Friday 11 November 2011

மகன் முத்துகுமரன் பிழைத்தான்!

அப்போது .......... 

                      சிறிது நேரம் கழித்து பேயன்விளை போய் டாக்டர் அய்யாதுரை என்பவரை கூட்டிவந்தேன். அவர் குழந்தையின் காதைப்பிடித்து தூக்கினார். அப்பொழுதும் குழந்தை அழவில்லை. ஆ....என்று வாயை திறந்தான். ஆனால் அப்பொழுதும் குழந்தை அழவில்லை. உடனே ஒரு ஊசி போட்டார். டாக்டரிடம் குழந்தை எப்படி இருக்கிறது என்று கேட்டேன். நாளைக்கு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு போய் விட்டார். மருத்துவச்சி அம்மாவோ "பயப்படவேண்டாம். டாக்டர் என்ன டாக்டர் நான் சொல்கிறேன். இன்று இரவே குழந்தை அழுவான் பால் குடிப்பான். நான் இதுபோல நூறு குழந்தைகளை பார்த்திருக்கிறேன். பயப்படவேண்டாம்" என்று சொன்னார்கள்.

அழுது சிரிக்கவைத்தான்! 

                          அது போலவே குழந்தை இரவு நன்றாக அழுதான். பாலும் குடிக்க ஆரம்பித்தான்.அப்போது தான் எல்லோருடைய முகத்திலும் சிரிப்பை பார்க்க முடிந்தது. எங்கள் எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம். மறுநாளே தூத்துக்குடி சென்று சித்தப்பா, சித்தி, மீளவிட்டானில் அம்மா,  சின்னக்கா, அண்ணன்கள் மற்றும் எல்லோரிடமும் குழந்தை பிறந்த விஷயத்தை  சொல்லிவிட்டு நல்லூருக்கு போய் பெரியக்கா, மச்சான் திரு முனியசாமி அவர்களிடமும் சொல்லிவிட்டு ஆறுமுகநேரி வந்தேன். விருதுநகருக்கு தங்கை பாப்பாவுக்கும் குழந்தை பிறந்த செய்தியை லெட்டர் எழுதினேன். அனைவரும் மறுநாளே வந்து குழந்தையை பார்த்துவிட்டு ஆசீர்வாதம் செய்து சென்றார்கள். ஒரு வாரம் குழந்தையுடன் நாட்கள் எப்படி சென்றதென்றே தெரியவில்லை. லீவு முடிந்து அம்பாசமுத்திரம் வந்தேன்.

சர்க்கிள் ஆபிஸ் எழுத்தர்!

                           வந்தஉடன் என்னை சர்க்கிள் ஆபீசில் எழுத்தராக இருக்கும்படி ஆய்வாளர்  சொன்னார். அதன்படி எழுத்தராக பணிபுரிந்தேன். ஏற்கனவே சர்க்கிள்  எழுத்தராக இன்னொரு ராமசாமி நியமிக்கப்படிருந்தார். அவருக்கு உதவியாக தலைமை காவலர் திரு தில்லை சிதம்பரம் அவர்களுடன் நானும் சேர்ந்து வேலை பார்தேன். இந்த சர்க்கிளுக்கு அம்பாசமுத்திரம் , விக்கிரமசிங்கபுரம், பாப்பாகுடி, வீரவநல்லூர், சேரன்மகாதேவி ஆகிய காவல் நிலையங்களும்  மாஞ்சோலை   மணிமுத்தாறு ஆகிய புறக்காவல் நிலையங்களும் சேர்ந்தது. 

                               அம்பாசமுத்திர காவல் நிலையத்திற்கு திரு குளத்து அய்யர் மாற்றப்பட்டு திரு குமாரவேல் அவர்கள் உதவி ஆய்வாளராக இருந்தார். விக்கிரமசிங்கபுரத்திற்கு திரு குருசுமுத்து அவர்களும் பாப்பாகுடிக்கு திரு பால்தேவதாஸ் அவர்களும் வீரவனல்லூருக்கு திரு முகமது காசிம் அவர்களும் சேரன்மகாதேவிக்கு திரு சுந்தரம்பிள்ளை அவர்களும் உதவி ஆய்வாளராக இருந்தார்கள். மாஞ்சோலை புறக்காவல் நிலையத்திற்கு திரு முருகையா அவர்களும் மணிமுத்தாறு புறக்காவல் நிலையத்திற்கு திரு ராஜாராம் நாயுடு அவர்களும் தலைமை காவலர்களாக இருந்தார்கள். 

                                 இவர்கள் அனைவரும் அவர்கள் காவல் நிலைய எழுத்தர்களும் ஒவ்வொரு  வாரமும் நடக்கும் வாராந்திர கூட்டத்திற்கு சர்க்கிள் ஆபீஸ் வரவேண்டும். அப்பொழுது குற்ற வழக்குகளை பற்றியும் கண்டுபிடிப்பதில் உள்ள முன்னேற்றம் பற்றியும் ஆராயப்படும். 

அக்கா இறந்தார்!

                              எனது மகன் முத்துகுமரன் பிறந்த மூன்றாவது மாதம் நல்லூரில் எனது பெரிய அக்கா திடீரென இறந்து விட்டார்கள் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். பன்னீர்செல்வம் - பதினைந்து வயது . சித்திரைக்கனி - ஏழு வயது . கந்தசாமி - ஐந்து வயது. உடனேயே லீவு சொல்லிவிட்டு நல்லூருக்கு சென்றேன். நான் நல்லூருக்கு வந்த பிறகும் கூட பக்கத்து ஊரில் இருந்த என் மனைவியும் குழந்தையும் அங்கு வந்து சேரவில்லை. எனக்கு கோபமாகவும் குழந்தைக்கு உடம்பு சரியில்லையோ என்று கவலையாகவும் இருந்தது.

                                                                                                           அப்போது.........

No comments:

Post a Comment