்.  காவல்நிலையங்களுக்கு ஆய்வு செய்ய போகும்போது என்னையும் கூடவே அழைத்து செல்வார்.அவரது ஆய்வு அறிக்கையை நான் குறிப்பெடுத்து கொள்வேன்.

மேற்படிப்பு!

                          எட்டாவது வகுப்பே படித்திருந்த நான் மேற்கொண்டு படித்து எப்படியாவது ஒரு பட்டம் வாங்கவேண்டும் என்ற ஆவல் என் அடிமனதில் துளிர்விட ஆரம்பித்தது. அந்த காலகட்டத்தில் காவலர் வேலைக்கு எட்டாவது வகுப்பு மட்டும் படித்திருந்தாலே போதும். அனால் அவரது திறமையினால் பதவி உயர்வு கிடைக்கும். அம்பாசமுத்திரத்தில் ஒரு தனியார் பயிற்சி கல்லூரியில் (Tutorial college) சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன். மேலும்  ஆய்வாளரின் அறிவுரையின்படி தட்டச்சு பயிற்சியிலும் (டிபே writting) சேர்ந்தேன். ஆனால்  நேரம்தான் ஒத்துவரவில்லை. அதனால் அந்த பயிற்சி கல்லூரியில் நான் எனக்கு வசதியான நேரத்தில் எப்பொழுது வந்தாலும் ஒரு மணி நேரம் பயிற்சி பெற அனுமதிக்க வேண்டும் என்று அந்த பயிற்சி கல்லூரி நடத்தும் நிறுவனரிடம் அனுமதி பெற்றேன். அதன்படி மிகவும் சிரத்தையோடும், அக்கறையோடும் பயின்று வந்தேன். 

மகன் முத்துக்குமரன் விழுந்தான்!   
      
                   ஒருநாள் எனது ஒன்றரை  வயது மகன் முத்துக்குமரனை சைக்கிள் பின்சீட்டில் உட்காரவைத்து நான் சைக்கிளை தள்ளினேன். எனது மகன் பின்சீட்டிலிருந்து மல்லாக்க கீழே விழுந்தான். கீழே கல்பாறை அதன்மேல் விழுந்தவுடன் நான் கதறிவிட்டேன். ஐயோ என்று அலறி சைக்கிளை அப்படியே கீழே போட்டுவிட்டு குழந்தையை தூக்கினேன். "தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை கீழே விழுந்து விட்டானா?" என்று  என் மனைவியும் வீட்டிக்குள்ளிருந்து ஓடிவந்தாள். என் மகனை தூக்கி தலையில் தடவி பார்த்தேன். மனது முழுதும் வேதனை. துக்கம் தொண்டையை அடைத்தது. 
                                                                                                               அப்போது......      

No comments:

Post a Comment