Tuesday 8 November 2011

மகன் முத்துக்குமரன் பிறந்தான்!

அப்போது....  

                            பெயர் வைக்க வேண்டுமென்று சொன்னவுடன்     இந்திரா காந்தி என்று பெயர் வைத்தோம். மறுநாள் அம்பாசமுத்திரம் வந்ததும் எனக்கு சற்று உடம்புக்கு  சரியில்லை மனைவியிடம் சொன்னால் அன்று முழுவதும் சாப்பிட மாட்டாள் , ஆகையால் நானே சித்ரா ஸ்டூடியோ  விற்கு எதிரில் இருக்கும் டாக்டர் ரகுபதியிடம் சென்றேன். அவர் மிகவும் கைராசிக்காரர். ஒருவேளை மருந்து கொடுத்தாலே வியாதி குணமாகிவிடும். ( பின்னாளில் அவருடைய பேத்தியே எனது மூன்றாவது மருமகளாக வரக்கூடும் என்று நான் எதிர்பார்க்கவில்லை). 

                         இரண்டாவதாக மனைவி கருவுற்றாள். ஆறாவது மாதம் அவள் அம்மா வந்து, முதல் குழந்தை அப்படியாகிவிட்டது (குறைப்பிரசவம்) ஆகையால் இப்பொழுது நான் ஊருக்கு மகளை கூட்டிசெல்கிறேன் என்று சொன்னார்கள். நானும் சரி என்று சொல்லி நானே கூட்டிச்சென்று ஆறுமுகநேரியில் கொண்டு விட்டுவந்தேன்.

பதவி இறக்கம் 

                               ஆய்வாளர் திரு வேலப்பன் அவர்கள் மாற்றப்பட்டு திரு காசி அருணாசலம் அம்பாசமுத்திரம் வந்தார்.ரொம்பவும் கறாராக இருப்பார். ஆனால் நல்லவர். இரண்டு மாதங்கள் கழித்து எனக்கு பதவி இறக்கம் வந்தது. பதினைந்து மாதங்கள் தலைமைகாவலராக பணிபுரிந்துள்ளேன். திடிரென்று வந்த இந்த பதவி இறக்கம் என்னை ரொம்பவே பாதித்தது (for want of vacancy). அதாவது உதவி ஆய்வாளராக ஆனவர் தலைமை காவலராகவும், தலைமை காவலராக ஆனவர் எழுத்தராகவும் பதவி இறக்கம் வருவது காவல் துறையில் அப்போதைக்கப்போது நடைபெறுவது சகஜமானதுதான். 

                   அப்போது ஒருதடவை ஒரு வழக்கில் எதிரியை தேடி திசையன்விளை என்ற ஊருக்கு போனேன்.அப்போது ஆய்வாளர் திரு காசி அருணாசலம் அவர்கள் சொந்த ஊரிலிருக்கும் அவர்கள் அம்மா அப்பாவை பார்த்து விட்டு வரும்படி சொன்னார்கள். அதன்படி திசையன்விளை வந்து தேடிவந்த எதிரியைப்பற்றி விசாரித்தும் நல்ல தகவல் கொடுப்பவர்களை நியமித்தேன். ஆய்வாளர் திரு காசி அருணாசலம் அவர்கள் சொந்தஊர் திசையன்விளை அருகிலுள்ள ராமன்குடி இருப்பு. திசையன்விளையிலிருந்து சுமார் மூன்று கிலோமிட்டேர் தூரம் உள்ளது. ஆனால் திசையன் விளையிலேயே  இரவாகிவிட்து .    

என்ன வர்ணம்?

                                ஒரு கடைசி பஸ்ஸில் ராமன்குடி இருப்புக்கு வந்தேன். அங்கே அவர்கள் வீட்டை விசாரித்து கண்டுபிடித்தேன். ஆய்வாளர் கொடுத்தனுப்பிய பொருட்களை கொடுத்துவிட்டு "நான் புறப்புடுகிறேன்" என்று சொன்னேன். அனால் இப்பொழுது "பஸ் கிடையாதே இனி காலையில்தான் திருசெந்தூர் பஸ் உண்டு.ஆகையால் இங்கு தங்கிவிட்டு காலையில் போங்கள்"என்று சொன்னார்கள். சாப்பிட சொன்னர்கள்.சாப்பிட்டேன். வெளித்திண்ணையில் படுத்துக்கொள்கிறேன் என்று சொன்னேன். அவர்கள் விட்டிற்குள்ளே கட்டிலில் படுக்கசொல்லி ஒரு போர்வையை தந்தார்கள்.அவர்களுக்கோ எழுபது வயதிருக்கும்.அவர்களால் கீழே தரையில் படுக்க முடியாது என்பதால் "நான் வெளித்திண்ணையில் படுத்துகொள்கிறேன்" என்று திண்ணைக்கு வந்தேன். அவர்கள் விடவில்லை. "உள்ளே கட்டிலில் படுத்துக்கொள்ளுங்கள்" என்று பிடிவாதமாக சொன்னதால் சரிஎன்று  உள்ளே போய் போர்வையை கட்டிலில் விரித்தேன். அப்பொழுது அந்த அம்மா "நீங்கள் என்ன வர்ணம்" என்று கேட்டார்கள். நான் போர்வையைத்தான் என்ன கலர் என்று கேட்கிறார்கள் என்று நினைத்து "பச்சை" என்று சொன்னேன். 

                                 அவர்கள் இருவரும் சிரித்தார்கள். "சரி படுத்துக்கொள்ளுங்கள்" என்றார்கள். அவர்கள் ரொம்பவும் மரியாதையாகவும், அன்பாகவும் நடத்தியது எனக்கு ரொம்பவும் சந்தோசமாக இருந்தது. அவர்கள் ரொம்பவும் நல்லவர்கள். காலையில் எழுந்து முதல் பஸ்ஸுக்கே திருசெந்தூர் சென்று அங்கிருந்து ஆறுமுகநேரி சென்றேன்.  ஆனால் சில வருடங்கள்  கழித்துதான் அவர்கள் கேட்ட வர்ணத்தின் அர்த்தம் புரிந்தது. 

இரண்டாவது பிரசவம்!

                        ஆறுமுகநேரியில் மனைவியை பார்த்துவிட்டு அன்று அங்கே தங்கினேன். அப்பொழுது என் மனைவி "மருத்துவச்சியம்மா நேற்று வந்தார்கள் இன்னும் ஒரு வாரத்தில் பேறுகாலம்  இருக்கும் என்று சொன்னார்கள் நீங்கள் லீவு எடுத்துக்கொண்டு வாருங்கள்" என்றாள். சரியன்று மறுநாள் காலையில் புறப்பட்டு அம்பாசமுத்திரம் வந்தேன். ஆய்வாளரை சந்தித்து அவர்கள் அம்மா அப்பா நலமுடன் இருப்பதாக சொன்னேன். "மேலும் மனைவிக்கு பேறுகாலமாக  இருப்பதால் ஒரு வாரம் லீவு வேண்டும்" என்று கேட்டேன். "சரி சென்றுவாருங்கள்" என்று சொல்லிவிட்டார். காவல்நிலையத்திற்கு  வந்து லீவு லெட்டர் கொடுத்துவிட்டு ஆறுமுகனேரிக்கு வந்தேன்.

                      ஆறுமுகநேரியில் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு தூத்துக்குடிக்கு சென்றேன்.அங்கே சித்தப்பா, சித்தி எல்லோரிடமும் சொல்லிவிட்டு மீளவிட்டான் போய் அம்மாவிடமும், அண்ணனிடமும் சொல்லிவிட்டு அன்று மீளவிட்டானில் தங்கினேன். தம்பி ராமலிங்கம் ரயில்வேயில் கலாசியாக  வேலைபார்த்தான். மிளவிட்டானிலிருந்து மற்ற பையன்களும் கூட வேலை செய்வதால் அவர்களுடன் ரயில்வே ஸ்டேசனிலேயே தங்கிகொள்வான். மறுநாள் புறப்பட்டு ஆறுமுகநேரி வந்தேன்.
   
மகன் முத்துக்குமரன் பிறந்தான்!

                                   8.11.1967 காலையில் வீட்டிலேயே மனைவிக்கு ஆண் குழந்தை (முத்துகுமரன்) பிறந்தது. சுகப்பிரசவம். மருத்துவச்சி அம்மா, "குழந்தை பிறந்தது முதல் அழவில்லை" ன்று சொன்னார்கள். உடனே நான் "டாக்டரை கூட்டிவருகிறேன்" என்று சொன்னேன். "வேண்டாம் சரியாகிவிடும் சற்று நேரம் கழித்து குழந்தை அழும்" என்று சொன்னார்கள். ஏற்கனவே முதல் குழந்தையும் இறந்துவிட்டதால்  எனக்கு மனம் கேட்கவில்லை.
                                                                                                    அப்போது........     

No comments:

Post a Comment